அவர் மேலும் கூறியதாவது: உலக நிதி நெருக்கடியால், இந்த ஆண்டு சிரமமான ஆண்டாக மாறியுள்ளது. இந்தக் கால கட்டத்தில், இடைக்கால பட்ஜெட்டை சமர்ப்பிக்க கடும் பணியாற்றியுள்ளார் அமைச்சர் பிரணாப் முகர்ஜி. அவரின் செயல் பாராட்டத்தக்கது. உலக அளவில் கடும் மந்த நிலை நிலவினாலும், 2008 -09ம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி
7.1 சதவீதத்தை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அது திருப்தி அளிக்கும் விஷயம். இவ்வாறு சிதம்பரம் கூறினார். உலக வங்கி உதவும்: இதனிடையே பட்ஜெட் தாக்கலுக்குப்பின் வழக்கமாக நிதித்துறை செயலர் உட்பட அதிகாரிகள் நிருபர்களிடம் பேசினர். பொருளாதார விவகாரச் செயலர் அசோக் சாவ்லா, நிதித்துறை செயலர் அருண் ராமநாதன் ஆகியோர், 'நடப்பாண்டில் சுணக்கம் தீர தனி நிதி உதவி இருக்காது. தேவைப்பட்டால் அரசு உதவும். 'மேலும் உலக வங்கியிடம் இருந்து 21 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி பெறப் போகிறோம். இதில், 15 ஆயிரம் கோடி பொதுத்துறை வங்கிகள் நிதி ஆதாரத்தை வலுவூட்ட தரப்படும். எஞ்சியுள்ள பணம் பவர் கிரிட் கார்ப்பரேஷன் போன்ற நிறுவன வளர்ச்சிக்கு செலவழிக்கப்படும். 'இன்றைய நிலையில் மொத்த வளர்ச்சியில் நிதிப்பற்றாக்குறை 7.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது' என்றனர். அதே சமயம் கவர்ச்சி இல்லாத பட்ஜெட் என்பதால், சென்செக்ஸ் புள்ளிகள் 329 குறைந்தது. நேற்றைய பங்குச் சந்தை குறியீட்டெண் 9,305.45 ஆகக் குறைந்தது.
உள்கட்டமைப்புக்கு ரூ.லட்சம் கோடி: மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறைக்கு, 99 ஆயிரத்து 534 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குடிநீர் வினியோகம், மின்சாரம், குடியிருப்பு மற்றும் சாலை உட்பட நாட்டின் கிராமப்புற உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டமான 'பாரத் நிர்மாண்' திட்டத்திற்கு 40 ஆயிரத்து 900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. ஜவகர்லால் நேரு தேசிய ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்காக 11 ஆயிரத்து 842 கோடி ரூபாயும், கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக 14 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கப்படுகிறது. இந்த இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் 'பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா' திட்டத்திற்கும், 8,800 கோடி ரூபாய் கிராமப்புறக் குடியிருப்பிற்கும், 9,992 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத் திட்டத்திற்கும் செலவிடப்படும். இவை பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படும். கடந்த 2005ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பாரத் நிர்மாண் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி 261 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தாண்டு 40 ஆயிரத்து 900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment