Friday, March 13, 2009

வீடியோ கால் வசதியுடன் 3ஜி சேவை எப்போது?

சென்னையில், 'வீடியோ கால்' வசதியுடன் கூடிய 3ஜி சேவை வர்த்தக ரீதியாக மக்களுக்கு கிடைக்க ஆகஸ்ட் மாதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொபைல் போன் துறையில் புதிய புரட்சி மூன்றாம் தலைமுறை, '3ஜி' சேவை. இதில், பேசுபவரும் எதிர்முனையில் இருப்பவரும் முகங்களை பார்த்துக்கொள்ளும் வீடியோ கால் வசதி, வீடியோ கான்பரன்சிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இந்தியாவின் சில முக்கிய நகரங்களில் இந்த சேவை வர்த்தக ரீதியாக துவக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் சென்னையில் முதல்வர் கருணாநிதியால், '3ஜி' சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பி.எஸ்.என்.எல்., தலைவர் குல்தீப்கோயல், ஏப்ரல் இறுதியில் இச்சேவை வர்த்தக ரீதியாக அமலுக்கு வரும் என்று அறிவித்திருந்தார். ஆனாலும், '3ஜி' சேவை சென்னையில் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாதம் வர்த்தக பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரி ஒருவர் கூறுகையில், ''3 ஜி சேவை துவக்குவதற்கு சென்னையில் 600 '3ஜி' பி.டி.எஸ்., கருவிகள் டவர்களில் பொருத்தப்பட வேண்டும். இதற்காக புதிய டவர்கள் அமைக்கப்பட வேண்டியதில்லை; ஏற்கனவே உள்ள டவர்களிலும் அமைக்கலாம். இந்த வகையில் தற்போது 25 மட்டுமே பொருத்தப் பட்டுள்ளது. தொடர்ந்து இப்பணிகள் நடந்து வருகின்றன. முழுமையாக சென்னையில் 3 ஜி சேவை வர்த்தக ரீதியாக பயன் பாட்டிற்கு வர ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாதம் ஆகலாம். மேலும், சென்னைக்கு முதல் கட்டமாக 10 ஆயிரம் இணைப்புகள் வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
'3ஜி' கட்டண விவரம்: பி.எஸ். என்.எல்., நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு எல்.ஜி., நிறுவனத்துடன் இணைந்து 3ஜி மொபைல் போனை 7000 ரூபாயிலும், 3 ஜி சிம்கார்டை 300 ரூபாயிலும் வழங்குகிறது. இதில் போஸ்ட் பெய்டு மற்றும் பிரீபெய்டு என இரண்டு திட்டங்களும் உள்ளன. குறிப்பாக போஸ்ட் பெய்டு திட்டத்தில் மாத வாடகை 1000 ரூபாய். வாய்ஸ் காலுக்கு நிமிடத்திற்கு 10 காசுகள், உள்ளூர் வீடியோ காலுக்கு நிமிடத்திற்கு 2 ரூபாய், எஸ்.டி.டி., வீடியோ காலுக்கு நிமிடத்திற்கு 3 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் இதில், 1600 இலவச கால்களும், 75 இலவச வீடியோ கால்களும் அளிக்கப்படுகிறது. இரண்டாவது திட்டத்திற்கு 2500 ரூபாய் மாத வாடகை. இதில் உள்ளூர் வீடியோ காலுக்கு ஒரு ரூபாயும், எஸ்.டி.டி.,க்கு 2 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற சலுகைகள் இதற்கும் பொருந்தும்.
நன்றி : தினமலர்


No comments: