வேளாண்மையும் மனிதநல வாழ்வும் சீர்மிகு சிறப்புடன் விளங்க வேண்டுமென்று எண்ணிய முன்னோடிகள் ஆயிரம் பேர் இருந்தாலும், இரண்டு மாபெரும் விஞ்ஞானிகளின் சேவைகளை எண்ணினால், இன்று வாழும் வேளாண்மைப் பேராசிரியர்கள் வெட்கப்பட வேண்டும். அந்த இருவர்களில் ஒருவர் ஆல்பர்ட் ஹோவார்டு. மற்றொருவர் ஆல்பர்ட் ஷாட்ஸ். ஒருவர் இந்தியாவில் வாழ்ந்த இங்கிலாந்துப் பேராசிரியர். மற்றொருவர் அமெரிக்காவில் வாழ்ந்த யூத-ரஷிய விஞ்ஞானி.
யாருக்கு யாரிடம் பாடம் என்ற தினமணி (24-8-09) கட்டுரை மூலம், ஆல்பர்ட் ஹோவார்டு அறிமுகமாகிவிட்டார். ரசாயன விவசாயத்தால் எதிர்காலத்தில் நிகழப்போகும் ஆபத்துகளைக் குறிப்பாக மண்வளம் இழப்பு, மனிதவளம் இழப்பு-அதாவது நோய் எதிர்ப்பு சக்தியில்லாமல் மருந்து மாத்திரைகளுக்கு அடிமையாகப் போகும் மனிதகுலம் பற்றியெல்லாம் 1920-களில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தவர், ஆல்பர்ட் ஹோவார்டு.
இந்திய விவசாயத்தில் ரசாயன உரம் இல்லாமலேயே உற்பத்தியை உயர்த்த மண்ணில் கரிய விழுதுகளைப் பதிக்க-அதாவது ஹுமஸ் பற்றிய ஆய்வுகளுக்கு வித்திட்டார். பிரிட்டிஷ் ஆட்சியில் வேளாண்மை ஆலோசகராகப் பணிபுரிந்த ஹோவார்டுக்கு எதிர்ப்புகள் விளைந்தன.
""வேளாண்மைக்கு உயில்'' எழுதியவர் ரசாயன உரங்களையும் பூச்சிமருந்து விஷங்களையும் அவற்றின் தொடக்க காலத்திலிருந்து எதிர்த்தவர். இவர் வழங்கிய மாற்றுத்திட்டம் அதாவது மண்வளத்துடன் இயற்கை வழியிலேயே உயர்ந்த விளைச்சல் பெறும் ஆராய்ச்சிகளுக்குப் புசாவில் வாய்ப்பு இல்லை. இந்தியாவின் வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் முதன்மை வேளாண் ஆலோசகருக்கு நெருக்கடி வந்தது. உர நிறுவனங்களுக்கு ஒரு கைப்பாவையாக விவசாய ஆராய்ச்சிகள் திசைதிரும்பியதால், ஹோவார்டுக்கு சோதனை வந்தது. புசாவிலிருந்து ஹோவார்டு வெளியேறினாரா, வெளியேற்றப்பட்டாரா என்பதில் தெளிவு இல்லை.
வேளாண்மை உயிலைப் புரட்டிப் பார்த்தால், புசாவிலிருந்து ஏன் இந்தூர் தர்பாருக்கு வந்தார் என்பதற்கு இவ்வாறு ஹோவார்டு நொந்துகொண்ட வரிகள்: ""ஒரு பயிர் நோயின்றி நல்லபடி வளர்ந்து திடமாக வாழ்ந்து உயர்ந்த அளவில் உற்பத்தி பெற அப் பயிரின் கீழ் வளமான கரிம விழுதுகள் மண்ணில் பரவலாக வேண்டும். அதற்கேற்ற வகையில், நாம் வழங்க வேண்டிய குணபஎரு நிலை, நைட்ரஜன் கார்பன் விகிதம் 1 : 10 என்ற அளவில் நிலவ வேண்டும். முறையான அளவு அவசியம். புசாவில் வேளாண்மை ஆராய்ச்சி என்றால் அதை மண்ணோடு தொடர்பு செய்யாமல், விதைப்பெருக்கம், பூச்சியியல், பூசணயியல், பயிரியல் என்று பலவிதமான துறைப் பிரிவுகள் முளைத்துவிட்டன. மண்வளம் பற்றிய யோசனையோ ஆய்வோ... இல்லை...'' பின்னர் இவர் மண்ணில் கரிம விழுதுகள் பற்றிய ஆராய்ச்சியைத் தொடர, விதர்பாவில் உள்ள காட்டன் கமிட்டி முன்வந்து, இந்தூர் சமஸ்தான ஆதரவுடன் 100 ஏக்கர் நிலம் 100 ஆண்டு குத்தகை என்ற அடிப்படையில் பெற்று, ஆராய்ச்சியை அன்று தொடங்கி மண்வளத்தை உயர்த்தியதால்தான், இன்றுவரை மத்திய மாகாணங்களில் பருத்தி உற்பத்தித்திறன் கூடியது.
மண்வளம் வேறு, மண்ணில் ஹுமஸ் என்பது வேறு. இன்றைய விஞ்ஞானிகள் ஹுமஸ் என்றால் இயற்கை உரம் இடுவது என்று பொருள்படப் புரிந்து கொள்கின்றனர். சுருக்கமாகச் சொல்வதானால் பத்தாம் நூற்றாண்டில் சுரபாலர் எழுதிய விருட்சாயுர்வேதம் திருக்குறளைப்போல் ஈரடி வெண்பாவைப்போல் பாடப்பட்டது.
திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரை எழுதியதைப்போல், ஆல்பர்ட் ஹோவார்டு எழுதியுள்ள ""வேளாண்மை உயில்'' படிக்கப் படிக்கப் புதிய பொருள்களைத் தருகிறது. குணபஜலமே ஹுமஸ் என்று பொருள்பட இவருடைய இந்தூர் கம்போஸ்டிங் உள்ளது. நாற்பது பக்கங்களில் ஹோவார்டு கூறியதை நாலு வரிகளில் சொல்வது இயலாது என்றாலும் அடிப்படை இதுவே.
ஹோவார்டு இந்தியாவில் பணிபுரிந்த காலகட்டத்தில் (1906-32) விவசாயிகளிடம் மாடு இருந்தது. மாட்டுக்கொட்டிலில் சிமெண்டுத்தளம் இல்லை. மண்தரையில் கட்டுவார்கள். மண்தரையில் மாட்டின் சாணமும் கோமயமும் விழாமல் இருக்க தினமும் மாட்டுக்கு ஒரு படுக்கை போட வேண்டும். அது அறுவடைக்கழிவாக இருக்க வேண்டும். பெரும்பாலும் தட்டைப்புல்-வைக்கோல், துவரைக்கொடி, கடலைக்கொடி, கரும்புச்சோகை, வாழைச்சோகை அவற்றின்மீது மரத்தூள்-இப்படிப்பட்ட படுக்கை இந்தூர் பண்ணையில் அமைக்கப்பட்டது. அதன் நைட்ரஜன்: கார்பன் ரேஷியோ 1 : 33. அப்படுக்கையின் மீது இரவு மாடுகள் கழிக்கும் கோமயம், சாணம் சேர்ந்து ஒரு பயிருக்குத் தேவையான ஹுமûஸ அதாவது 1 : 10 என்ற அளவில் தழைச்சத்து உயர்ந்து கார்பன் சத்து குறைந்து மக்கும் நிலை உருப்பெறுகிறது. தினம் மாட்டுத் தொழுவத்தைக் கூட்ட வேண்டாம். அப்படியே வாரிச்சுருட்டி தோட்டத் தரிசில் போட்டு விட வேண்டும். மாடுகளின் அளவைப் பொருத்து 1 மாதத்தில் 50 செண்டு நிலத்தில் உரத்தையே உலர்மூடாக்கு செய்து சற்று மக்கிய பின்பு உழுது விதைத்துவிடலாம். அவரவர் வசதிப்படி முட்டுப்படுக்கையாகப் போடலாம். குவியலாகப் போட்டும் மக்க மக்க அள்ளலாம்.. 1935-க்குப் பின் இங்கிலாந்து திரும்பிய ஹோவார்டு இம்முறைக்கு இந்தூர் கம்போஸ்டிங் என்று பெயரிட்டுத் தன் தாய்நாட்டையும் வளப்படுத்தியுள்ளார். ஆயிரக்கணக்கான இங்கிலாந்து விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்றிய பெருமை இவருக்கு உண்டு.
இக்கால ரசாயன விஞ்ஞானிகள் இயற்கை விவசாயத்தை எதிர்த்து என்ன பேசினார்களோ ஹோவார்டு வாழ்ந்த அந்தக் காலத்திலும் பேசியுள்ளார்கள். 1920-30 காலகட்டத்தில் ரசாயன உரம் விலை மலிவு. அதைக் காரணம் காட்டி மரத்தூள், சாணம், வைக்கோல் எல்லாம் விலை அதிகம் என்று ரசாயனவாதிகள் கூறியதற்கு அவர் வழங்கிய ஒரே பதில் இதுவே: ""இயற்கை எருவைப் பெறும் உரிமை மண்ணுக்கு உள்ளது. இந்த மண் உரிமையைத் தட்டிப் பறித்தால் மண் இறந்துவிடும்...'' மண் இறந்துவிடும் என்றால் அம்மண்ணில் நுண்ணுயிரிகள் பூண்டோடு அழியும் என்று பொருள்.
ஹோவார்டை இத்துடன் நிறுத்திக் கொண்டு ஷாட்சின் கதையைத் தொடங்குவோம்.
ஆல்பர்ட் ஷாட்ஸ் ஹோவார்டு காலத்தில் வாழ்ந்த யூத-ரஷிய விஞ்ஞானி. நிறவெறியால் இவர் தாத்தா ரஷியாவிலிருந்து விரட்டப்பட்டார். அவர் அமெரிக்காவில் கனக்டிக்கட் மாநிலத்தில் போஸ்ரா என்ற சிற்றூரில் 140 ஏக்கரில் ஒரு சிறு விவசாயப் பண்ணையை உருவாக்கினார். அமெரிக்காவில் 140 ஏக்கர் நிலமுள்ளவர் சிறு விவசாயி. அப்போது சின்னப்பையனாக இருந்த ஷாட்சுக்கு விவசாயத்தின்மீது கொள்ளை ஆசை. விவசாயம் என்றால் அது மண்ணைப் பற்றிய படிப்பு என்று அச்சிறுவன் புரிந்துகொண்டு ராணுவத்தில் சேர்ந்து புளோரிடா ராணுவ மருத்துவமனையில் பணிபுரிந்துகொண்டே மண்ணுயிரியல், நுண்ணுயிரியல் ஆகிய துறைகளில் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் பிற்காலத்தில் முனைவர் பட்டம் பெறும் முன்பே, ஸ்ட்ரப்டோமைசீனைக் கண்டுபிடித்தவர். இவர் ஸ்ட்ரப்டோமைசீனைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு உலகில் அதுவரை காசநோய்க்கு மருந்து இல்லாமல் கோடிக்கணக்கான மக்கள் காசநோய் வந்து இறந்ததாக வரலாறு கூறும். இவர் புளோரிடா ராணுவ மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டே பல வகையான மண்களை- ஏரிமண், சேற்று மண், தோட்ட மண், ஆற்றோர மண், அலையாத்தி மண் என்று சேகரித்து ஆராய்ந்தவண்ணம் இருந்தபோது ஒருவகையான குணபநுண்ணுயிரிகளைக் கண்டுபிடித்தார். அது காசநோய்க் கிருமியைக் கொல்லுமா என்ற கேள்வியுடன், டூபர்குளோசிஸ் என்ற பாக்டீரியாக்களைப் பெற விரும்பினார். அப்போது எந்த மருத்துவரும் துணிவுடன் காசநோய்க் கிருமியை ஆராய முன்வரவில்லை. இவருக்கு ஒருபாதாள அறை ஒதுக்கப்பட்டது. இரவு பகலாக அந்தப் பாதாள இருட்டறையில் டூபர்குளோசிஸ் பாக்டீரியா காசநோய்க் கிருமியைக் கையாண்டு, அதைத்தான் கண்டுபிடித்த ஸ்ட்ரப்டோமைசீன் காசநோய் பாக்டீரியாவைக் கொல்வதையும் கண்டுபிடித்து, இந்த விஷயத்தை இவருக்கு உதவியாக இருந்த பேராசிரியரிடம் கூறினார். அப்போது ஷாட்ஸ் 23 வயது இளைஞர். உலகம் அறியாதவர். இவர் யூதர், ரஷியர், மாணவர் என்றெல்லாம் குறை கூறி ஸ்ட்ரப்டோமைசீன் மருந்தையும் அதன் விருத்திக்கான நுட்பத்தையும் மருந்து நிறுவனத்துக்கு அப்பேராசிரியர் விற்றுப்பணம் சம்பாதித்தது மட்டுமல்ல, நோபல் பரிசையும் தட்டிப் பறித்தார். பின்னர் மிகவும் போராடிய ஷாட்ஸ் குறைந்தபட்சம் ஸ்ட்ரப்டோமைசீன் தனது கண்டுபிடிப்பு என்பதைச் சான்றுறுதி செய்தார். ஸ்ட்ரப்டோமைசீன் என்றால் "பின்னலான காளான் நுண்ணுயிர்' என்று பொருள். கோழியின் தொண்டையில் இருந்த ஒரு பாக்டீரியாவை மண்ணிலிருந்து பெற்ற காளான் நுண்ணுயிரியைக் கலந்து உருவான குணபமே ஸ்ட்ரப்டோமைசீன். இவர் இந்த நுண்ணுயிரியைப் பெருக்கிப் பயிர்கள் மீது தெளித்துப் பயிர்களுக்கு வரும் பூசண நோய், பூச்சி நோய் ஆகியவற்றையும் குணப்படுத்தினார்.
பிற்காலத்தில் ஷாட்ஸ் மண்ணில் உள்ள கரிமவிழுதாகிய ஹுமஸ் பற்றிய ஆய்விலேயே முழுக்கவனத்தையும் செலுத்தினார். ரசாயன உரங்கள் அறிமுகமாவதற்கு முன்பு மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் பற்றிய ஆராய்ச்சியை ரஷியாவின் பல்கலைக்கழகங்கள் மட்டுமே மேற்கொண்டது. ஒரு பயிரைப் பற்றிப் படிப்பதற்கு முன்
வேரின் கீழுள்ள மண்ணைப் பற்றிப் படிக்க வேண்டும் என்பது ரஷிய விஞ்ஞானிகளின் கருத்து. பெடாலஜி என்ற துறை ரஷியாவில் மட்டுமே இருந்தது. ஆனால் அவை ரஷிய மொழியில் இருந்தன. ஷாட்ஸ் ரஷிய மொழி கற்று அத்துறையின் ஆய்வுகளையெல்லாம் கரைத்துக் குடித்து அமெரிக்காவில் இயற்கை விவசாயம் பரவக் காரணமானார்.
இவர் கூறிய ஒரு கருத்து இன்றைய விஞ்ஞானிகளுக்குப் பாடம் புகட்டும். ஆனால் ஷாட்ஸ் அன்றைய வேளாண் விஞ்ஞானிகளைப் பற்றி இவ்வாறு கூறியுள்ளார்:
""இன்று மண்விஞ்ஞானிகள் என்று கூறும் பேராசிரியர்களின் செயல்பாடுகள் வெட்கக்கேடானது. நான் என்னை ஒரு மண்விஞ்ஞானி என்று கூறவே வெட்கமாயுள்ளது. மண்ணில் ரசாயனங்களை இட்டு அந்த விளைவைப் பயிர்களில் எடுத்துக்காட்டும் செயற்கைக்கு விவசாயம் விலைபோய் விட்டது. ஒரு மண்விஞ்ஞானிக்கும் உழவியல் விளைச்சலை மட்டும் கணக்குப் பார்க்கும் பண்ணை நிர்வாகிக்கும் என்ன வித்தியாசம்? மண் ஆய்வு என்பது ரசாயன உர நிறுவனங்கள் வழங்கும் ஒரு பாடத்திட்டமாகிவிட்டது. ரசாயன உர நிறுவனங்களின் கொழுத்த லாபத்துக்காகவே வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் உழைக்கின்றனர். மண் ஆராய்ச்சிப் பட்டப்படிப்புகள் மண்ணுக்கு உதவாமல் ரசாயன உர நிறுவனங்களின் வருமானத்துக்கு உதவுகின்றன. மண் விஞ்ஞானிகளுக்கு ரசாயன உரக் கம்பெனிகள் கொழுத்த சம்பளம் தருகின்றன. தேனில் விழுந்த ஈக்களைப்போல் வேளாண்மைப் பட்டம் பெற்ற பேராசிரியர்களும் மாணவர்களும் ரசாயன உர ஊறல்களில் விழுந்துவிட்டனர். ஆண்டுக்கு ஆண்டு தலைமுறை தலைமுறையாக காலம் செல்லச் செல்ல மண்ணில் உள்ள குணபரச ஆய்வு-மண்விழுதுகளைப் பற்றிய ஆய்வு மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் பற்றிய ஆய்வு ஆகிய அற்புத விஷயங்கள் கிடப்பில் போடப்பட்டுவிட்டன'' பிற்காலத்தில் ஷாட்ஸ் மண்ணில் இருக்க வேண்டிய லைகன் என்ற ஒருவகைப் பாசி உயிரியின் கரைக்கும் ஆற்றலை அறிந்து, அதுபோன்ற நுண்ணுயிரிகளே மண்ணில் உள்ள உலோகச் சத்தைக் கரைத்து உயர்ந்த விளைச்சலை ஏற்படுத்துகின்றன என்றார். மண்ணில் நுண்ணுயிரிகள் இருக்க வேண்டும். ரசாயனம் இருக்க வேண்டும் என்று கூறும் மண்விஞ்ஞானிகளை என்ன செய்வது? இந்தியாவில் எல்லா மாநிலங்களும் மரபணு மாற்ற விதைகளைப் புறக்கணித்துள்ளன. கேரள அரசு மரபணு மாற்ற விதைக்குத் தடை விதித்து விட்டது. எனினும்கூட தமிழ்நாடு பல்கலைக்கழகப் பேராசிரியர் மாலிக்யூலர் பயாலஜி கற்றவர், பி.ட்டி கத்தரிக்காய் விஷமில்லை என்றும், அதில் உள்ள ஒரு பாக்டீரியா மண்ணிலிருந்து எடுக்கப்பட்டது என்றும் கூறுகிறார்.
இன்று ஹோவார்டோ, ஷாட்சோ உயிருடன் இருந்தால் அந்தப்ó பேராசிரியருக்கு இவ்வாறு பதில் வழங்கியிருப்பார்: ""மண்ணுக்குள் செய்ய வேண்டிய உயிர் விஞ்ஞானம் உயிரித்தொழில்நுட்பம். அதை மண்ணில்தான் செய்ய வேண்டும். அதற்கு மரபணு மாற்றம் என்று மகுடம் சூட்டிப் பயிர் மீதும் விதைமீதும் திணிக்கக்கூடாது. மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் மண்ணில்தான் இருக்க வேண்டும். காலில் அணிய வேண்டிய ஒன்றை யாராவது கழுத்தில் மாலையாகப் போட்டுக் கொள்வார்களா?...''
கட்டுரையாளர் : ஆர்.எஸ். நாராயணன்
நன்றி : தினமணி
Monday, December 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment