பிளாஸ்டிக் பொருள்களைக் கட்டுப்படுத்தும் கடுமையான சட்டத்தைத் தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று ஒரு பொதுநலவழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு ஏற்கெனவே அறிமுகப்படுத்திய பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி, விற்பனை, இருப்பு வைத்தல் தொடர்பான சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
20 மைக்ரான் திடம் குறைவான பிளாஸ்டிக் கைப் பைகள் தயாரிப்புக்கு இந்தச் சட்ட மசோதா தடை விதித்திருந்தது. இதற்குப் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இச்சட்டத்தால் தொழில் நசிவும், பல்லாயிரம் பேருக்கு வேலையிழப்பும் நேரிடும் என்று அவர்கள் கூறியதால், சட்ட மசோதாவைக் கிடப்பில் போட்டது தமிழக அரசு.
மகாராஷ்டிர மாநிலத்திலும் இதேபோன்றுதான் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள் அரசை அச்சுறுத்தினர். ஆனாலும், 2005-ம் ஆண்டு பெய்த பெருமழையில் மும்பை மாநகரம் முழுவதுமே வெள்ளத்தில் மிதக்கவும், மக்கள் வீடு திரும்ப முடியாத அளவுக்கு தனித் தீவுகள் உருவாகவும் நேர்ந்தபோது, அதற்குக் காரணம் சாக்கடையை அடைத்துக்கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும், மறுசுழற்சி செய்யவியலாத பிளாஸ்டிக் பொருள்கள் என்று தெரியவந்தது. அதன்பிறகு எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், சட்டத்தை அமல்படுத்தியது மகாராஷ்டிர அரசு. 50 மைக்ரான் திடம் குறைவாக கைப்பைகள் உற்பத்தி, விற்பனை கூடாது என்றும், ஒவ்வொரு பையின்மீதும் உற்பத்தியாளர் தனது முகவரியை அச்சிட வேண்டும் என்றும் சட்டம் வகை செய்துள்ளது. இதுவரை விதிமுறை மீறலுக்காக 21 நிறுவனங்கள் தண்டிக்கப்பட்டுள்ளன.
பிளாஸ்டிக் பைகளைத் தடை செய்தால் மும்பையில் பால் விநியோகம் (நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டர்) மிகப் பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரும் என்றுகூட அச்சம் இருந்தது. ஆகவே, 50 மைக்ரான் திடம் குறைவான பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. பால் பாக்கெட், சமையல் எண்ணைய் பாக்கெட். ஷாம்பு பாக்கெட் (மிகச் சிலவற்றைத் தவிர) அனைத்துமே 50 மைக்ரான் தடிமன் கொண்டவை. இந்த பிளாஸ்டிக் பைகள் மறுசுழற்சிக்கு ஏற்றவை.
இந்தியாவில் ஆண்டுக்கு 45 லட்சம் டன் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் குறைந்தது 40 சதவீதம் "பேக்கேஜ்' துறை பயன்பாட்டில் உள்ளன. 50 மைக்ரான் திடம் குறைவான பிளாஸ்டிக் கைப் பைகளுக்குத் தடை விதிக்கப்படுமேயானால், 90 சதவீத பிளாஸ்டிக் கைப் பைகளை மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியும்.
மறுசுழற்சிக்கு லாயக்கற்ற பிளாஸ்டிக் பொருள்கள் என்று கருதப்படுபவை- மெலிதான பிளாஸ்டிக் கைப் பைகள், ஒருமுறை பயன்படுத்தப்படும், குவளைகள், கோப்பைகள், உணவுகள் அடைக்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டப்பாக்கள், தட்டுகள், குடிநீர் போத்தல்கள் ஆகியவைதான். இவை பெரும்பாலும் ஓட்டல்களில்தான் பயன்படுத்தப்படுகின்றன. ஓட்டல்கள் 50 மைக்ரான் தடிமனுக்குக் குறைவான பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதித்தாலே போதும், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு மிகமிகக் குறைந்துவிடும். தற்போது பல ஓட்டல்களில் பார்சலுக்குத் தனிக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், 50 மைக்ரான் திடம் கொண்ட பிளாஸ்டிக் கைப் பைகளையே பயன்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதால் அவர்களுக்குப் பெரிய இழப்பு ஏற்படப்போவதில்லை.
ஓட்டல்துறைக்கு அடுத்தபடியாக, மறுசுழற்சிக்குப் பயன்படாத பிளாஸ்டிக் குப்பை என்பது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போத்தல்கள்தான். கோலா, பெப்ஸி பானங்களின் பெட் பாட்டில்களை வாங்கிக்கொள்ளும் பழைய பேப்பர் கடைக்காரர்கள், நகரம் முழுவதிலும் இறைந்து கிடக்கும் இந்தக் குடிநீர் போத்தல்களை வாங்குவதே கிடையாது. பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரிப்பவர்களும், இந்த போத்தல்களின் மூடிக்கு மட்டுமே மரியாதை கொடுத்து எடுத்துச் செல்கின்றனர். நகரச் சாக்கடைகளிலும், ரயில் பாதையிலும், நெடுஞ்சாலைகளிலும் இந்த குடிநீர்ப் போத்தல் குப்பைகள் முடிவற்றுக் கிடக்கின்றன. பால் பாக்கெட்டுகளைப் போலவே 50 மைக்ரான் திடம் கொண்ட, வண்ணம் இல்லாத பிளாஸ்டிக் பைகளில் ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் குடிநீர் விற்கப்படுமேயானால், விலை அதிகம் இல்லாமலும் மறுசுழற்சிக்கு உதவி செய்யும் வகையிலும் அமையும்.
தமிழக அரசின் மசோதாவில் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள் அதைப் பயன்படுத்தும் தொழிற்கூடங்கள் மட்டுமே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன. இதைப் பயன்படுத்தித் தூக்கியெறியும் பொறுப்பற்ற பொதுமக்கள் கண்டுகொள்ளப்படவில்லை. எந்தவொரு பிளாஸ்டிக் குப்பையையும் தெருவில் வீசியெறியும் நபருக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய விதியையும் அந்த மசோதாவில் சேர்ப்பதுதான், தமிழகத்திற்கு மிகப்பெரும் நன்மையைக் கொண்டுவரும்.
நன்றி : தினமணி
Friday, July 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ஒரே ஒரு Add-தமிழ் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.
உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
அதற்கான முகவரி : www.findindia.net
thanks ram
thanks Ram
Post a Comment