எங்கும் நீதித்துறையைப் பற்றிய பேச்சாக இருக்கிறது. நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளைப் பற்றிய விமர்சனங்கள் நன்மைக்காக இருக்குமானால் வரவேற்க வேண்டியதுதான். ஏனென்றால் மக்களும், நீதியும் பிரிக்க முடியாதவர்கள்.
""மக்களில் 91 விழுக்காட்டினர் தங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு நீதித்துறையை நாடாமல் புறக்கணிக்கின்றனர்...'' என்று உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.பி. சின்ஹா கூறியுள்ளார். இவர் உச்ச நீதிமன்ற நீதிபதி மட்டுமல்ல, தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்தலைவரும் ஆவார்.
அனைவருக்கும் நீதி கிடைக்கும் வழியைச் சொல்லித்தர மறந்து விட்டோம். நீதியைப் பெறுவது மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள உரிமை. நாட்டில் 9 விழுக்காட்டினர்தான் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நீதிமன்றத்தை நாடுகின்றனர். பெரும்பாலானோர் பிரச்னைகளை நீதிமன்றத்தின் மூலம் சந்திக்காமல் அவர்களாகவே சமாளித்துக் கொள்கின்றனர்.
பிரச்னைகளைத் தீர்க்க பெரும்பாலான மக்கள் காவல்துறை அல்லது அரசியல்வாதிகளின் உதவியை நாடுகின்றனர். ரவுடிகளைத் தேடுகின்றனர். அதாவது 91 விழுக்காடு மக்களை நாம் நீதித்துறையைப் புறக்கணிக்கச் செய்திருக்கிறோம் என்பது வேதனையாகும். சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வரவும், சட்டங்கள் சரியாக அமலாவதற்கும் நாம் என்ன செய்திருக்கிறோம் என்பது பற்றிய சிந்தனையைக் கொண்டு வருவது மிக அவசியம் என்பது அவர் கருத்தாகும்.
இவ்வாறு பொதுமக்கள் நீதிமன்றங்களைப் புறக்கணிப்பதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. வழக்கறிஞர்களைத் தேடி அலைந்து, அவர்களின் உதவியோடு நீதிமன்றங்களை அணுக வேண்டும். இப்படி ஒரு நாளா? இரண்டு நாளா? ஆண்டுக்கணக்கில் அலைய வேண்டும்.
ஆண்டுக்கணக்கில் காத்துக் கிடந்தாலும் அந்த நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதே அவனுக்குத் தெரியாது. வெளியே வந்ததும், "வழக்கறிஞர் வாய் திறப்பாரா?' என்று எதிர்பார்த்திருக்க வேண்டும்.
தம் சொந்த வேலையையும் விட்டு, பணத்தையும் செலவழித்துவிட்டு, "நியாயமான தீர்ப்பு கிடைக்குமா?', என்று ஏங்கிக் கிடக்க வேண்டும். இதனால் ஏற்படும் உடல் மற்றும் மனச்சோர்வால் துவண்டு போன ஒரு குடிமகன் என்ன நினைப்பான்?
"சாட்சிக்காரன் காலில் விழுவதைவிடச் சண்டைக்காரன் காலில் விழுந்து விடலாம்' என்ற மரபுப் பழமொழி இதனால் ஏற்றபட்டதுதான். காலம் கடந்து கிடைக்கும் தீர்ப்பு கூட மறுக்கப்பட்ட நியாயம்தானே! இந்தக் காலதாமதத்திலிருந்து மீள வழி கண்டறியப்பட வேண்டும். இது இந்த நாட்டில் நடக்கிற காரியமா?
"ஆண்டுக்கணக்கில் ஏராளமான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன' என்று மூத்த வழக்கறிஞர்களும், அவர்களோடு சேர்ந்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் அங்கலாய்க்கின்றனர். இதற்கு முடிவுகட்டாமல் மக்களைக் குறை கூறிப் பயன் என்ன?
""நீதிமன்றங்களில் அதிக அளவு வழக்குகள் தேங்கியுள்ளதே இப்போது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இதுதவிர பல வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதிலும் மிகவும் தாமதம் ஏற்படுகிறது. இதனால் நீதிமன்றங்களை நாடும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்'' என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறியுள்ளார்.
இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். இதற்கு நீதித்துறை தொடர்பான சட்டங்களைத் திருத்த வேண்டும். நவீன தொழில்நுட்ப வசதிகளை நீதித்துறையில் பயன்படுத்த வேண்டும்.
நீதிமன்றத்தில் உள்ள பழமையான மற்றும் சிக்கலான பல நடைமுறைகளைக் கைவிட வேண்டும். இதன் மூலம் விரைவில் நீதி கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.
நீதிமன்றக் கட்டணங்கள், வழக்கறிஞர்களை அமர்த்தும் செலவு போன்றவை ஏழை மக்கள் எளிதில் செலுத்தும் வகையில் இல்லை. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு நீதிமன்றத்தை அணுகுவதே பெரும் பிரச்னையாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
சட்டத்தின்முன் அனைவரும் சமம்; சட்டத்திலிருந்து யாருக்கும் விதிவிலக்கு கிடையாது என்று கூறப்படுகிறது. ஆனால் நடைமுறை இதற்கு எதிர்மாறாகவே இருக்கிறது. சாதாரண குடிமகன் ஆண்டுக்கணக்காகக் காத்துக் கிடக்க நேருகிறதே தவிர, அரசு வழக்குகள் இரவு பகல் பாராமல் விசாரிக்கப்பட்டு ஆணைகள் இடப்படுகின்றன.
அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது அவர்களுக்கு எதிராக அன்றைய அரசாங்கம் நீதிமன்ற ஆணைகளைப் பெற்று இரவோடு இரவாக அரசுக் குடியிருப்பிலிருந்தே வெளியேற்றியது; பெண்களும், பிள்ளைகளும் நிராதரவாகத் தெருவில் நின்ற காட்சிகளை மறக்க முடியுமா?
பல்லாண்டுகளாகப் பணிபுரிந்த அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வேலைநீக்கம் செய்யவும், புதியவர்களை அந்த இடத்தில் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு நீதிமன்றமும் துணை போனது. மனிதநேயம் பற்றிய சிந்தனை வேண்டாமா? இவ்வாறு ஆளுவோருக்குத் துணைபோகாதபோது நீதிபதிகளே மிரட்டப்படுவதான குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
2009 ஜூன் 29 அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி ஒரு முன்ஜாமீன் விசாரணையின்போது, ""ஏற்கெனவே நான் இந்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளேன்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்குமாறு கூறுகிறார். இதுபற்றி உங்களுக்கும் (மனுதாரரின் வழக்கறிஞர்) தெரியும்...'' என்று பகிரங்கமாக நீதிமன்றத்தில் கூறினார்.
இதுபற்றி நாடெங்கும் கண்டனக் கணைகள் கிளம்பின. நாடாளுமன்றத்திலேயே எதிர்ப்புக் குரல் எழுப்பப்பட்டது. உயர் நீதிமன்ற நீதிபதியிடம் தொலைபேசியில் பேசிய மத்திய அமைச்சர் யார் என்பதை விசாரித்து பிரதமர் தெரிவிக்க வேண்டும் என்று எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வற்புறுத்தினர்; கோரிக்கை மனுவையும் கொடுத்தனர்.
தொடர்புடைய நீதிபதியே அமைச்சர் பெயரைக் கூறாத நிலையில் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கும் பிரச்னையே எழவில்லை என்று இப்பிரச்னை ஒரு வழியாக முடித்து வைக்கப்பட்டது. இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் எந்த அமைச்சரும் நீதிபதியிடம் பேசவில்லை என்று கூறியதுதான்.
இதுபோல் நீதிபதிகளை மிரட்டும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருவதை அறியாதார் யார்? ஆனால் இதற்கு இந்தப் பூனைக்கு மணி கட்டுவது யார்? பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்புகளை யாரால் என்ன செய்துவிட முடியும்?
தருமத்திற்கும், நீதி நேர்மைக்கும் இவ்வாறு எத்தனையோ தடைகள் வரலாம்; வரும்.
இவ்வளவையும் கடந்துதான் இலக்கைச் சென்றடைய வேண்டும். வேண்டியவர், வேண்டாதார் எனப் பாராமல், பணத்திற்கும், பதவிக்கும் சோரம் போகாமல் உண்மையைத் தேடும் நீதி தேவதை வணக்கத்துக்குரியவள்தான்.
நீதி என்னும் நதி மேட்டுக்குடி பக்கமே பாய்ந்திடாமல் எல்லா இடங்களிலும் பாயும்படி செய்திட வேண்டும். ஏழை எளிய மக்களையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் தேடிச் சென்று சேர வேண்டும்.
இதுபற்றி நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் நீதித்துறையை ஆக்கபூர்வமாக விமர்சித்ததற்காக நீதிமன்ற அவமதிப்புச் செய்ததாக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார்.
""இந்த நாட்டில் ஏசுநாதர்கள் சிலுவையில் அறையப்படுகிறார்கள். பாரபாஸ்கள் உயர்த்திப் பிடிக்கப்படுகிறார்கள். இதற்கான நன்றியை நீதித்துறைக்குத்தான் கூற வேண்டும்...'' என்பதும் அவரது விமர்சனம்தான்.
சமூக சீர்திருத்தவாதிகள் எல்லாம் இவ்வாறு நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு ஆளாகியுள்ளனர். முன்னாள் கேரள முதல்வர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு முதல் பெரியார் ஈ.வெ.ரா. வரை இவ்வாறு கண்டனத்துக்கு உள்ளானவர்களே!
""நூற்றுக்கு நூறு சரியானதோர் சமூகம் என்பது ஒருபோதும் இருக்கவே முடியாது. சமூக அநீதிகளை எவ்வாறு களைவது என்பதே நம்முடைய தலையாய குறிக்கோளாக விளங்கிட வேண்டும். சமுதாயத்தில் உள்ள சிறுபான்மை மக்கள் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள்; பெண்கள் தொடர்ந்து இழிவுபடுத்தப்படுகிறார்கள்; இம்சிக்கப்படுகிறார்கள். உழைப்பாளி மக்களைக் கடுமையாகச் சுரண்டி வருகிறார்கள். நாம் இத்தகைய சமூக அநீதிகளை எதிர்த்துப் போராடியாக வேண்டும்...'' என்று நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென் "நீதிக் கோட்பாடு' பற்றிய அண்மை நூலில் குறிப்பிட்டுள்ளார்.
நீதித்துறை சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே எழுப்பப்படுகிறது; அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைகள் தாய்மொழி மூலமாகவே நடத்தப்பட வேண்டும்; நீதிமன்றங்களின் காலிப் பணியிடங்கள் காலதாமதமின்றி நிரப்பப்பட வேண்டும்; நீதிபதிகளின் சொத்துரிமை பற்றிய மசோதாவில் அவர்களின் சொத்து விவரங்கள் மக்களுக்குத் தெரியும்படி மாற்றியமைக்கப்பட வேண்டும்.
நீதியின் பெருமையைப் பற்றிப் பேசாத இலக்கியங்களே இல்லை என்று கூறலாம். நீதி தவறும் நாட்டில் இயற்கையே பொய்த்துப் போகும்; பருவமழை தவறுவதுடன், பலவித உற்பாதங்களும் உள்ளாகும் என்றே அறநூல்கள் கூறுகின்றன.
நமது நீதிமன்றங்கள் பல நெருக்கடியான நேரங்களிலும் பாராட்டும்படியான தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றன. வியக்கத்தக்க வகையில் செயல்பட்டு வருகின்றன.
இவை தேசத்தைத் தாங்கும் நான்கு தூண்களில் ஒன்றாகத் தலைநிமிர்ந்து நிற்கின்றன என்பது நமக்கெல்லாம் பெருமைதான். அதனைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
கட்டுரையாளர் : உதயை மு. வீரையன்
நன்றி : தினமணி
Sunday, August 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment