Monday, March 23, 2009

கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு புது திட்டம்

கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் வசதிக்காக லேண்ட் லைனில் ஒரே நேரத்தில் பலருடன் 'ஆடியோ கான்பரன்சிங்' வசதியை பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக ஒருவர் மற்றொருவருக்கு போன் செய்து பேசிக்கொள்வது சாதாரண விஷயம். ஆனால், ஒருவர் ஒரே நேரத்தில் பலருடன் பேசிக் கொள்ளும் வசதியும் தற்போது உள்ளது. அது தான் ஆடியோ கான்பரன்ஸ் வசதி. இந்த வசதியை தற்போது பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் பணியாற்றுபவர்களிடம் ஒரே நேரத்தில் தொடர்பு கொண்டு பேசிக் கொள்ளலாம். இந்த தொடர்பை ஏற்படுத்துவதற்கு, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் '128888' என்ற எண்ணை அழைத்து, பேச வேண்டிய எண்களை அளிக்க வேண்டும். பின், ஒவ்வொரு எண்ணாக இணைப்பு அளிக்கப்படும். மொபைல் போனில் இந்த வசதி இருந்தாலும் எண்ணிக்கையில் குறைந்த அளவே நாம் பேச முடியும். அதுவும் ஒரே நிறுவனத்தின் போன் எண்களில் மட்டுமே பேச முடியும்.
ஆனால், பி.எஸ்.என்.எல்.,நிறுவனம் முதன்முறையாக லேண்ட் லைன் இணைப்பில் அறிமுகப்படுத்தியுள்ள கான்பரன்ஸ் வசதியில் ஒரே நேரத்தில் 20, 30 பேரைக் கூட தொடர்பு கொள்ளலாம். வெவ்வேறு நிறுவனங்களின் இணைப்புகளில் கூட பேசிக் கொள்ளலாம். மேலும், எஸ்.டி.டி - ஐ.எஸ்.டி., என அனைத்து பிரிவுகளிலும் தொடர்பு கொள்ள முடியும். பயன்பாட்டிற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சேவை 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் ஒரே நேரத்தில் 1,500 பேர் வரையில் பேசும் வசதி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆடியோ கான்பரன்சிங் சேவையை பயன்படுத்துவதன் மூலம் பயண நேரம், பயணச் செலவு குறைகிறது. அத்துடன் வர்த்தகத்திற்கான அதிகப்படியான செலவும் குறைக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் பலர் ஆலோசனை செய்யும் வசதியும் இதில் கிடைக்கிறது. இதில், சாதாரண மற்றும் அவசர கான்பரன்சிங் என இரண்டு பிரிவு உள்ளது. அவசர கான்பரன்சிங் என்பது ஒரு மணி நேரத்திற்குள் இணைப்பு வழங்கப்படுவதாகும். ஒரு மணி நேரத்திற்கு மேல் இணைப்பு கிடைப்பதென்றால் அது சாதாரண கான்பரன்சிங். இதற்கான கட்டணம், தமிழகத்திற்குள் எனில் சாதாரண இணைப்பிற்கு நிமிடத்திற்கு 2.40 ரூபாயும், அவசர இணைப்பிற்கு நிமிடத்திற்கு 4.80 ரூபாயும், தமிழகம் தவிர இந்தியா முழுவதும் சாதாரண இணைப்பிற்கு நிமிடத்திற்கு 3.60 ரூபாயும், அவசர இணைப்பிற்கு 7.20 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, அழைப்பவர் மற்றும் ஐந்து பேர் ஆடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொள்ளும் போது, ஐந்து நிமிடங்கள் பேசினால் 6 பேர் *5 நிமிடம்* 2.40 காசுகள் என 72 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணங்கள் அனைத்தும் மாதம் அல்லது இரு மாதங்களுக்கு ஒரு முறை அனுப்பப்படும் பி.எஸ்.என்.எல்., பில்களிலேயே இணைத்து அனுப்பப்படுகிறது. மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள், மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு இந்த புதிய திட்டம் தற்போதுள்ள பொருளாதார சூழலில் பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

No comments: