வரலாறு என்பது திட்டமிட்டு நிகழக்கூடியதல்ல. சொல்லப்போனால், மிகச் சாதாரணமான அபத்தமான முடிவுகள்தான் பெரும்பாலான சரித்திர நிகழ்வுகளை உருவாக்கி இருக்கின்றன. சமீபத்தில் நடந்த இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இந்தியா சம்பந்தப்பட்டது. காரணம், அமெரிக்க வரலாற்றில் வியூக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவை அறிவிக்கும் முன் இந்தியப் பிரதமருடன் அந்நாட்டு அதிபர் உரையாடியிருப்பதைச் சாதாரண நிகழ்வாக நம்ம ôல் எடுத்துக்கொள்ள முடியவில்லை.
ஆப்கன் போரில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது}அதாவது}போரை மேலும் தீவிரப்படுத்துவது என்று வெள்ளை மாளிகை எடுத்திருக்கும் முடிவை இப்போது மதிப்பிடுவது கடினமானது. இதைத் தவிர்த்து, இப்போதைக்கு அமெரிக்காவுக்கு வேறு நல்ல தெரிவுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
அதேசமயம், இந்தப் போரில் அல்}காயிதா மற்றும் தாலிபன்களின் வலைப் பின்னல்களை அறுக்க நேசப் படைகள் பாகிஸ்தானுடன் கூட்டணி அமைத்தால் போதாது என்கிற முடிவுக்கு அமெரிக்கா வந்திருக்கிறது. ராணுவ நடவடிக்கைகளில், ஆளில்லா "காம்பட் ட்ரோன்' தாக்குதல் விமானங்களைப்போல இந்தியாவும் கை கோர்க்க வேண்டும் என்று அமெரிக்க வியூகவாதிகள் நினைக்கிறார்கள். இந்தப் பின்னணியிலேயே மன்மோகன் சிங்}ஒபாமா இடையேயான உரையாடல் நடந்தேறி இருக்கிறது.
உரையாடலைத் தொடர்ந்து, அமெரிக்க அறிவிப்புக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் வரவேற்பைப் பார்க்கும்போது அமெரிக்காவின் வியூகத்தை நோக்கி இந்தியா நகரத் தொடங்கிவிட்டதாகவே தோன்றுகிறது. ஒருவேளை ஆப்கனுக்கு இந்தியப் படைகளை அனுப்ப நம் அரசு முடிவெடுத்தால், ராணுவ ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் இந்தியா எடுக்கப்போகும் மிக மோசமான முடிவுகளில் ஒன்றாக அது அமையுயும். சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் கற்ற பாடங்களைவிடவும் மோசமான பாடங்களை இந்தியா எதிர்கொள்ள நேர்ந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆப்கன் மீது 1979}ல் சோவியத் ஒன்றியம் போர் தொடுத்தது. ஏறத்தாழ 10 ஆண்டுகள் நீடித்த அந்தப் போரின் இறுதியில் வலுவான சோவியத் படைகள் தோல்வியைத் தழுவின. அப்புறம் 12 ஆண்டுகள் உள்நாட்டுப் போர். பிறகு, 2001 முதல் அமெரிக்கா அங்கு போரிட்டுக்கொண்டிருக்கிறது. ரஷியாவும் சரி, அமெரிக்காவும் சரி; ஆப்கனைப் பற்றி நினைத்தது வேறு; நடந்தது வேறு.
முன்னதாக, ஆங்கிலேயே}ஆப்கானியப் போர்களில் ஆங்கிலேயர்களுக்கும் இப்படித்தான் நேர்ந்தது. புவியியலைப்போலவே சிக்கலான சமூக இயக்கவியலைக் கொண்ட ஆப்கன் ""ஏன் இந்த நாட்டுக்குள் காலடி எடுத்துவைத்தோம்'' என்ற மோசமான அனுபவத்தையே படையெடுத்த நாடுகளுக்கெல்லாம் அளித்திருக்கிறது என்பது சரித்திரம் புகட்டும் பாடம்.
ஆங்கிலேயர்களும் ரஷியர்களும் தோல்வியை ஒப்புக்கொண்டார்கள். அமெரிக்கர்கள் முடிந்த வரை மோதிப் பார்க்க முடிவெடுத்திருக்கிறார்கள். அவ்வளவே.
இந்நிலையில், இந்தியப் படைகள் ஆப்கனுக்குள் நுழைவது இந்தியாவுக்குத் தேவையற்ற தலைவலியை உருவாக்கும். ஏதோ ஒரு காலை வேளையில் அமெரிக்க விமானங்கள் தன் துருப்புகளைச் சுமந்து பல்லாயிரம் கி.மீ. தொலைவுக்கு அப்பால் பறந்த பின்னர் இந்த வலியின் தீவிரத்தை இந்தியா உணர வேண்டியிருக்கும்.
கடந்த சில மாதங்களாகவே இந்திய எல்லைகளில் அதிகரித்துவரும் சீன அத்துமீறல்கள், இந்தியாவின் அண்டை நாடுகளில் நிறுவப்படும் ராணுவ முக்கியத்துவம் மிக்க சீனக் கட்டமைப்புகள் குறித்த செய்திகள் ஒருவிதமான அச்சத்தை உருவாக்கி வருகிறது. இதை எதிர்கொள்ள ""இந்தியா ராணுவ ரீதியிலான பலத்தைப் பெருக்க வேண்டும்; சீனாவுக்குப் பாடம் புகட்ட வேண்டும்'' என்ற குரல்கள் எழுவதையும் பார்க்கிறோம்.
ஆனால், இந்தியா எங்கு தன் பலத்தைப் பெருக்க வேண்டும் என்றால், முதலில் ராஜதந்திர வட்டாரத்தில்தான். கடந்த கால் நூற்றாண்டு காலமாகத் தொடர்ச்சியாக மிக மோசமான முடிவுகள் எடுக்கப்பட்ட துறை நமது வெளியுறவுத் துறையாகவே இருக்கும். ஆகையால், இந்தியர்கள் முதலில் தம் குரலை நம்முடைய வெளியுறவுக் கொள்கைக்காக எழுப்புவதே பொருத்தமாக இருக்கும். தற்போதைய தேவையும் அதுவே.
அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட கதையாக, அமெரிக்காவை நம்பி நாம் நமது தன்னம்பிக்கையையும், தனித்தன்மையையும் கைவிடுகிறோம் என்று அரசையும், குறிப்பாக, வெளியுறவுத் துறையையும் எச்சரிக்க விரும்புகிறோம்!
நன்றி : தினமணி
Monday, December 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment