Wednesday, November 4, 2009

குரலை மாற்றும் வசதி கொண்ட செல்பேசிகளால் ஆபத்து

தொழில்நுட்ப வளர்ச்சி வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அது ஏற்படுத்தும் பாதிப்புகள் அச்சுறுத்துபவையாக இருக்கின்றன.

தகவல் தொடர்புக்கான கண்டுபிடிப்புகளில் பெரிய சாதனையாகக் கருதப்படும் தொலைபேசியின் வழித்தோன்றலான செல்பேசி இன்று அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. நம்மில் கணிசமானோரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்பேசிகள் உண்டு.

கையடக்க செல்பேசிகளை விதவிதமான வடிவங்களில், நவீன வசதிகளுடன் அறிமுகம் செய்வதில் தனியார் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதன் விளைவாக டார்ச் லைட்டில் தொடங்கி கேமரா, விடியோ என்று ஒவ்வொரு நாளும் புதுப்புது வசதிகள் செல்பேசிகளில் கூடிக் கொண்டே போகின்றன.

இந்நிலையில், சீன நாட்டுத் தயாரிப்பு செல்பேசிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "வாய்ஸ் சேஞ்சர்' என்ற வசதி பலரின் தூக்கத்தைக் கெடுப்பதாக மாறியிருக்கிறது. சில முக்கிய நிறுவனங்களின் தயாரிப்புகளிலும் இந்த வசதி தற்போது வரத் தொடங்கிவிட்டது.

அதாவது, இந்த வசதியுள்ள செல்பேசிகளில், "வாய்ஸ் சேஞ்சர்' பகுதியில் முதியவர், நடுத்தர வயது ஆண், இளைஞர், குழந்தை, இளம்பெண், நடுத்தர வயது பெண், மூதாட்டி என்று 7 வகையான குரல் பிரிவுகள் இருக்கும்.

இதில், ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு நாம் பேச விரும்பும் நபரைத் தொடர்பு கொண்டால், எதிர் முனையில் இருப்பவருக்கு நம்முடைய குரல் நம் குரலாக ஒலிக்காது; மாறாக, நாம் தேர்ந்தெடுத்த முதியவர் குரலோ பெண் குரலோ ஒலிக்கும் மிகவும் தத்ரூபமாக.

பொழுதுபோக்குக்காக நண்பர்களுடன் அரட்டையடிப்பதற்காக இந்தத் தொழில்நுட்ப வசதியை செல்பேசி நிறுவனங்கள் வழங்கினாலும், சிலர் தவறான வழியில் இந்த வசதியைப் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.

உதாரணமாக, நாம் இளம்பெண் குரலைத் தேர்ந்தெடுத்துப் பேசினால், எதிர்முனையில் இருப்பவர் தன்னிடம் பேசுவது இளம்பெண் என்றுதான் நினைத்துக் கொள்வார்.

இந்த வசதியை தவறாகப் பயன்படுத்துவதால், ஏற்படும் விளைவு எத்தனை மோசமானதாக இருக்கும் என்பதற்கு அண்மையில் மதுரையில் நிகழ்ந்த பொறியாளர் முத்துவிஜயன் கொலைச் சம்பவம் ஓர் உதாரணம்.

மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த முத்துவிஜயனிடம் (24) செல்பேசியில் பேசிய ஒருவர் தனது பெயர் பிரியா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கியுள்ளார். முத்துவிஜயனும் அவரை நம்ப, நாளடைவில் இருவரும் அடிக்கடி பேசத் தொடங்கியிருக்கின்றனர். அனைத்து விஷயங்களைப் பற்றியும் மனம்விட்டு பேசியுள்ளனர். பிரியா தனக்குப் பணம் தேவைப்படும்போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, முத்துவிஜயனிடம் இருந்து பணம் பெற்றிருக்கிறார்.

ஒரு நாள் முத்துவிஜயனுக்கு உண்மை தெரிய வந்தது; ப்ரியா என்ற பெயரில் "வாய்ஸ் சேஞ்சர்' வசதியைப் பயன்படுத்தி தன்னிடம் பேசியது ஓர் ஆண் என்று.

இருவருக்கும் இடையே பிரச்னை வெடித்தது. முத்துவிஜயன் கொல்லப்பட்டார். பெரும் சிரமத்துக்குப் பிறகு எதிரிகளை போலீஸôர் கைது செய்தனர்.

முத்துவிஜயன் ஓர் உதாரணம்தான். வெளியே தெரியாமல் எத்தனையோ "வாய்ஸ் சேஞ்சர்' மோசடிகள் பல இடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவமானத்துக்குப் பயந்து இந்த மோசடிகள் அவரவருக்குள்ளேயே புதைந்து கிடக்கின்றன.

பொதுவாக, தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை பலர் தனக்குள்கூட சொல்லிக்கொள்ள விரும்புவதில்லை. ஆதலால், இத்தகைய பிரச்னைகள் சமயத்தில் ஒருவரின் மனநலனையே பாதிக்கக்கூடும் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.

ஆனால், உளவியல் அடிப்படையிலும், குற்றச் செயல்கள் அடிப்படையிலும் மிக மோசமான பாதிப்புகளை உருவாக்கும் இத்தகைய தொழில்நுட்ப வசதியைக் கட்டுப்படுத்த நம்முடைய சட்டத்தில் இடமில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறியது, "செல்பேசியில் குரலை மாற்றிப் பேசி மோசடியில் ஈடுபடும் நபர்கள் பற்றி புகார்கள் வந்தால் மட்டுமே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். மற்றபடி தொழில்நுட்ப வளர்ச்சியைக் கட்டுப்படுத்த எங்களுக்கு அதிகாரமில்லை' என்கின்றனர்.

பிரச்னைக்குரிய இத்தகைய தொழில்நுட்ப வசதிகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம். அதேபோல, தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்தும் நிறுவனங்களுக்கும், இதுபோன்ற வசதிகளைக் கொண்ட செல்பேசிகள் வைத்திருப்பவர்களுக்கும் சுயகட்டுப்பாடு அவசியம்.
கட்டுரையாளர் : தி. இன்பராஜ்
நன்றி : தினமணி

1 comment:

Pandian R said...

கொடுமை. திருடராய் பார்த்து திருந்தா விட்டால் ....