Thursday, March 5, 2009

வீடு, கார் கடன் மீதான வட்டி குறையும்: ரிசர்வ் வங்கி நடவடிக்கை

வங்கிகளுக்கான ரெபோ வட்டிவிகிதத்தை ரிசர்வ் வங்கி 0.5 சதவீதம் குறைத்துள்ளது. இதையடுத்து, வீடு மற்றும் கார் வாங்குவதற்கான கடனுக்கான வட்டி குறையும். சர்வதேசப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதுவரை மொத்தம் மூன்று லட்சம் கோடி ரூபாய் வரை பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதாரச் சீர்குலைவு இந்தியாவையும் வெகுவாகப் பாதித்துள்ளது. பயமுறுத்திக் கொண்டிருந்த பணவீக்கம், பல்வேறு சலுகை அறிவிப்புகள் காரணமாக ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும், வங்கிகளில் பணப்புழக்கத்தில் தொய்வு ஏற்பட்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்திய பங்குச்சந்தை தற்போது அதலபாதாளத்தில் இருக்கிறது. பணவீக்கம் 4 சதவீதத்திற்குள் வந்துவிட்டதால் ரிசர்வ் வங்கி மேலும் சலுகைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், வங்கிகளுக்கான ரெபோ வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைக்கப்படுவதாகவும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் கடனுக்கு (ரெபோ) 5.5 சதவீதம் வட்டி விதிக்கப்படடது. இதில் 0.5 சதவீதம் குறைக்கப்பட்டு 5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல், ரிசர்வ் வங்கி வங்கிகளிடம் வாங்கும் கடனுக்கான (ரிசர்வ் ரெபோ) வட்டி விகிதம் 4 சதவீதத்திலிருந்து 0.5 சதவீதம் குறைக்கப்பட்டு 3.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி குறைய உள்ளது. வீடு மற்றும் வாகனக் கடனுக்கான வட்டிகள் வெகுவாகக் குறையும். சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின் ரிசர்வ் வங்கி அறிவிக்கும் ஐந்தாவது சலுகை இது. வர்த்தகத்துறையில் நம்பிக்கையிழப்பு, மூலதன முதலீட்டில் தொய்வு ஆகிய நிலையைச் சமாளிக்க இந்த அறிவிப்பு உதவும் என்று கருதப்படுகிறது. மேலும், ரிசர்வ் வங்கி அறிவித்த நடவடிக்கைகள் மூலம் 3.88 லட்சம் கோடி பணப்புழக்கம் கிடைக்கும். உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இந்தச் சலுகை அமையும் என வங்கிகள் கருத்து தெரிவித்துள்ளன. பொதுத்துறை வங்கியான கனரா வங்கி நேற்று வீடு, வாகனக்கடன்கள் மீதான வட்டி விகிதம் குறைத்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: