கல்வியைத் தொடர்ந்து இப்போது மருத்துவத் துறையையும் முழுமையாகத் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பது ஆட்சியாளர்களின் எழுதப்படாத கொள்கைகளில் ஒன்று என்று தோன்றுகிறது. முதலில் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் தனியார் ஒத்துழைப்பு என்று தொடங்கி, இப்போது அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பைத் தனியாரிடம்விடும் அளவுக்குத் தனியார்மயக்கொள்கை செயலாக்கம் பெற்றிருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளுக்கு ஒட்டுமொத்தமாக மூடுவிழா நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தமிழக அரசு மட்டுமே சுகாதாரத் துறையைத் தனியாருக்குத் தாரை வார்க்க முன்வந்திருப்பதாக யாரும் நினைத்துவிட வேண்டாம். உண்மையில், தமிழக அரசு இந்தப் பிரச்னையில் ஏனைய மாநிலங்களைவிட சற்று அடக்கியே வாசிக்கிறது என்பதை ஒத்துக்கொண்டாக வேண்டும். ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்கிற மத்திய அரசின் வழிகாட்டுதலை இதுவரை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாகவே அரசு மருத்துவமனைகளையும், ஆரம்பச் சுகாதார நிலையங்களையும் தனியாருக்குத் தாரை வார்த்துவிடும் முயற்சி அகில இந்திய அளவில் முனைப்புடன் அரங்கேற்றப்பட்டு வருகிறது. மக்கள் வரிப்பணத்தில், அரசு நிலத்தில் முக்கியமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் முதல்கட்டமாக பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த மத்திய சுகாதாரத் துறை வற்புறுத்தி வருகிறது.
அடுத்தகட்டமாக, எக்ஸ்-ரே, ரத்தப்பரிசோதனை மையம் போன்றவைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து நடத்துவது என்று தீர்மானிக்கக்கூடும். காலப்போக்கில் தனியாருக்கே அரசு நிறுவனங்களைத் தாரைவார்ப்பதுபோல இந்த ஆரம்பச் சுகாதார நிலையங்களையும் கொடுத்துவிடுவது என்பதுதான் மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டம் என்று கருதவும் இடமிருக்கிறது. கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஆரம்பச் சுகாதார நிலையங்களை ஏற்று நடத்த எந்தத் தனியார் மருத்துவமனைதான் தயங்கும்?
"கல்வி, மருத்துவம் போன்றவை அரசின் செயல்பாடுகள் அல்ல. இவைகளிலிருந்து அரசு முழுமையாக விடுபட்டாக வேண்டும்' என்கிற தனியார்மயவாதிகளின் கருத்து ஏற்புடையதல்ல. நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையே இந்தியா ஒரு ஜனநாயக சமதர்ம அரசு மட்டுமல்ல, மக்கள் நலம்பேணும் அரசும்கூட என்பதுதான். கல்வி, சுகாதாரம் போன்றவை அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் தனியாரிடம் விடப்பட்டிருக்கலாம். ஆனால், இந்தியாவைப் போன்ற வறுமைக்கோட்டுக்குக்கீழே பல கோடி மக்கள் வாழும் நாட்டில் தனியாரிடம் இவற்றை ஒப்படைப்பது என்பது மிகப்பெரிய அரசியல் சமூக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
நியாயமாகப் பார்த்தால், தமிழக கார்ப்பரேட் மருத்துவமனைகளின் தரத்தில் நமது அரசு மருத்துவமனைகளைப் பராமரிப்பதுதான் முறையான நல்லாட்சிக்கு அடையாளமாக இருக்கும். கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்கிற பெயரில் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்குத் தமிழக அரசு கட்டணத் தொகையாக (பிரிமியம்) முதலாண்டில் கொடுத்திருப்பது ரூ. 628.20 கோடி. ஆனால், பல்வேறு அறுவைச் சிகிச்சைகளுக்காக அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனம் பயனாளிகளின் சார்பாக மருத்துவமனைகளுக்குக் கட்டணமாகக் கொடுத்திருப்பதோ வெறும் ரூ. 415.43 கோடிதான். மக்களின் வரிப்பணத்தில் சுமார் ரூ. 200 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது தனியார் காப்பீட்டு நிறுவனம். இரண்டாவது ஆண்டுக்கு, அரசு அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு ஒதுக்கியிருக்கும் கட்டணத் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ. 750 கோடி.
இப்படி கோடிக்கணக்கான ரூபாய்களை மக்களின் வரிப்பணத்திலிருந்து தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு வாரி வழங்கும் அரசு, அதை அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்துவதில் செலவிட்டால் அதனால் நிரந்தரமாகப் பயன் கிடைக்குமே என்கிற நியாயங்கள் ஆட்சியாளர்களின் காதில் விழாது. அப்படிச் செய்தால் "கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' என்று ஆட்சியின் சாதனைப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளவும், தேர்தலில் வாக்குவேட்டை ஆடவும் முடியாதுதானே..
சென்னையிலுள்ள பொது மருத்துவமனையைச் சுத்தம் செய்யும் பணி தனியாரிடம் விடப்பட்டது. ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். மாதந்தோறும் ஏழு லட்சம் ரூபாயையும் வாங்கிக்கொண்டு அந்தத் தனியார் நிறுவனம் பெரிதாக எதையும் சாதித்துவிடவும் இல்லை. தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் இயக்குநர் உள்ளிட்ட பலரும் அந்தத் தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்று தெரிவித்திருக்கும் நிலையில், நமது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா?
"சென்னை பொது மருத்துவமனையைப்போல, சென்னையிலுள்ள ஏனைய அரசு மருத்துவமனைகளைப் பராமரிக்கும் பணியையும் தனியாரிடம் கொடுக்க இருக்கிறோம். முறையாகச் செயல்படாவிட்டால் அவர்களது ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்' என்று அறிவித்திருக்கிறார்.
தனியார் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்ந்து மருத்துவமனைகளின் பராமரிப்பிலும், தனியார் நிறுவனங்களின் காட்டில் மழை. மக்கள் வரிப்பணம்தானே, சொந்த முதலா மோசம் போகிறது..!
நன்றி : தினமணி
Saturday, August 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment