Monday, March 23, 2009

பெரிய கனவுகளுடன் இன்று வர இருக்கும் சிறிய கார்

இந்தியா முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான கார் பிரியர்கள் பெரிய கனவுகளுடன் காத்திருக்கும் சிறிய காரான ' நானோ ' இன்று வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்தப்படுகிறது. நானோ கார் வெளிவருவதை அடுத்து, இன்று பங்கு சந்தையில் டாடா மோட்டார்ஸின் பங்குகள் 5 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா ' மக்கள் கார் ' என்று சொன்ன உலகின் மிக மலிவு விலை காரான நானோ மூன்று மாடல்களில் வெளிவருகிறது. ஸ்டாண்டர்டு, டீலக்ஸ் மற்றும் லக்ஸூரி ஆகிய மாடல்களில் வெளிவருகிறது. விலை, மாடலுக்கு தகுந்தபடி ரூ.1.20 லட்சத்தில் இருந்து ரூ.1.30வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் ஸ்டாண்டர்டு மாடல் காரில் ஏ.சி.இருக்காது.இன்று மும்பையில் வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்தப்படும் நானோ, ஏப்ரல் இரண்டாம் வாரத்தில்தான் இந்தியாவின் மற்ற நகரங்களில் உள்ள டாடா மோட்டார்ஸின் டீலர்களுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. புக்கிங்கும் அப்போதுதான் ஆரம்பமாகும் என்று சொல்லப்படுகிறது. புக் செய்யும்போதே முன்பணம் ரூ.70,000 செலுத்த வேண்டும். கடந்த 15 மாதங்களுக்கு முன்பே டில்லியில் நடந்த ஆட்டோ ஷோவில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தும், வர்த்தக ரீதியாக வெளியில் வருவதற்கு இவ்வளவு காலம் ஆனதற்கு, மேற்கு வங்கத்தில் இவர்களுக்கு எதிராக நடந்தப்பட்ட அரசியல் போராடம்தான் காரணம். கடந்த அக்டோபரிலேயே இந்த கார் விற்பனைக்கு அனுப்ப டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டிருந்தும், மே.வங்கத்தில் உள்ள சிங்கூரில் இவர்கள் அமைத்த தொழிற்சாலையை நடத்த விடாமல் அரசியல் கட்சி ஒன்று தடுத்ததை அடுத்து, அந்த தொழிற்சாலையை அங்கிருந்து குஜராத்தில் உள்ள சனான்ட் என்ற இடத்திற்கு மாற்ற வேண்டியதாகி விட்டது. அங்கும் முழு அளவிலான தயாரிப்பு நடக்க இந்த வருடம் அக்டோபர் வரை ஆகி விடும் என்று சொல்லப்படுகிறது. டாடாவின் மற்ற தொழிற்சாலைகளிலேயே இப்போது குறைந்த அளவில் நானோ கார் தயாரிக்கப்படுகிறது.
நன்றி : தினமலர்


No comments: