Monday, March 23, 2009

நானோ காருக்கான புக்கிங் ஏப்ரல் 9 ம் தேதி துவங்குகிறது ; கார் ஜூலையில் கிடைக்கும்

மக்கள் கார் என்று டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா வால் அழைக்கப்படுவதும், உலகின் மிக மலிவான கார் என்றும் சொல்லப்படுவதுமான நானோ காருக்கான புக்கிங் ஏப்ரல் 9 ம் தேதி துவங்கும் என்று ரத்தன் டாடா தெரிவித்திருக்கிறார். ஏப்ரல் 9 ம் தேதி துவங்கப்படும் புக்கிங், ஏப்ரல் 23ம் தேதி வரை இருக்கும் என்றும், முதலில் புக் செய்யும் ஒரு வட்சம் பேருக்கு முதலில் நானோ விற்கப்படும் என்றும் அதன் விலை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ரத்தன் டாடா தெரிவித்தார். ஒரு லட்சம் ரூபாய்க்கு நானோ கொடுக்கப்படும் என்று முதலில் நாங்கள் சொன்ன வாக்கு காப்பாற்றப்படும் என்று சொன்ன அவர், அதை தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களின் விலை உயர்வையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது என்றார். இருந்தாலும் இப்போது அதன் விலை கொஞ்சம் குறைந்திருப்பது ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது என்றார். முதலில் புக் செய்த ஒரு லட்சம் பேருக்கு வரும் ஜூலை மாத துவக்கத்தில் கார் சப்ளை செய்யப்படும் என்றும், அதற்கான விண்ணப்ப பாரம் இந்தியா எங்கும் 1,000 நகரங்களில் 30,000 இடங்களில் கிடைக்கும் என்றார். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் 850 கிளைகள் அதிகாரம் கொண்டதாக இருக்கும். கடன் மூலமாக வாங்க விரும்புபவர்கள் முதலில் ரூ.2,999 மட்டும் செலுத்தி விட்டு மீதியை கடன் மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என்றார். புக்கிங்கை பெற்றுக்கொள்ள மேலும் 15 நிதி நிறுவனங்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். அவர்கள் பெயர் இன்னும் மூன்று நாட்களில் அறிவிக்கப்படும். கார் கடனுக்கான வட்டி எவ்வளவு என்பதை கடன் கொடுக்கும் வங்கியே தீர்மானிக்கும் என்று சொன்ன ரவி காந்தி, பொதுத்துறை வங்கிகளும் கடன் கொடுக்க முன் வந்திருக்கின்றன என்றார். குஜராத்தில் சனாண்ட் என்ற இடத்தில் நானோ வுக்காக பிரத்யேகமாக துவங்கப்பட்டிருக்கும் தொழிற்சாலையில் வருடத்திற்கு 2.5 லட்சம் கார்களை தயாரிக்க முடியும். அது, விரைவில் 5 லட்சம் கார்களை தயாரிக்க கூடியதாக விரிவாக்கம் செய்யப்படும். 4.5 மீட்டர் நீளமும், 624 சிசி இஞ்சினையும் கொண்டா நானோ காரில் நான்கு பேர் பயணம் செய்யலாம். இப்போதுள்ள இரு சக்கர வாகனங்கள் வெளியிடும் புகையை விட குறைவான அளவே புகையை வெளியிடும் இந்த காரில் அதிகபட்சமாக லிட்டருக்கு 26.6 கி.மீ.தூரம் வரை போகலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்டாண்டர்டு, டீலக்ஸ் மற்றும் லக்ஸூரி என்று மூன்று மாடல்களில் நானோ கிடைக்கிறது. நானோவின் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுக்கு, தேவையை பொறுத்து 2011 வாக்கில் ஏற்றுமதி செய்யப்படும் என்றார் ரத்தன் டாடா.
நன்றி : தினமலர்


No comments: