கடன் மற்றும் டிபாசிட்டுகளுக்கான வட்டியை குறைக்க தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளும் முன்வந்துள்ளன. இரண்டு வாரத்திற்குள் வட்டி குறைப்பை அமல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளன. பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், பல்வேறு துறையினருக்கு எளிதாக கடன் கிடைக்கவும், அதற்கான வட்டியை குறைப்பது தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங், பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். இதில், வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டியை குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் தலைவர்களுடன் நிதித்துறை செயலர் அருண் ராமநாதன் நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்திற்கு பின், நிருபர்களிடம் பேசிய அருண் ராமநாதன் கூறுகையில், 'பல்வேறு கடன்களுக்கான வட்டியை குறைப்பதாக தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கித் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். இதன் படி, வீட்டுக் கடன், தனிநபர் கடன், வாகன கடன் மற்றும் கம்பெனிகளுக்கான கடன் ஆகியவற்றுக்கான வட்டி குறைக்கப்படும்.
'இது தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்து ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைக்கு உட்பட்டு இரண்டு வாரத்திற்குள் அறிவிப்பதாக தெரிவித்துள்ளன' என்றார்.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் சார்பில் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாக இயக்குனர் சந்தா கோச்சர் கூறுகையில், 'பொருளாதாரத்தின் நலன் கருதி வட்டியை குறைக்க ஒரு மித்த முடிவு எடுக்கப்பட்டது. இருப்பினும் நாங்கள் அன்றாட நிலைமையை ஆய்வு செய்து விரைவில் இது தொடர்பான அறவிப்பை வெளியிடுவோம்' என்றார். இதற்கிடையில், பல்வேறு கடன்களுக்கான வட்டிக்கு 75 அடிப்படை புள்ளிகளை குறைப்பதாக பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன. பல்வேறு மாநிலங்களில் தேர்தல், அதற்குப் பின் லோக்சபா தேர்தல் வரும் சமயத்தில், பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக மேற்கொண்ட சில பொருளாதார நடவடிக்கைகள், தொழில்துறையிடம் நம்பிக்கை ஏற்படுத்த உதவும்.
வெளிப்படையாக அவர், தொழிலதிபர்களிடம், 'வேலைவாய்ப்பைப் பறித்து விடாதீர்கள்' என்று கூறி அதை உத்தரவாதமாகப் பெற்றவிதம் அவரை நல்ல ஒரு பொருளாதார சிந்தனையாளர் என்று காட்டியிருக்கிறது. இதன் பலன் தேர்தலில் காங்கிரசுக்கு வரும் என்றாலும் வங்கிகள் வட்டி விகிதக் குறைப்பு நடவடிக்கை மூலம் பணப்புழக்கத்திற்கும், பொருளாதார நெருக்கடியைத் தளர்த்துவதற்கும் பிரதமர் முன்னுரிமை தருகிறார் என்ற கருத்து எழுந்திருக்கிறது.
நன்றி : தினமலர்
Thursday, November 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment