Saturday, December 5, 2009

'3 ஜி' ஏலத்தில் 8 லட்ச ரூபாய் : பி.எஸ்.என்.எல்.,க்கு வருமானம்

சென்னையில், பி.எஸ்.என்.எல்., '3 ஜி' மொபைல் போன் எண்கள் ஏலத்தில், எட்டு லட்சம் ரூபாய் சென்னை தொலைபேசிக்கு கிடைத்துள்ளது. அதிகபட்சமாக, ஒரு எண் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மொபைல் போனில் பேசும் இருமுனையில் உள்ளவர்களும் முகம் பார்த்து பேசும் 'வீடியோ கால்' வசதியுடன் கூடிய, '3 ஜி' சேவையை சமீபத்தில் பி.எஸ்.என்.எல்., சென்னையில் அறிமுகப்படுத்தியது. அத்துடன், இந்த சேவைக்கான மொபைல் போன் எண்களில், 292 'பேன்சி' எண்களை ஏலத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.
ஏற்கனவே, சென்னை தொலைபேசி, '2 ஜி' சேவைக்கான எண்களை ஏலத்தில் விட்டு, அதன் மூலம் நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம் சம்பாதித்தது. இதில், ஒரு எண் அதிகபட்சமாக 55 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து '3 ஜி' ஏலத்தையும் பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி நடத்தியது. எஸ்.எம்.எஸ்., மூலம் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில், 'பேன்சி' எண்கள் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு, குறைந்த பட்ச தொகை ஆயிரம், 2,000, 3,000 என நிர்ணயிக்கப்பட்டு நூறின் மடங்காக ஏலம் கேட்க வேண்டும் என்று, நிபந்தனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த ஏலத்தில், 93 எண்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த, '3 ஜி' எண்கள் அனைத்தும் 94455 என துவங்குமாறு அமைந்துள்ளது. இந்த ஏலத்தில் குறிப்பாக 94455 '55555 ' என்ற எண் மட்டும், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, 99999 என முடியும் எண், 77 ஆயிரம் ரூபாய்க்கும், 56789 என முடியும் எண், 62 ஆயிரம் ரூபாய்க்கும், 66666 என முடியும் எண் 30,300 ரூபாய்க்கும், 12345 என முடியும் எண் 30 ஆயிரம் ரூபாய்க்கும், 94455 என முடியும் எண் 28 ஆயிரத்திற்கும், 11111 என முடியும் எண் 15 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் போயுள்ளது. இதன் மூலம், மூலம் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு எட்டு லட்சம் ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி அதிகாரி ஒருவர் கூறுகையில், '' தற்போது விடப்பட்டுள்ள ஏலத்தின் மூலம் சிறந்த லாபம் கிடைத்துள்ளது. ஏலத்தில் எடுக்கப்பட்ட 93 எண்கள் தவிர மீதமுள்ள 199 எண்கள் மீண்டும் அடுத்த ஒருவாரத்தில் ஏலத்தில் விடப்படும். ஏற்கனவே ஏலத்தில் எடுத்த எண்ணை யாராவது வாங்கவில்லை என்றால், அந்த எண்களும் மீண்டும் ஏலத்தில் விடப்படும்,'' என்றார்.
நன்றி : தினமலர்

No comments: