Saturday, February 28, 2009

நெருக்கடியில் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் : இவ்வாண்டில் சம்பள உயர்வு கிடையாது

டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (டி.சி.எஸ்.,) நிறுவன ஊழியர்களுக்கு இவ்வாண்டு சம்பள உயர்வு இல்லை என்றும், ஆட் குறைப்பு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டி.சி.எஸ்., நிறுவனத்தின் விற்று முதல், கடந்த நிதியாண்டில் 22 ஆயிரத்து 863 கோடி ரூபாயாக குறைந்தது. இதனால், ஊழியர்களின் சம்பளம் மறு ஆய்வு செய்யப்படுகிறது. அடிப்படை சம்பளத்தில் மாற்றம் இருக்காது என்றாலும், பல்வேறு சலுகைகள் குறைக்கப்பட உள்ளது. தகுதி, பணி மூப்பு அடிப்படையில், இது 20 சதவீதம் முதல் 30 சதவீதமாக இருக்கும். டி.சி.எஸ்., இ - சர்வீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் ஊழியர்கள் உட்பட, டி.சி.எஸ்., நிறுவனங்களில் பணியாற்றுவோர் எண்ணிக்கை 1.4 லட்சம். ஊழியர்களின் சம்பளத்துக்காக, இந்நிறுவனம், மொத்த செலவுகளில், 54 சதவீதம் செலவிடுகிறது. தற்போது வருவாய் குறைந்து இருப்பதால், மொத்த செலவுகளில், ஊழியர்களுக்கான செலவை, 52 சதவீதம் முதல் 54 சதவீதத்துக்குள் தற்போது, இந்நிறுவனம் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அமெரிக்காவுடன் நடத்தி வந்த வர்த்தகத்தில், 4 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை விலை குறைப்பு செய்ய வேணடிய நிர்பந்தம் ஏற்பட்டு உள்ளது. தேவையற்ற, திறமையற்ற ஊழியர்களை வெளியேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிலும், நிலைமை மேலும் மோசமடைந்தால், அதிகளவில் ஆட்குறைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று, டி.சி.எஸ்., நிறுவனம் தெரிவித்துள்ளது. 'காம்பஸ் இன்டர்வியூவில், 24 ஆயிரத்து 500 பேருக்கு, வேலையில் சேர ஆபர் லெட்டர் அளிக்கப்பட்டு இருந்தது. இவர்களை பணியில் அமர்த்துவதில் உறுதியாக இருந்தாலும், அது டிசம்பர் மாதம் வரை தாமதப்படும்' என்று, இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராமதுரை கூறியுள்ளார்.
நன்றி : தினமலர்


No comments: