Wednesday, September 1, 2010

மறுபக்கம்...

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் நல்லதொரு தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தின் உச்சகட்டம்தான் தர்மபுரி பஸ் எரிப்புச் சம்பவம்.

கோவை விவசாயப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வுச் சுற்றுலாவுக்காகச் சென்றிருந்த பஸ் 2000-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி எரிக்கப்பட்ட சம்பவம் இன்றைக்கும் நமது மனதில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகிறது. 44 சக மாணவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்த கோகிலாவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய மூன்று பேரும் வெறிபிடித்த கும்பலுடைய ஆத்திரத்தின் விளைவால் எரிந்து சாம்பலான கொடூரமான சம்பவம் தமிழக சரித்திரத்திலேயே ஒரு கரும்புள்ளி.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, பி.எஸ். சௌஹான் இருவரும் எழுதியிருக்கும் தீர்ப்பு வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி பாராட்டுக்குரியது. நமது இந்திய சமுதாயம் எப்படி மரத்துப்போன இதயங்களுக்குச் சொந்தமாகிவிட்டிருக்கிறது என்பதை அந்தத் தீர்ப்பு வருத்தத்துடன் பதிவு செய்கிறது. பொதுமக்கள், கடைக்காரர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் என்று பல நூறு பேர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்களேதவிர, அந்த அப்பாவி மாணவிகளை எரியும் பஸ்ஸிலிருந்து மீட்கவோ வெறிபிடித்த கும்பலை அடித்து விரட்டவோ ஒருவர்கூட தங்களது சுட்டுவிரலை அசைக்கவில்லை என்கிற இரக்கமற்ற தன்மையைத் தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் பதிவு செய்திருக்கிறார்கள்.

2007-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி சேலத்திலுள்ள விசாரணை நீதிமன்றம் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று முக்கிய குற்றவாளிகளுக்கும் மரண தண்டனையும் ஏனைய 25 பேருக்குக் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தியதுபோலவே, இப்போது உச்ச நீதிமன்றமும் அந்தத் தீர்ப்பை உறுதிப்படுத்தியிருப்பதன்மூலம் இந்தியாவில் இன்னும் நீதி செத்துவிடவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது என்பதாலேயே அடிப்படைப் பிரச்னை முடிந்துவிட்டதாகக் கருத முடியாது. இந்திய அரசியலில் காணப்படும் சில அநாகரிகமான போக்குக்கும் முடிவு கட்டப்படுமானால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கும். இந்தப் பிரச்னையில் அதிமுகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதில் மகிழ்ச்சியடையும் ஏனைய கட்சிகளின் போக்குமட்டும் பாராட்டக்கூடியதாக இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்பதுதான் நிஜம்.

"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்கிற அறிஞர் அண்ணாவின் கோஷத்தைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகள் அனைத்துமே தர்மபுரி பஸ் எரிப்புச் சம்பவத்தைப்போல, தொண்டர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு தங்களைப் பலப்படுத்திக் கொள்ளும் கட்சிகளாகத்தான் இருக்கின்றன.

தருமபுரியில் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. ஏனைய நிகழ்வுகளில் பொதுச்சொத்துகளுக்குச் சேதமும் பொதுமக்களுக்குத் துன்பமும் ஏற்படுத்தப்பட்டது. இதுதான் வேறுபாடு.

தொண்டர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு வெறிபிடித்த கும்பலாக்குவதன் மூலம் தங்களது தலைமையை வலுப்படுத்திக் கொள்ளலாம் என்கிற கருத்து பரவலாகவே நமது அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இல்லையென்றால், தொண்டர்கள் தீக்குளிப்பதை ஊக்குவிக்கும் விதத்தில் தீக்குளிப்போரின் குடும்பத்தினருக்கு லட்சக்கணக்கில் உதவித்தொகை அளிக்க இந்தக் கட்சிகள் முன்வருவானேன்?

உணர்ச்சிவசப்படுபவர்களையோ, தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் கோழைகளையோ ஆதரிக்க முடியாது, கூடாது என்று ஏதாவது ஒரு தமிழக அரசியல் கட்சித் தலைவர் சொன்னதுண்டா? சொல்ல மாட்டார்கள். பல லட்சம் ரூபாய் தீக்குளிப்போரின் குடும்பத்தினருக்கு உதவித்தொகை அளித்து, தனக்காக இத்தனை பேர் உயிர்ப்பலி கொடுத்தனர் என்று அதையே அரசியல் ஆதாயமாக்க விரும்புபவர்கள்தான் பெருவாரியான தமிழக அரசியல் தலைவர்கள்.

எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, நடந்த வன்முறையில் நாசப்படுத்தப்பட்ட பொதுச்சொத்துகள் கொஞ்சமாநஞ்சமா? எம்ஜிஆர் இறந்த செய்தி கேட்டு தமிழகமெங்கும் நடந்த வன்முறைகளும், அதையே காரணமாக்கி தமிழகமெங்கும் சூறையாடப்பட்ட கடைகளும், சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துகளும் கொஞ்சமாநஞ்சமா? வன்னியர் போராட்டத்தின்போதும், வைகோ திமுகவிலிருந்து விலக்கப்பட்டபோதும் தொண்டர்களால் ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் மட்டுமென்ன சாதாரணமானதா?

விடுதலைப் போராட்டத்தில் அன்னியர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களைப்போல, உணர்ச்சிப்பூர்வமான செயல்பாடுகளைப்போல ஒரு சுதந்திர நாட்டில், அதிலும் குறிப்பாக, மக்களாட்சி நடைபெறும் நாட்டில் வன்முறைக்கும், வெறிச்செயல்களுக்கும் தேவைதான் என்ன? நல்ல தலைவர்களாக இருந்தால் தங்களது தொண்டர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வதை எப்படி அனுமதிக்கலாம்?

தனி மனிதன் செய்தால் சட்டப்படி குற்றம் என்று கருதப்படும் செயல்களை, வெறிபிடித்த கும்பல் செய்தால் நியாயமாகி விடுகிறதே, இதற்கு நமது அரசியல் கட்சித் தலைவர்கள்தானே காரணம். கடமை உணர்வோடு, கண்ணியமாகவும் கட்டுப்பாடுடனும் தனது தொண்டர் கூட்டத்தை மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தை உணர்த்தி வழிநடத்தும் தலைவர் இவர் என்று அடையாளம் காட்ட தமிழகத்தில் ஒருவர்கூட இல்லாத நிலையில், என்ன சொல்லி என்ன பயன்?

பொதுமக்களையும், பொதுச்சொத்துகளையும் பாதுகாக்க வேண்டிய அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடும்போது, தேட முற்படும்போது தருமபுரியில் நடந்ததுபோல பஸ் மட்டுமா எரியும், மனித தர்மமே அல்லவா எரிந்து சாம்பலாகும்...
நன்றி : தினமணி

No comments: