Thursday, March 26, 2009

ரூ.4 முதல் ரூ.25 லட்சம் வரையுள்ள 30,000 வீடுகள் : ரஹேஜா டெவலப்பர்ஸ் திட்டம்

ரூ 4 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சம் வரை விலையில், 30,000 அடுக்குமாடி வீடுகளை தேசிய தலைநகர் பகுதியில் கட்ட, பிரபல கட்டுமான நிறுவனமான ரஹேஜா டெவலப்பர்ஸ் திட்டமிட்டிருக்கிறது. இன்னும் இரண்டு வருடங்களில் இவைகள் கட்டி முடிக்கப்பட இருக்கிறது. ரியல் எஸ்டேட் தொழில் மந்தமாக இருக்கிறது என்று நிலவி வரும் செய்தி உண்மையல்ல. வீடுகளுக்கு இப்போதும் நல்ல டிமாண்ட் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதுவும் கட்டுப்படியாகும் விலையில் இருக்கும் வீடுகளுக்கு தேவை இருந்து கொண்டே தான் இருக்கிறது. எனவே தேசிய தலைநகர் பகுதியில் 20,000 வீடுகள் கட்டுவதற்கு நாங்கள் அரசிடம் அனுமதி பெற்று வைத்திருக்கிறோம் என்றார் ரஹேஜா டெவலப்பர்ஸின் மேலாண் இயக்குனர் நவின் ரஹேஜா. இன்னும் இரண்டு வருடங்களில் நாங்கள் 30,000 வீடுகளை கட்ட திட்டமிட்டிருக்கிறோம். வீடுகளின் அளவை பொருத்து, அவைகளில் விலை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சம் வரை இருக்கும். குறைந்த பட்சமாக ஒரு வீடு 300 சதுர அடி பரப்பளவு கொண்டதாக இருக்கும்.கட்டுமானப்பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் துவங்கி, இரண்டு வருடங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்று சொன்ன ரஹேஜா, வீட்டை புக் செய்தவர்களுக்கு 2011 ல் வீடுகள் கொடுக்கப்படும் என்றார். மேலும் இந்த திட்டத்திற்காக நாங்கள் யாருடனும் கூட்டு சேர்வதாக இல்லை என்றும் சொன்னார். இருந்தாலும் இந்த திட்டத்திற்காக எவ்வளவு பணம் முதலீடு செய்யப்படுகிறது என்பதை அவர் சொல்லவில்லை.
நன்றி : தினமலர்


No comments: