Sunday, March 22, 2009

நானோ கார் புக்கிங் நாளை ஆரம்பம்: எதிர்பார்க்கிறது பங்குச் சந்தை : சேதுராமன் சாத்தப்பன்

கடந்த வியாழக் கிழமையன்று அமெரிக்காவில் ஏற்பட்ட மாறுதல்களும், பணவீக்கம் 0.44 சதவீதமாகக் குறைந்ததும் (கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது) சந்தையில் எவ்விதமான பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.வியாழனன்று முடிவாக மும்பை பங்குச் சந்தை 25 புள்ளிகள் கூடி முடிந்தது. வங்கிகள், வருங்காலங்களிலும் இதே போன்ற நிலை தொடர முடியாது என்றும், வராக்கடன்கள் கூடும் என்றும் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அது, அனைத்து வங்கிப் பங்குகளையும் நேற்று முன்தினம் சகட்டுமேனிக்கு கீழே தள்ளியது. நேற்று முன்தினம் குறைவுக்கு இன்னொரு காரணம், லாபநோக்கில் முதலீட்டாளர்கள் செயல்பட்டதும் தான். கடந்த இரண்டு வாரத்தில் சந்தை 7 சதவீதம் வரை மேலே சென்றது. இது தான் சமயம் என்று பலர் விற்கின்றனர் என்றே கூறவேண்டும்.
நேற்று முன்தினம் இறுதியாக மும்பை பங்குச் சந்தை 35 புள்ளிகள் குறைந்து 8,966 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்குச் சந்தை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 2,780 புள்ளிகளில் முடிந்தது.
உலக ஜி.டி.பி., எப்படி இருக்கிறது? சீனா, இந்தியா தவிர மற்ற நாடுகளின் ஜி.டி.பி., (மொத்த உற்பத்தி குறியீடு) மிகவும் கீழே இருக்கும் என்று பல நாட்டு வல்லுனர்கள் கணித்துள்ளனர். தற்போது, உலக அளவு ஜி.டி.பி., 2009ம் ஆண்டும் மிகவும் குறையும் என்றும், இது போல குறைவது கடந்த 60 ஆண்டுகளில் இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. அனைவரும் எதிர்பார்க்கும் நானோ கார் முன்பதிவு நாளை துவங்க உள்ளது. சைக்கிளில் செல்பவர் மோட்டார் சைக்கிளில் செல்ல ஆசைப்படுவது போல, மோட்டார் சைக்கிளில் செல்பவர் காருக்கு ஆசைப்படுவார் அதுவும் நானோவுக்கு விரும்பி வருவார் என்ற பெரிய நம்பிக்கையும், கார் இல்லாதவர்களைக் கூட கார் வாங்க வைக்கும் என்ற பெரிய நம்பிக்கையும் பெரிய ஒரு எதிர்பார்ப்பை நானோவுக்கு ஏற்படுத்தியுள்ளது. கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கின்றனர். அப்படி நிறைய பேர் அப்ளை செய்யும் பட்சத்தில் சப்ளை அதிகம் இல்லாததால் எவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை. மேலும், வெளிமார்க்கெட்டில் பிரிமியங்கள் கூடலாம். எது எப்படி இருந்தாலும், தற்போது ஆட்டோ ரிக்ஷாவே ஒரு லட்ச ரூபாய்க்குள் கிடைக்காத நிலையில், ஒரு லட்ச ரூபாயில் ஒரு கார் அதுவும் டாடா கார் என்பது ஒரு பெரிய சாதனை தான். திங்கள் போற்றுதும், திங்கள் போற்றுதும் என்று, வரும் திங்களை ஆவலுடன் எதிர்பார்ப்போம். அமெரிக்க அரசு இன்னும் பல கோடி டாலர்களை இறக்கி கம்பெனிகளை மீட்டுக் கொடுக்கும் என்ற செய்தி கம்பெனிகளுக்கு அமிர்தமாக இருந்தாலும், இந்தப் பணத்தைக் கொடுப்பதற்காக மேலும் டாலர்களை அச்சிடும் என்ற செய்தி அமெரிக்க டாலரின் மதிப்பை வெகுவாகக் குறைத்தது. கடந்த ஒரு வாரமாக இந்திய ரூபாய் வலுப்பெற்று வருவதற்கு இது ஒரு முக்கிய காரணம். ஒரு டாலர் 52 ரூபாய் அளவு சென்று, தற்போது 50.66 அளவிற்கு வந்து நிற்கிறது. முன்பே கூறியிருந்தோம், 51 அளவில் பார்வர்ட் கான்ட்ராக்ட் போடுமாறு. போட்டிருந்தீர்களா?
டிபிளேஷனுக்கு (பணச் சுருக்கம்) பயப்பட வேண்டுமா? ரிசர்வ் வங்கி இன்னும் வட்டி விகிதங்களை குறைக்கும் பட்சத்தில், வங்கிகளும் கடன்களுக்கான வட்டி வீதங்களை குறைக்கும். அப்படி வட்டிகள் குறையும் பட்சத்தில் கடன்கள் அதிகமாக பெறப்படும். அது நாட்டில் பொருள் உபயோகம், உற்பத்தியை பெருக்கும்.
வரும் வாரம் எப்படி இருக்கும்? சந்தை 9,000க்கு கிட்டே வந்து மேலும் கீழும் செல்கிறது. தேர்தல் வரை சிறிது மேலே செல்லும் வாய்ப்பு உண்டு. ஏனெனில், பணப்புழக்கம் கூடுவதால், பொருட்களின் விற்பனை கூடும்.
நன்றி : தினமலர்


No comments: