Tuesday, March 24, 2009

திப்பு சுல்தானின் நவரத்ன கற்கள் பதித்த சிம்மாசன அலங்கார பொருள் ஏலம் விடப்படுகிறது

மகாத்மா காந்தி உபயோகித்த பொருட்களை எலம் விட்டு கொஞ்சம் நாட்களே ஆகி இருக்கும் நிலையில் இப்போது திப்பு சுல்தானின் மதிப்பு மிக்க பொருள் ஒன்று ஏலத்திற்கு வருகிறது. திப்பு சுல்தானின் சிம்மாசனத்தை அலங்கரித்த நவரத்தினங்கள் பதித்த, தங்கத்தால் ஆன, புலியின் தலையை போன்ற தோற்றத்தை கொண்ட அலங்காரப்பொருள் லண்டனில் ஏப்ரல் 2 ம் தேதி ஏலம் விடப்படுகிறது. இங்கிலாந்தில் உள்ள ஒரு வங்கி லாக்கரில் இந்த பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கழித்து இப்போது ஏலத்திற்கு வருகிறது. இது அதற்கு முன் கடந்த 100 வருடங்களாக நார்த்தம்பர்லேண்ட் என்ற இடத்தில் இருக்கும் ஃபெதர்ஸ்டோன் கோட்டையில் இருந்திருக்கிறது. 1799ல் திப்பு சுல்தானை தோற்கடித்த ஆங்கிலேயர்கள், அவரின் சிம்மாசனத்தை பெயர்த்து அதிலிருந்த இந்த அலங்கார பொருளை எடுத்து சென்றதாக தெரிகிறது. திப்பு சுல்தானின் சிம்மாசனத்தில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்ட இன்னொரு பெரிய அலங்கார பொருள் வின்ஸ்டர் கோட்டையிலும், இன்னொரு பகுதி போவிஸ் கோட்டையிலும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போது ஏலம் விட இருக்கும் அலங்கார பொருள் 8.00,000 பிரிட்டிஷ் பவுண்ட்க்கு ( சுமார் 5,84,00,000 ரூபாய் ) ஏலம் போகும் என்று சொல்லப்படுகிறது. இந்திய வரலாற்றில் மிக முக்கியமான பொருளாக கருதப்படும் இந்த பொருள், ஏலம் விடப்பட்டு யாரிடம் செல்லப்போகிறது என்பதை இந்திய மற்றும் பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
நன்றி : தினமலர்


No comments: