Monday, February 16, 2009

பீர் விற்பனையை 100 சதவீதம் அதிகரிக்க திட்டம்: டாஸ்மாக் பிரமாண்ட ஏற்பாடு

தமிழக மதுக்கடைகளில் நடப்பாண்டு பீர் விற்பனையை 100 சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஆறாயிரத்து 852 டாஸ்மாக் மதுக்கடைகளில், கடந்த ஆண்டு பீர் விற்பனை 62 சதவீதம் வரை உயர்வு ஏற்பட்டது. இந்த விற்பனை உயர்வை நடப்பு ஆண்டில் 100 சதவீதமாக அதிகரிக்க செய்ய 'டாஸ்மாக்' நிறுவனம் முடிவு செய்துள்ளது. தமிழக மதுக்கடைகளில், கல்யாணி ப்ளக் லேபிள் லார்ஜர், கிங்பிஷர் சூப்பர் ஸ்ட்ராங் பிரிமியம், கிங்பிஷர் பிரிமியம் லார்ஜர், கிங்பிஷர் சூப்பர் ஸ்ட்ராங் கோல்டு பிரிமியம், மார்கோபோலா சூப்பர் ஸ்ட்ராங், ஜிங்காரோ மெகா ஸ்ட்ராங் பிரிமியம், புல்லட் சூப்பர் ஸ்ட்ராங், ப்ளக் நைட் சூப்பர் ஸ்ட்ராங், கோல்டன் ஈகிள் டீலக்ஸ் பிரிமியம், மெட்ராஸ் ப்ள்ஸ்னர் டீலக்ஸ், கோல்டன் ஈகிள் லார்ஜர், ஹைவார்ட்ஸ் 5000 சூப்பர் ஸ்ட்ராங் பீர் ஆகியன விற்பனை செய்யப்படுகின்றன. பீர் விற்பனை மாதம் சராசரியாக 22 லட்சத்து 16 ஆயிரத்து 500 கேஸ்கள் (ஒரு கேஸில் 12 பாட்டில் இருக்கும்) விற்கிறது. தினந்தோறும் சராசரியாக 73 ஆயிரத்து 880 கேஸ் என்ற அளவில் இருந்த பீர் விற்பனை, கடந்த ஆண்டு கோடை காலத்தில், ஒரு லட்சத்து 52 ஆயிரம் கேஸ் என்ற அளவுக்கு உயர்ந்தது. கடந்த ஆண்டு பீர் விற்பனை 57 சதவீதம் முதல் 62 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், பிராந்தி, ரம், ஜின் போன்றவற்றை உள்ளடக்கிய ஐ.எம்.எப்.எல்., மதுபானங்களின் விற்பனை 22 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.
பீர் விற்பனை அதிகரித்தது போல் ஷா வாலாஸ் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் கோல்கொன்டா ரூபீ பிரிமியம் ஒயின் விற்பனை 37 சதவீதமாக உயர்ந்தது. தமிழகத்தில், மார்ச் மாதம் முதல் வாரம் துவங்கி செப்டம்பர் மாதம் கடைசி வாரம் வரை வெயிலின் தாக்கம் அதிகரிப்பது வழக்கம். இந்த கால கட்டத்தில் 'டாஸ்மாக்' கடைகளில் பீர் விற்பனை அதிகரிக்கும் நிலையில் ஐ.எம்.எப். எல்., மது விற்பனையில் சரிவு ஏற்படும். இந்த சரிவை பீர் விற்பனை மூலம் ஈடு செய்து 'டாஸ்மாக்' மது வருமானத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது தினந்தோறும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக விற்கும் கடைகளில் தினமும் ஐந்து பெட்டிகளும், ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் விற்கும் கடைகளில் பத்து பெட்டிகளும் கூடுதலாக கோடை காலத்தில் விற்பது வழக்கம். ஆனால் நடப்பு ஆண்டு இந்த விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கை குறித்து 'டாஸ்மாக்' ஏரியா சூப்பர்வைஸர்களிடம் ஆலோசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஒரு லட்சத்துக்கு குறைவாக விற்பனை நடக்கும் 'டாஸ்மாக்' கடைகளில், பீர் விற்பனை எட்டு கேஸ் ஆகவும், ஒரு லட்சத்துக்கும் அதிகமாக மது விற்பனை நடக்கும் கடைகளில் பீர் விற்பனையை 20 பெட்டிகளாக அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளனர். தமிழக டாஸ்மாக் கடைகளில் மாதத்துக்கு சராசரியாக 22 லட்சத்து 16 ஆயிரத்து 483 கேஸ் பீர் விற்பனை நடக்கிறது. இந்த விற்பனை அளவை 45 லட்சம் கேஸ்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டு பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. விற்பனை அதிகரிக்கும் நோக்கத்துடன் 'டாஸ்மாக்' கடைகளில் குளிரூட்டும் வசதி இல்லாத கடைகளில், புதிதாக குளிரூட்டும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கவும், குளிர் சாதன வசதிகளை கொண்டுள்ள கடைகளில் விரிவுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகளில் பிரிட்ஜ் வைக்க டெண்டர் விடப் பட்டுள்ளது. தொடர்ந்து மற்ற மண்டலங்களிலும் டெண்டர் கோரப்பட இருப்பதாக, 'டாஸ்மாக்' உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தமிழக 'டாஸ்மாக்' கடைகளில் மே மாதம் முதல் வாரம், 50 சதவீதம் அளவுக்கு பீர் விற்பனை அதிகரிப்பது வழக்கம். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக, தற்போது வெளியிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. 'டாஸ்மாக்' மது கடைகளில், தற்போது 20 சதவீதம் அளவு பீர் விற்பனை அதிகரித்துள்ளது. இதை 100 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நன்றி : தினமலர்


No comments: