ஆந்திர மாநில முதல்வர் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டிக்குப் பிறகு அதிகாரத்தைக் கைப்பற்றுவது யார் என்பது தொடர்பான சர்ச்சை எழுந்து முதல்வராக ரோசய்யா தொடர்வார் என அறிவிக்கப்பட்டு பிரச்னை ஓய்ந்திருந்த நிலையில், அங்கு "தனி தெலங்கானா' விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
÷1950}களின் தொடக்கத்தில் முதன்முதலாக நிலப்பிரபுக்களுக்கு எதிராக மிகப்பெரிய விவசாயிகள் இயக்கம் உருவானது. பின்னர் தனி மாநிலக் கோரிக்கை எழுந்தது. அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளில் அக்கோரிக்கை புதிய உத்வேகம் பெற்றது.
இந்தக் காலத்தில்தான் மாநிலங்கள் மறுசீரமைப்புக் கமிஷன் கோரிக்கை வலுப்பெறவே பிரணாப் முகர்ஜி தலைமையிலான கமிட்டி தனது அறிக்கையை எல்.கே.அத்வானியிடம் அளித்தது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர், தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி நிராகரித்துவிட்டார்.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனி தெலங்கானா கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று 2004}ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. 2009}ம் ஆண்டு தேர்தலின்போதும் இதை காங்கிரஸ் முன்வைத்துப் பிரசாரம் செய்தது. செகந்தராபாதில் நடந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், "தனி தெலங்கானா' கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்றுக் கொள்வதாகக் கூறினார்.
÷எனினும் தனி தெலங்கானா கோரிக்கை மீண்டும் எழாமல் பார்த்துக் கொள்வதாக முதல்வர் ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் தலைமைக்கு உறுதியளித்ததுடன் மிகவும் சாமர்த்தியமாகச் செயல்பட்டு இப்பிரச்னை தலைதூக்காமல் பார்த்துக் கொண்டார். தெலங்கானா பிரச்னை குறித்து விவாதிக்க ரோசய்யா தலைமையில் ஒரு கமிட்டியையும் ஏற்படுத்தினார். தெலங்கானா பகுதியைச் சேர்ந்த சிலருக்கு அமைச்சர் பதவியும் கொடுத்தார். இதையடுத்து பிரச்னை அமுங்கிப் போய் இருந்தது.
மேலும் அரசியலில் அதிருஷ்டம் ராஜசேகர ரெட்டி பக்கம் இருந்தது போலும்! அடுத்தடுத்து தேர்தல்களில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இது ராஜசேகர ரெட்டிக்குச் சாதகமாக இருந்ததால் தெலங்கானா பிரச்னை தலைதூக்கவில்லை.
2004}ல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி, தெலங்கானா விவகாரத்தை காங்கிரஸ் கண்டுகொள்ளாததால் 2006}ல் அதனுடனான உறவை முறித்துக் கொண்டது. இதைத் தொடர்ந்து தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர். ஆனால், அதைத் தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலிலும் அக்கட்சி தோல்வியையே சந்தித்தது. 2009}ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 17 மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி 2 இடங்களில் மட்டுமே வென்றது. இதேபோல மாநிலச் சட்டப்பேரவைக்கான தேர்தலில் தெலங்கானா பகுதியில் 119 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 10 தொகுதிகளையே அக் கட்சி கைப்பற்றியது.
இதனால் தனி தெலங்கானா கோரிக்கைக்கு மக்களிடையே ஆதரவு இல்லை என்று சொல்லிவிட முடியாது. தெலங்கானா பகுதியில் ரெட்டிகள், கம்மவார் இன மக்களின் கை ஓங்கியிருந்தது. இதனால் தனி தெலங்கானா கோரிக்கை தேர்தலின்போது முக்கியத்துவம் பெறவில்லை. அடுத்தடுத்து தேர்தல்களில் தோல்வி ஏற்பட்டதை அடுத்து ஹைதராபாத் நகராட்சித் தேர்தலில் போட்டியிடத் துணிவில்லாத நிலையில் கட்சியையே கலைத்துவிடலாமா என்ற யோசனயில் இருந்தார் அதன் நிறுவனரான கே.சந்திரசேகர ராவ்.
ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பிறகு முதல்வர் யார் என்ற சர்ச்சை எழுந்த நிலையில், அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி, தனக்குத்தான் முதல்வர் பதவி வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த நிலையில் தாற்காலிக முதல்வராக ரோசய்யா பொறுப்பேற்றார். இதற்கு ஜெகன்மோகன் ரெட்டி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால் ஆந்திர அரசியலில் திடீர் குழப்பம் ஏற்பட்டது. நிலைமை விபரீதமாவதை உணர்ந்த காங்கிரஸ் தலைமை ஜெகன்மோகன் ரெட்டியைச் சமாதானப்படுத்தி ரோசய்யா முதல்வராகத் தொடர்ந்து நீடிப்பார் என்று அறிவித்தது.
இதேசமயத்தில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுவந்த ரெட்டி சகோதரர்கள் மீது சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்ததான குற்றச்சாட்டின் பேரில் சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது.
பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தனர். அவரது மறைவுக்குப் பிறகு அந்த நெருக்கம் ஜெகன்மோகன் ரெட்டியுடனும் தொடர்ந்தது. மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும் ஒன்றுடன்ஒன்று தொடர்பு இல்லாதது என்ற போதிலும் இந்த நேரத்தைப் பயன்படுத்தி தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் கே. சந்திரசேகர ராவ், தெலங்கானா பிரச்னையை கையிலெடுத்து அதற்காக உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தார். ஆனால், தனி தெலங்கானா கோரிக்கைக்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. ரோசய்யாவின் ஆட்சிக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தவும், அவரை ஆட்சியிலிருந்து கீழே இறக்கவும் ஜெகன் மோகன் ஆதரவாளர்களே பிரச்னையைப் பெரிதாக்க நினைத்து இருதரப்பினரையும் உசுப்பிவிட்டிருக்கலாம் என்ற கருத்து உள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்க வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் நடத்தியவர்களே தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பதவியை ராஜிநாமா செய்ய முன்வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் ராயலசீமையைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், வேறு சில பகுதிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் பதவியை ராஜிநாமா செய்யத் தயார் என அறிவித்துள்ளனர்.
தெலங்கானா பிரச்னையைச் சரிவர கையாள மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் கட்சி தவறிவிட்டது. தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த அரசு, அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை நினைத்துப் பார்க்கத் தவறிவிட்டது. இந்த அறிவிப்பு வந்தவுடனேயே அதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த டி.ஆர்.எஸ். கட்சித் தலைவர் சந்திரசேகர ராவை சமாதானப்படுத்தவே இந்த அறிவிப்பு என்று காங்கிரஸ் சொல்வதை ஏற்க முடியாது. சந்திரசேகர ராவ் உண்ணாவிரதம் இருந்தபோதே தெலங்கானா பற்றி முடிவு எடுப்பதற்கான முன்முயற்சியில் காங்கிரஸ் இறங்கியது. உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு ஆந்திர முதல்வரைக் கேட்டுக் கொண்டது. மார்க்சிஸ்ட் மற்றும் எம்ஐஎம் கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் தெலங்கானா கோரிக்கையை ஆதரிக்க முன்வந்தன. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி மாநிலச் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தின. (ஆனால், இரண்டு நாள்களுக்குப் பிறகு இப் பிரச்னை தலைகீழாக மாறிவிட்டது வேறு விஷயம்.)
தெலங்கானா மாநிலக் கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்பதாக அறிவித்த உடனேயே உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று சந்திரசேகர ராவை காங்கிரஸ் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அதேசமயத்தில் தனி தெலங்கானா மாநிலம் அமைந்தால் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியை காங்கிரஸýடன் இணைக்க ராவ் உறுதி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
தெலங்கானா விவகாரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்று காங்கிரஸ் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ரோசய்யாதான் முதல்வராக நீடிப்பார் என்று காங்கிரஸ் மேலிடம் அறிவித்தபோது, ஜெகன்மோகன் ரெட்டி வெளிப்படையாக ஒப்புக்கொண்டாலும் மனதளவில் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இந்தச் சமயத்தில் தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கை விஸ்வரூபம் எடுத்தபோது அதற்கு ரெட்டி ஆதரவாளர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்பதாக அவசரப்பட்டு அறிவித்த மத்திய அரசு, இதேபோன்ற கோரிக்கை நாட்டின் இதர பகுதிகளிலிருந்து வரும் என்பதை எண்ணிப்பார்க்கத் தவறிவிட்டது. தெலங்கானா பற்றிய அறிவிப்பு வந்தவுடனேயே கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா, கோர்க்காலாந்து தனி மாநிலக் கோரிக்கையை எழுப்பியது. இதைத் தொடர்ந்து உ.பி. முதல்வர் மாயாவதியும், உ.பி. மாநிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார்.
÷தனி தெலங்கானா மாநிலம் அமைவதை அரசு கொள்கை அளவில் ஏற்றதையடுத்து நாட்டின் இதர பகுதியில் உள்ளவர்கள் தனி மாநிலக் கோரிக்கையை எழுப்ப வேண்டாம் என்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால், அரசின் அறிவிப்பு வெளியான விதம் தவறான சமிக்ஞையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
அதாவது ஆந்திரத்தில் தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டம், வன்முறை நடந்ததை அடுத்து நிலைமையைச் சமாளிக்க அரசு தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்துள்ளது. இனி வன்முறை, போராட்டம் போன்றவற்றின் மூலம் கோரிக்கைகளை வலியுறுத்தினால் அரசைப் பணியவைத்துவிடலாம் என்ற எண்ணத்தை இது தோற்றுவித்துவிட்டது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கை உறுதிமொழியை நிறைவேற்றுவதா அல்லது அதிலிருந்து பின்வாங்கிவிடுவது நல்லதா என்பது புரியாமல் காங்கிரஸ் உள்ளது.
÷2004}ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைய ஆந்திரம் முக்கிய காரணமாக இருந்தது. 2009}ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் ஆந்திரம் உதவியுள்ளது.
இக்கட்டான இந்த நேரத்தில் சரியான முடிவு எடுக்க காங்கிரஸ் தவறிவிட்டால் இரண்டு பக்கமும் மக்கள் ஆதரவை காங்கிரஸ் இழந்துவிட நேரிடும். இதைக் கவனத்தில் கொண்டு காங்கிரஸ் செயல்பட வேண்டும்.
கட்டுரையாளர் : நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி
Saturday, December 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment