Sunday, September 7, 2008

400 நாள் பிக்சட் டிபாசிட் இப்போதைக்கு நல்லது

பணவீக்கம் படு மோசமான ஏற்றம், பங்குச் சந்தையோ கையை கடித்து விட்டது. கையில் இருக்கும் பணத்தை எதில் முதலீடு செய்யலாம்?
இந்த கேள்வி, பலரிடம் உள்ளது. வீடு வாங்கலாம் என்றால், வீட்டுக் கடன் மீதான வட்டிவீதம் கூரையை பீய்த்துக்கொண்டு எங்கோ எகிறி விட்டது. அது போலத்தான் வாகன கடன் வட்டிவீதமும். பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்யலாம் என்று கடந்த காலத்தில் பணத்தை போட்ட நடுத்தர வருவாய்ப் பிரிவினர் பலரும், இப்போது கடும் பீதியில் உள்ளனர். கையில் இருக்கும் பணத்தை காப்பாற்றிக் கொள்வதே இவர்களுக்கு சிரமமாக உள்ளது. நிதி ஆலோசகர்கள் பலரும் கூறுவது என்னவென்றால், இப்போதுள்ள சூழ்நிலையில், பிக்சட் டிபாசிட் தான் லாபம் தரும் முதலீடு என்று 'அடித்துச்' சொல்கின்றனர். அரசு மற்றும் தனியார் வங்கிகளில் பிக்சட் டிபாசிட் திட்டம் உள்ளது; அதுபோல, வேறு சில நிதி நிறுவனங்களும் பிக்சட் டிபாசிட் திரட்டும் திட்டங்களை வைத்துள்ளன. இவற்றில் இதுவரை போதுமான அளவுக்கு வட்டி கிடைக்கவில்லை. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பணவீக்கம் 14 சதவீதத்தை தொட்டுள்ள நிலையில், பல கடன்கள் மீதான வட்டிவீதம் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. இதுபோல, டிபாசிட்கள் மீதான வட்டிவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏ.பி.என்., ஆம்ரோ, பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இண்டியா, டெவலப்மென்ட் கிரெடிட் பாங்க் உட்பட பல வங்கிகளில் பிக்சட் டிபாசிட்டில், 400 நாள் திட்டத்தை வைத்துள்ளன. இந்த திட்டத்தில் வட்டிவீதம் 9.5 முதல் 10 சதவீதம் வரை. சில வங்கிகள் அதற்கு மேலும் வட்டி தருகின்றன. பணவீக்கத்துடன் கணக்கிடும் போது, பிக்சட் டிபாசிட்டில் போட்ட பணத்துக்கு கிடைக்கும் வட்டித்தொகை லாபகரமானது தான். 'பணவீக்கம் குறையும் என்று நிதி அமைச்சரில் இருந்து பலரும் நம்பிக்கை தெரிவித்து விட்டனர். அப்படி பார்க்கும் போது, பிக்சட் டிபாசிட்டில் போட்ட பணத்துக்கு இதே வட்டிவீதம் தான் கடைபிடிக்கப்படும். ஆனால், பணவீக்கம் குறைந்து விடும். அப்போது, லாபம் அதிகம் தானே' என்று நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
நன்றி : தினமலர்


No comments: