Tuesday, March 24, 2009

வங்கிகளை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்ற அமெரிக்க அரசு கொடுக்கிறது ஒரு லட்சம் கோடி டாலர்

கடும் கடன் சுமையால் வீழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்க வங்கிகளை, அதிலிருந்து மீட்டு கொண்டு வர, அமெரிக்க அரசு ஒரு லட்சம் கோடி டாலர் ( ஒரு டிரில்லியன் டாலர் ) வரை செலவு செய்ய முன்வந்திருக்கிறது. அமெரிக்க வங்கிகளில் கடன் பெறுபவர்கள், அதற்கு அடமானமாக எழுதி கொடுத்திருக்கும் சொத்துக்கள் இப்போது ஒன்றுக்கும் உதவாததாக இருக்கின்றன. ஒன்றுக்கும் உதவாத சொத்துக்களை அடமானம் வைத்து வாங்கிய கடன் தொகையையும் செலுத்தப்படாமல் இருந்து, அந்த சொத்தையாவது விற்று கடனை கழித்து விடலாம் என்று பார்த்தால் அதுவும் விலை போகாமல் இருந்தால் வங்கிகள் என்னதான் செய்யும்?. சொத்தையும் விற்க முடியாமல் கடனையும் திரும்ப வாங்க முடியாமல், கணக்கில் மட்டும் கடனை எழுதி வைத்திருந்தால் போதுமா?. இப்படி ஏராளமான சொத்துக்கள் அமெரிக்க வங்கிகளிடம் சும்மாவே இருக்கின்றன. கடனும் திருப்பி வராமல், சொத்தையும் விற்க முடியாமல் நிறைய வங்கிகள் திணறுகின்றன. அதனால்தான் பல வங்கிகள், வங்கியை நடத்த முடியாமல் திவால் ஆகி வருகின்றன. அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடிக்கு இதுவே முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இப்போது இதனை சரி செய்ய அமெரிக்க அரசு முன்வந்திருக்கிறது. இதன்படி, இந்த உதவாத சொத்துக்களை அமெரிக்க அரசே பெற்றுக்கொண்டு, அதை வைத்து வாங்கிய கடனை வங்கிக்கு கொடுத்து விடும். பின்னர் வேறு ஒரு நாளில் இந்த சொத்துக்களை அமெரிக்க அரசே விற்று அதில் கிடைக்கும் பணத்தை பெற்றுக்கொள்ளும். இந்த திட்டத்தால் நஷ்டம் ஏற்பட்டாலும் அல்லது லாபம் கிடைத்தாலும் அதனை அரசே ஏற்றுக்கொள்ளும். இந்த திட்டத்திற்காக அமெரிக்க அரசு 75 பில்லியன் டாலரில் இருந்து 100 பில்லியன் டாலர் வரை ( அதாவது ஒரு லட்சம் கோடி டாலர் ) செலவு செய்ய முன் வந்திருக்கிறது. மேலும் இந்த திட்டத்தை ' பப்ளிக் - பிரைவேட் இன்வெஸ்ட்மென்ட் புரோகிராம் ' படி செயல்படுத்தலாம் என்றும், அதற்காக தனியாரும் இதில் பங்கு பெறலாம் என்றும் அழைப்பு விடப்பட்டிருக்கிறது. அமெரிக்க அரசின் இந்த திட்டத்தால் அங்குள்ள பங்கு சந்தைகளான டவ் ஜோன்ஸ் குறியீட்டு எண் 500 புள்ளிகள் ( 6.8 சதவீதம் ), எஸ் அண்ட் பி குறியீட்டு எண் 54 புள்ளிகள் ( 7.1 சதவீதம் ), நாஸ்டாக் குறியீட்டு எண் 99 புள்ளிகள் ( 6.8 சதவீதம் ) உயர்ந்திருக்கின்றன.
நன்றி : தினமலர்


No comments: