Friday, September 4, 2009

முடிவு முதல்வரிடம்!

விவசாயம் செய்பவர்கள் பதிவுபெற்ற விவசாயப் பட்டதாரிகளிடம் மட்டுமே தங்களுக்கு வேண்டிய அறிவை இனிமேல் பெற வேண்டும். தந்தையின் அனுபவ அறிவைப் பெறுவதுகூட சட்டவிரோதம். அதற்கு அத் தந்தை இனி தண்டிக்கப்படுவார்.

""இனி இவர்கள் சொல்வதை மட்டுமே தமிழக விவசாயிகள் கேட்க வேண்டும்...'' என்ற சட்ட மசோதாவை முதலமைச்சர் எப்படி அனுமதித்தார் என்பது இன்னமும் வியப்பாகவே உள்ளது.

தாத்தாவின் விரல் பிடித்து, தந்தையுடன் வயலில் நடந்து சென்று, விவசாய அறிவை சிறுவயது முதல் சுவீகரித்து வளர்ந்தது தான் விவசாய சமூகம். முன்னோர்களிடமிருந்து, பெற்ற அறிவை தலைமுறைக்குத் தலைமுறை மேம்படுத்தி வந்ததன் விளைவே நிலவள மேம்பாடு, கால்நடைகள் மேம்பாடு, விதை உற்பத்தி, புதிய ரகங்களை உருவாக்குதல், பூச்சிக் கட்டுப்பாடு, பருவத்திற்கேற்ற, மண்ணின் தன்மைக்கேற்ற ரகங்கள் உருவாக்கம் எனப் பலதும் நடந்தது. பச்சைப் புரட்(டு)சிக்கு முன் இந்தியாவில் இருந்த 4 லட்சத்துக்கும் அதிகமான நெல் ரகங்கள் எல்லாம் விவசாயப் பல்கலைக்கழகத்தில் பயிலாத "பாமர' விவசாயிகள் இப்படி மேம்படுத்திய அறிவின் விளைவால் உருவானதே.

பல்கலைக்கழகங்கள், பச்சைப்புரட்சி என்றுகூறி இந்த விதைவளத்தையும், விவசாயியின் அறிவையும் சிதைத்து, பண்ணையில் பயிரிடப்பட்ட பயிர்களின் வகைகளைக் குறைத்தது. ஒவ்வொரு பயிரிலும் இருந்த ரகங்களின் எண்ணிக்கையையும் அழித்தது. 10,000 ஆண்டுகள் சிதையாதிருந்த இந்திய வேளாண்மையை தனது உலக வணிக மேலாதிக்கத்துக்காக ஆங்கில அரசு சிதைத்திருந்தது. அமெரிக்காவின் ரசாயன விவசாய மாதிரியை விவசாயக் கல்வியாக்கிக் கொண்ட விவசாயப் பல்கலைக்கழகங்கள் மூலம் ஏற்கெனவே சிதைவுற்றிருந்தது, மேலும் சிதிலம் அடைந்தது. கடன் வாங்குவதே கேவலம் என்றிருந்த சமூகத்தை ""கடன் தள்ளுபடி செய், இல்லாவிடில் வாழ முடியாது'' என்ற நிலைக்குத் தள்ளி மானமிழக்கச் செய்தது இந்த விவசாயமுறை.

அறுபதுகளின் கடைசிவரையில், ஆங்கிலேயரின் கொள்கைகளால் சிதைவுற்றிருந்த பின்னரும், ஒரு விவசாயி தன் மகனுக்குப் படிப்பு ஏறாவிட்டாலும் "மாடும் காடும் உள்ளது, பிழைத்துக் கொள்வான்' என்ற நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், இன்றோ எல்லா தந்தையருமே விவசாயத்தை விட்டு ஓடிவிட முயல்கின்றனர். ""எங்கள் கிராமம் விற்பனைக்கு'' என்று வார்தா அருகே டோர்லி கிராமம் தன்னையே விற்க விளம்பரம் செய்த அவலம், திணிக்கப்பட்ட விவசாய முறையின் விளைவு. அரசின் கொள்கைகள் விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றும் விதமாகவே உள்ளது. கம்பெனிகள் ஆயிரமாயிரம் ஏக்கர்களில் நிலம் வாங்குகின்றன. இந்தியாவில் மட்டுமன்றி ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தியக் கம்பெனிகள் விவசாயக் கம்பெனிகள் தொடங்கி பல்லாயிரம் ஏக்கர்களை வளைத்துப் புதிய காலனி ஆதிக்கத்துக்கு இந்திய அரசின் உதவியோடு அச்சாரம் போடுகின்றன.

நிறைய விளைந்து தள்ளிய விவசாயம் இங்கிருந்தது என்பதற்கும், ஆங்கிலேய அரசால் அது சிதைக்கப்பட்டது என்பதற்கும் ஆங்கிலேய அதிகாரிகளின் பதிவுகள் பல இன்னமும் அழியாமல் உள்ளன.

பச்சைப் புரட்சியையும் அமெரிக்க மாதிரி விவசாய முறையையும் ஆதரிப்பவர்கள் 1940-களில் நிகழ்ந்த வங்க பஞ்சத்தையே காரணம் காட்டுகின்றனர், ஓர் உண்மையை மறைத்து. 30 லட்சம் மக்கள் கொத்துக் கொத்தாய் செத்து மடிந்த அதே காலத்தில் கோல்கத்தா துறைமுகத்திலிருந்து உலக வர்க்கத்துக்காக கப்பல் கப்பலாக அரிசியையும், சர்க்கரையையும் ஏற்றுமதி செய்தது ஆங்கில அரசு. பஞ்சத்துக்கான உண்மையான காரணம் விளையாததல்ல, விளைந்ததைப் பிடுங்கியதும் மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாததுமே.

விவசாயம் என்பது வெறும் பயிர் வளர்ப்பதல்ல. அற்புதமான வாழ்வு முறை. எந்தவொரு அரசனின், அரசின் கையையும் எதிர்பார்க்காது வாழ்ந்த உன்னத வாழ்வு முறை. அதை கம்பெனிகள் நலனுக்காக வளர்த்தெடுக்கப்பட்டு இந்திய விவசாயிகள் மீது திணிக்கப்பட்ட இரவல் அறிவு வெறும் வணிகத்திற்கு சுருக்கியது.

இதனுடைய விளைவு 10,000 ஆண்டுகால நம்பிக்கை சிதைந்தது மட்டுமன்றி நீர் கெட்டது, கிணறுகள் வறண்டன, நிலம் மலடானது.

இந்தச் சிதைவையும் இதற்கான காரணத்தையும் அறிந்த சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக முகிழ்த்தனர். கிராமத்து மக்களின் கதைகளிலும், பழமொழிகளிலும் விடுகதைகளிலும், நாட்டுப்புற இலக்கியங்களிலும் புதைந்து கிடக்கும் விவசாய அறிவை மீட்டெடுத்து அதை அறிவியல் விளக்கங்களுக்கு உட்படுத்தி விவசாயிகளிடமே திரும்பத் தந்தனர். இது அவர்களுக்கு புதிய அறிவைக் கொடுப்பதாக அல்லாமல் அவர்தம் அறிவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் "விவசாயிகளிடமிருந்து விவசாயிகளுக்காக' இயக்கமாகத் தொடங்கியது இன்று தமிழகத்தின் எல்லா வட்டங்களுக்குமாகப் பரவியுள்ளது. இவர்கள் இத்துடன் நிற்கவில்லை. உலகில் உள்ள பலவகையான இயற்கை விவசாய முறைகளையும் அறிந்து தத்தமது பண்ணைச் சூழலுக்கும், கிராமச் சூழலுக்கும் ஏற்ப தன்மயப்படுத்தி பரப்பினர். வேளாண் பல்கலைக்கழகம் அறிவதற்கு முன்பே முதலமைச்சர் கருணாநிதி செம்மை நெல் சாகுபடி என்று பெயரிடப்பட்ட சாகுபடி முறையை 1999-லேயே தமிழக விவசாயிகள் கடைப்பிடித்து ஒற்றை நாற்று நடவு என்று பெயரிட்டுப் பரப்பினர். இவையனைத்தும் அரசின் உதவியோ, வேறு வெளி உதவிகளோ இன்றி நடந்தேறியது.

இயற்கை வழியில் விவசாயிகள் பெற்ற தன்னம்பிக்கையும், சுயசார்பையும் கண்ணுற்ற பிற விவசாயிகளும் பல்கலை அறிவியல் மீது நம்பிக்கையற்றுப் போயினர். இவ்விரு பிரிவினரும் பல்கலைக்கழகத்தின் அறிவைக் கேள்விக்குறியாக்குகின்றனர். பயிர் விளைச்சல் போட்டிக்கு அழைக்கின்றனர். கம்பெனிகளுக்குத் தன்னை தாரை வார்த்துக் கொடுத்துவிட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர். மரபணு மாற்றுப் பருத்தியை ஆதரிக்கத் தொடங்கிய பின் வேளாண்மைப் பல்கலை எத்தனை பருத்தி ரகங்களை வெளியிட்டுள்ளது என்று வினா தொடுக்கின்றனர். செலவுமிக்க பி.டி. பருத்தி மூலம் அதிகம் விளைகிறதா, புழு கட்டுப்படுகிறதா அல்லது பல்கலைக்கழகமே பாராட்டிப் பரப்பிய எளிய ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையில் அதிகம் விளைகிறதா, புழுக்கள் கட்டுப்படுகிறதா என்று ஒப்பீட்டாய்வை ஏன் செய்யவில்லை என்கின்றனர். ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையில் எல்லா வணிகப் பயிர்களிலும் 30 - 50 சதவீதம்வரை விளைச்சலை அதிகப்படுத்த முடியும் என்று சொன்ன பல்கலைக்கழகம் இப்போது ஏன் அம்முறைகளைப் பற்றிப் பேசுவதில்லை, அதை ஏன் அமுக்கிவிட்டது என்று கேட்கின்றனர்.

இப்படி விவசாயிகளும், விவசாய சங்கத் தலைவர்களும் கேள்விகள் கேட்பது பல்கலைக்கழகத்திற்கு மட்டும் நெருடலாக இருக்கவில்லை. இந்திய விவசாயிகளின் எண்ணிக்கையை 70 சதத்திலிருந்து 20 - 25 சதமாகக் குறைக்க வேண்டும், கம்பெனிகள் விவசாயத்தைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற உலகமய, உலக வங்கிப் போக்குகளுக்கு எதிராக இருக்கிறது.

ஒவ்வொரு விவசாயியும் நடமாடும் விவசாயக் களஞ்சியமாக மாறுவதும் இரவல் அறிவின் அர்ச்சகர்களுக்கு நெருடலாக இருக்கிறது. இவை அடுத்த 10 - 20 ஆண்டுகளில் நடந்தேற வேண்டிய "சில' திட்டங்களை நடந்திடாது தடுத்துவிடும் என்பதால் தமிழக அரசைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். அதன் வெளிப்பாடே பட்ஜெட் தொடரின் கடைசி நாளன்று எவ்வித விவாதங்களும் இன்றி நிறைவேற்றப்பட்ட 30 சட்ட மசோதாக்களில் ஒன்றான இச்சட்டம். தமிழ்நாடு மாநில வேளாண் மன்றச் சட்டம் - 2009 என்ற பெயரில் நிறைவேற்றப்பட்ட இம் மசோதாவை ஆதரித்து வாக்களித்த உறுப்பினர்கள் ஆற அமர அதைப் படிக்கும்போது, ஓர் இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமையைப் பறிக்கக்கூடிய ஒரு மோசமான சட்டத்திற்கு வாக்களித்தோம் என்பதை உணர்வார்கள்.

தமிழக முதல்வர் கருணாநிதியின் முன் இப்போது இரு வழிகள் உள்ளன. தனக்கும் தம் ஆட்சிக்கும் பழியைச் சேர்க்க இருக்கும் இந்தச் சட்டத்தை முற்றாக ரத்து செய்வது. ஏனெனில் இத்தகு மன்றத்திற்கு எவ்விதத் தேவையும் இல்லை. மற்றொன்று தமது அரசு கம்பெனிகளின் போக்கில் போகிறது என்பதைக் காட்டும்விதமாக இம்மசோதாவை உடனே சட்டமாக்குவது.

முடிவு முதல்வரிடம்!


கட்டுரையாளர் : ஆர். செல்வம்

நன்றி : தினமணி


No comments: