Friday, December 4, 2009

வளைகுடா பணம் வரும் : கேரளாவுக்கு பாதிப்பு உண்டு

'துபாயில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், வளைகுடா நாடுகளில் இருந்து பணம் பெறும் சில மாநிலங்களின் பொருளாதார நிலையில் பாதிப்பு ஏற்படலாம்' என, இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டது. துபாயில் அரசுக்கு சொந்தமான முதலீட்டு நிறுவனமான 'துபாய் வேர்ல்ட்' என்ற நிறுவனம், நிதி நெருக்கடியில் சிக்கி, தான் வாங்கிய பல லட்ச கோடிக்கணக்கான ரூபாய் கடனை, திருப்பி செலுத்த ஆறு மாத காலம் தவணை கேட்டது. துபாயின் இந்த பொருளாதார சூழ்நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த இந்திய ரிசர்வ் வங்கி துணை கவர்னர் உஷா தோராட் கூறியதாவது: துபாயில் இருந்து வரும் பணத்தை நம்பியே நாட்டின் சில பகுதிகள் உள்ளன. அதனால், சில பாதிப்புகள் ஏற்படலாம். குறிப்பாக, வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தின் மூலமே ஏராளமான வருவாய் பெற்று வந்தது கேரளா. துபாயின் பொருளாதார நெருக்கடி எந்த அளவுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்பதை நாம் காண வேண்டும். எனினும், துபாய் பொருளாதார நெருக்கடியால், இந்திய வங்கித் துறைகளுக்கு பாதிப்பு ஏற்படாது. எனவே, அதுபற்றி கவலைப்படத் தேவையில்லை.
இவ்வாறு உஷா கூறினார். பொதுத்துறை வங்கிகளில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் உள்ள கம்பெனிக்கு 1,500 கோடி ரூபாய் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், பிரிட்டனைச் சேர்ந்த நான்கு வங்கிகள் இணைந்து, 'துபாய் வேர்ல்டு' நிறுவனத்திற்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கொடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகி உள்ள செய்தியில், 'ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து, 4,800 கோடி ரூபாய் முதல் 9,600 கோடி ரூபாய் வரையும், எச்.எஸ்.பி.சி., ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு மற்றும் லாய்ட்ஸ் வங்கி ஆகியவை தலா 4,800 கோடி ரூபாயும் கடன் கொடுத்துள்ளன. ஆனால், இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கிகள் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கிடையில், துபாயின் பொருளாதார நெருக்கடி குறித்து, 'டிவி' சேனல் ஒன்றிற்கு பேட்டி யளித்த சவுதி இளவரசர் அல்வாலீத் பின் தலால் கூறியதாவது: சர்வதேச வங்கிகளில் இருந்து பெறப்பட்ட வர்த்தக கடன்களுக்கு அரசு பொறுப்பல்ல. துபாய் வேர்ல்டு நிறுவனத்திற்கு கடன் வழங்கிய வங்கிகள் அதன் பாதிப்புகளையும் உணர்ந்திருக்க வேண்டும். கம்பெனிக்கு தரப்படும் கடன் மற்றும் அரசுக்கு தரப்படும் கடன் ஆகிய இரண்டையும் வேறுபடுத்தி பார்க்க இவர்களுக்கு தெரிய வேண்டும். இவ்வாறு அல்வாலீத் கூறினார்.
நன்றி : தினமலர்


No comments: