மும்பையில் நேற்று நடந்த அதிகாரப்பூர்வ அறிமுக விழாவில், ரத்தன் டாடா பேசியதாவது: இந்த நாளை, சாலை போக்குவரத்தின் புதிய பரிமாணமாக கருதலாம். ஒரு லட்ச ரூபாய் விலையுள்ள கார் என்பதால், அதை மிகவும் மலிவான கார் என கூறப் படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்து தரப்பினரும் வாங்கி பயன்படுத்தக் கூடிய கார் என்று கூறலாம். ஏற்கனவே நாங்கள் என்ன வாக்குறுதி அளித்தோமோ அதை உறுதியாக பின்பற்றுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. நானோ காரின் எகானமி ரக கார், ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
இந்த உயர் ரக கார்களில் ஏசி, பவர் பிரேக், பவர் விண்டோ உள்ளிட்ட வசதிகள் இருக்கும். இந்த கார்களை மேற்கு ஐரோப்பா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் உள்ளது. நானோ கார்களுக்கான முன் பதிவு அடுத்த மாதம் 9ம் தேதி முதல் துவங்குகிறது. வரும் ஜூலை மாதம் முதல் டெலிவரி செய்யப்படும்.முதல் ஒரு லட்சம் நானோ கார்களை வாங்கவுள்ள வாடிக்கையாளர்கள், முன்பதிவு செய்தவர்களில் இருந்து குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவர். கார் முன்பதிவு செய்வதற்கு அதிகபட்ச வரையறை எதுவும் இல்லை. குஜராத் சனாந்த்தில் ஆண்டுக்கு 2.50 லட்சம் கார்கள் தாயரிக்க முடியும். பின்னர், இது ஆண்டுக்கு ஐந்து லட்சம் கார்களாக அதிகரிக்கப்படும். நாங்கள் எதிர் பார்த்ததுக்கு முன் கூட்டியே நானோ கார் விற்பனைக்கு வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
முதல்கட்டமாக, பந்த் நகர் தொழிற்சாலையில் இருந்து 50 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் கார்கள் வரை சப்ளை செய்யப் படும். பந்த் நகரில் கார் தயாரிப்பது தற்காலிகமான ஏற்பாடு தான். ஒரு கோடிக்கும் அதிகமான நானோ கார்கள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவை மேலும் அதிகரித்தால் அதற்கேற்ப நிறுவனத்தின் உற்பத்தி திறனும் அதிகரிக்கப்படும். இவ்வாறு டாடா கூறினார்.
டாடா மோட்டார்ஸ் மேலாண்மை இயக்குனர் ரவி காந்த் கூறியதாவது: நானோ காருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ300. நாடுமுழுவதும் உள்ள ஸ்டேட் பாங்குகளில் இதற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம். டாடா நானோ கார் வாங்க கடன் வசதி கிடைக்கவும் 15 வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது. அதன் மூலம் வாங்குபவர்களுக்கு தனிக்கட்டணமும் உண்டு. முதலில் ஒரு லட்சம் கார்கள் வினியோகத்திற்கு கம்ப்யூட்டர் மூலம் தேர்வு செய்யப்படும். அப்படி கார் கிடைக்காத பட்சத்தில், நானோ காருக்காக முன்பதிவு செய்து ஒரு ஆண்டுக்கும் மேலாக காத்திருப்போருக்கு 8.5 சதவீத வட்டி அளிக்கப்படும். இரண்டு ஆண்டுக்கும் மேலாக காத்திருப்போருக்கு 8.75 சதவீத வட்டி தரப்படும். . நானோ கார்கள், நான்கு நபர்கள் வசதியாக அமரக் கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 624 சிசி திறன் கொண்ட இந்த கார்கள், மூன்று வகைகளில் கிடைக்கும். இரு சக்கர வாகனங்களை விட குறைவாகவே இந்த கார்கள் கார்பனை வெளிப்படுத்தும். அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 26.6 கி.மீ., வரை செல்லும். இவ்வாறு ரவிகாந்த் கூறினார்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment