Sunday, August 23, 2009

கமிஷன் உயருமா? பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஏக்கம்

சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு கமிஷன் உயர்வு அறிவித்தது போல், தங்களுக்கும் கமிஷனை உயர்த்தி அறிவிக்க வேண்டுமென, பெட்ரோலிய அமைச்சகத்திற்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், முகவர்கள் மூலமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் சப்ளை செய்து வருகின்றன. இப்பணியைச் செய்யும் முகவர்களுக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் உத்தரவுப்படி, எண்ணெய் நிறுவனங்கள் கமிஷன் வழங்கி வருகின்றன. பொதுமக்களுக்கு எல்.பி.ஜி., சிலிண்டர்களை சப்ளை செய்யும் முகவர்களுக்கு, மே மாதம், ஒரு ரூபாய் 40 காசு கமிஷனை உயர்த்தி அறிவிப்பு வெளியானது. இதன்படி, 325 ரூபாய் சமையல் காஸ் சிலிண்டரை விற்றால், முகவருக்கு 21 ரூபாய் 94 காசு கமிஷனாக கிடைக்கும்.
எல்.பி.ஜி., சிலிண்டர் வினியோகிக்கும் முகவர்கள் 6.8 சதவீதத்தை கமிஷனாக பெற்று வருகின்றனர். ஆனால், பெட்ரோல், டீசல் வினியோகிக்கும் முகவர்களான பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கான கமிஷன் உயர்த்தப்படவில்லை. இவர்களுக்கு பெட்ரோல் விற்பனைக்கு 2.26 சதவீதமும், டீசல் விற்பனைக்கு 1.8 சதவீதமும் கமிஷன் வழங்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையில் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் கொண்டுவந்தாலும், அதை வினியோகிக்கும் பங்க் உரிமையாளர்களுக்கு எவ்வித பலனும் இல்லாத நிலை தொடர்கிறது. விடுமுறை நாளின்றி பெட்ரோல் டீசல் வினியோகத்தில் ஈடுபடும் தங்களின் கமிஷன் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என பங்க் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 14 மணி நேரமும், அதிகபட்சமாக 24 மணிநேரமும் பெட்ரோல் 'பங்க்'களை இயக்கி வருகிறோம். இதனால் மின்சாரம், தொழிலாளர் சம்பளம் என, பெரும் தொகையை செலவிட வேண்டி வருகிறது. எங்களது கமிஷனை உயர்த்தித் தர எண்ணெய் நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. 'பங்க்'களில் பெட்ரோல் ஆவியாதல், டீசலை கையாளும்போது ஏற்படும் இழப்புகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் இழப்பீடு வழங்குகின்றன. மாதம் ஒன்றுக்கு 50 ஆயிரம் லிட்டருக்குள் விற்பனை செய்யும் பெட்ரோல் 'பங்க்'களில், பெட்ரோலுக்கு 0.75 சதவீதமும், டீசலுக்கு 0.25 சதவீதமும் எண்ணெய் நிறுவனங்கள் இழப்பு வழங்குகின்றன.
ஒரு மாதத்துக்க்கு 50 ஆயிரம் லிட்டருக்கு மேல் விற்பனை செய்யும் பெட்ரோல் 'பங்க்'களில் பெட்ரோலுக்கு 0.6 சதவீதமும், டீசலுக்கு 0.2 சதவீதமும் இழப்பு வழங்கப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் குறிப்பிடும் இழப்பைத் தவிர, பைப்லைன் லீக், பம்ப் லீக் என பல வகையில் பெட்ரோல், டீசல் வீணாகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் வழங்கும் இழப்பீடும் போதுமானதாக இல்லை. இதனால் இந்த இழப்பு தொகை எங்கள் தலை மேல் விழுகிறது. இது தவிர, வாகனங்களுக்கு இலவச காற்று வழங்க தனியாக ஒருவரை நியமிக்க எண்ணெய் நிறுவனங்கள் கட்டாயப்படுத்துகின்றன. இதனால், இதற்கான சம்பளம் மற்றும் மின் செலவையும் ஏற்க வேண்டியுள்ளது. எல்.பி.ஜி., சிலிண்டர்களை பொறுத்தவரை அது, 'பேக்' செய்யப்பட்ட பொருள். அதில் இழப்பு ஏதும் ஏற்படாது. அவர்களுக்கு அதிக கமிஷன் வழங்கும் எண்ணெய் நிறுவனங்கள், எங்களுக்கு குறைவாக கமிஷனை வழங்குகின்றன. ஒரு காலத்தில், பெட்ரோல் பங்க் வைத்திருந்தவர்கள் வசதியானவர்களாக பார்க்கப்பட்டனர். தற்போது, தொடர்ந்து தொழிலை நடத்த வேண்டுமே என்ற நோக்கத்திற்காக பலர் பங்க் நடத்தி வருகின்றனர். இந்த நிலை மாறி, தொழில் மேம்பட, எண்ணெய் நிறுவனங்கள் கமிஷன் தொகையை உயர்த்தித் தர வேண்டும். நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி பெட்ரோலிய நிறுவனங்கள் கமிஷன் உயர்வை தள்ளிப் போட முயற்சிக்கின்றன. இதை ஏற்காமல், கமிஷனை உயர்த்தி வழங்க வேண் டும் என எண்ணெய் நிறுவனங் களை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்


No comments: