Thursday, September 3, 2009

ஊழல்: கிளைகளை வெட்டினால் போதுமா?

தேர்தல்கள் மூலம் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் அரசில் ஆள்வோருக்கும், அதிகாரிகளுக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து வருபவை ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும் என்றால் அது மிகையல்ல.

ஊழல்வாதிகள் மீது துணிச்சலான நடவடிக்கை எடுக்க இயலாத, பலகீனமான தலைமையை நாடு பெற்றிருப்பது துரதிருஷ்டவசமானது.

இந்திய ஜனநாயகத்தை செல்லரிக்க வைத்துக் கொண்டிருப்பதே ஊழல் அரசியல்வாதிகள்தான்.

வலுவற்ற சட்டங்களால் 94 சதவீதம் பேர், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பி விடுவதாகக் கூறப்படுகிறது.

சட்டம் என்பது சாமானியர்களைத் தண்டிக்க மட்டும் அல்ல என்பதை நிரூபிக்கும் பொறுப்பு நீதித்துறைக்கு உண்டு.

"பொறியில் மாட்டிக் கொண்ட எலி, தப்பிக்கும் வாய்ப்பை கடைசிவரை நழுவ விடாது...'

அதேபோல, லட்சக்கணக்கில் ஊழல்செய்து மாட்டிக் கொள்ளும் அதிகாரிகள், நெஞ்சுவலியை (?) காரணம் காட்டி ஜாமீனில் வெளிவருகின்றனர்.

அதன்பிறகு, அவர்களது முதல் பணி, ஊழல் வழக்கிலிருந்து விடுபட என்னென்ன வழிகள் உண்டோ அத்தனை சாத்தியக் கூறுகளையும் கையாள்வது.

பதவிக்காலத்தில் அரசியல்வாதிகளுக்குச் செல்லப் பிள்ளைகளாக நடந்துகொண்டு, முறைகேடுகளுக்குத் துணைபோகும் அதிகாரிகள், ஊழல் வழக்குகளில் சிக்கினாலும், சிறிது காலத்தில், அதிலிருந்து லாவகமாக வெளிவந்து, மீண்டும் பதவிகளைப் பெற்றுவிடுவதை நடுநிலையாளர்கள் கவலையோடு பார்க்கின்றனர்.

உதாரணமாக மணல் குவாரிகளில் நடக்கும் முறைகேடுகளைச் சொல்லலாம்.

ஆறுகளில் 3 அடிக்கு கீழே, மணல் அள்ளக்கூடாது என்பது விதி. அதனை வலியுறுத்தி, குவாரிகளில் ஒப்புக்குப் பதாகை வைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், குவாரிகளில் 20 அடிக்கும் குறையாமல் மணல் அள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டால், இயந்திரம் மூலம் மணல் அள்ளப்படுவதால் எத்தனை அடிகள் அள்ளுகின்றனர் என்பதைக் கணக்கிட இயலவில்லை எனச் சாதாரணமாக பதில் அளிக்கின்றனராம்.

3 அடி ஆழத்துக்கும், 20 அடி ஆழத்துக்கும் வித்தியாசம் தெரியாதா?

தற்போது ஊழல் நோய் முற்றி, அனைத்துத் துறைகளிலும் புரையோடி விட்டதால், 50 ஆண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருந்த அரசுகள், திடீரென விழித்துக் கொண்டு ஊழலை ஒழித்து, வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்கப் போவதாக அறிவித்து, தகவல்பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தன.

ஆனால், அச் சட்டத்தின் பல ஷரத்துகள் சாமானிய மனிதர்களைச் சென்றடையும் வகையில், முழுமையாக இல்லை என்பதே நிதர்சன உண்மை.

ஊழலுக்கு எதிரான சட்டங்கள் பலமாக இல்லாததே, அதில் ஊறித் திளைப்போருக்கு சாதகமாக உள்ளது என்கிற அடிப்படை உண்மை கூடவா அரசுக்குத் தெரியாமல் போனது!

முறைகேடுகளுக்குத் துணைபோகாத, சிபாரிசுகளை ஏற்காத நேர்மையான அதிகாரிகளின் துறைகளை மாற்றிப் பந்தாடுவதும், லாயக்கற்றவர்களை, தமக்கு வேண்டியவர்களை உயர் பதவிகளில் அமரவைத்து, காரியம் சாதித்துக் கொள்வதும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கைவந்த கலையாகி விட்டது.

திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, வேறெங்கும் பதுக்கப்படாமல், முழுமையாகச் செலவிட்டாலே போதும் நாடு வல்லரசாகும்... சுவிஸ் வங்கிகள் திவாலாகும்!

ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா வெகுவேகமாக பின்னேறிச் செல்வதற்கு முக்கியக் காரணம், கூட்டுவைத்துக் கொள்ளை அடிக்கும் மனோபாவம்தான்.

தேர்தலின்போது அணிமாறும் அரசியல் கூட்டணியை விட, இக்கூட்டணி ஆபத்தானது.

சில நேர்மையான அலுவலர்களையும் டிரான்ஸ்பர், டம்மி போஸ்ட் என இக்கூட்டணி நோகடிக்கச் செய்கிறது.

ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில், இந்தியா தற்போது 74-வது இடத்தில் உள்ளதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

ஊழலின் வேர்களை அழிக்காமல், கிளைகளை மட்டும் வெட்டிக் கொண்டே இருந்தால், இப் பட்டியலில் இந்தியா கடைசி இடத்தைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

கட்டுரையாளர் : ப.செ. சங்கரநாராயணன்
நன்றி : தினமணி

No comments: