Thursday, October 30, 2008

வட்டியை ஒரு சதவீதமாக குறைத்தது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி

கடந்த சில மாதங்களாகவே மோசமான நிதி நிலையில் இருந்து வரும் அமெரிக்கா, பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்து விடுமோ என்று அச்சத்தில் இருக்கிறது. இந்நிலையில், அதிலிருந்து அமெரிக்க பொருளாதாரத்தை காப்பாற்றும் விதமாக அங்குள்ள ஃபெடரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தில் 0.5 சதவீதத்தை குறைத்திருக்கிறது. இப்போது அது விதிக்கும் வட்டி வெறும் ஒரு சதவீதம்தான். இந்த மாத துவக்கத்தில் தான், 2 சதவீதமாக இருந்த வட்டியை 1.5 சதவீதமாக அவசரமாக குறைத்தது. ஃபெடரல் ரிசர்வ் வங்கியுடன் சேர்ந்து, உலகின் மற்ற ஐந்து மத்திய ரிசர்வ் வங்கிகளும் அப்போது வட்டியை குறைத்தன. ஆனாலும் இந்த நடவடிக்கை, அமெரிக்க பங்கு வர்த்தகத்தில் எந்தவித பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அங்குள்ள டவ்ஜோன்ஸ் மற்றும் எஸ் அண்ட் பி 500 சரிவைத்தான் சந்தித்திருக்கிறது.செப்டம்பர் 2007ல் 5.25 சதவீதமாக இருந்த வட்டி இப்போது ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு சதவீத வட்டி, கடந்த ஜூன் 2003 க்கும் ஜூன் 2004 க்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்ததுதான். இந்த வட்டி குறைப்பை ஏற்கனவே எல்லா பங்கு வர்த்தகர்களும் எதிர்பார்த்ததுதான் இருந்தார்கள் என்பதால், இதனால் ஒன்றும் பங்கு வர்த்தகத்தில் மாற்றம் நிகழவில்லை. நேற்றைய வர்த்தக முடிவில் டவ் ஜோன்ஸ் 0.82 சதவீதம், அல்லது 74.16 புள்ளிகள் குறைந்து, 8990.96 புள்ளிகளில் முடிந்திருந்தது. எஸ் அண்ட் பி 500 இன்டக்ஸ், 1.11 சதவீதம், அல்லது 10.42 புள்ளிகள் குறைந்து 930.09 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ஆனால் நாஸ்டாக் 0.47 சதவீதம், அல்லது 7.74 புள்ளிகள் உயர்ந்து 1657.21 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: