நன்றி : தினமலர்
Saturday, March 28, 2009
பாகிஸ்தானுக்கு உலக வங்கி 500 மில்லியன் டாலர் வட்டியில்லா கடன்
சீரழிந்து போயிருக்கும் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக, உலக வங்கி, அந்நாட்டிற்கு 500 மில்லியன் டாலர் ( சுமார் ரூ.2,500 கோடி ) வட்டியில்லாத கடன் வழங்க ஒத்துக்கொண்டிருக்கிறது. இந்த கடன் மூலம் அந்நாடு மீண்டும் பொருளாதாரத்தில் மேம்பட்ட நாடாக உயரும் என்று உலக வங்கி தெரிவித்திருக்கிறது. கடந்த சில காலமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரச்னை காரணமாக பாகிஸ்தானின் நுண்பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. உள்நாட்டில் நிலவும் மோசமான அரசியல் நிகழ்வுகள் காரணமாக, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அந்நாடு இழந்து விட்டது என்றும், அதனால் உள்நாட்டு நுண்பொருளாதாரம் பெரிதாக பாதிக்கப் பட்டிருப்பதாக அந்த வங்கி தெரிவித்திருக்கிறது. மேலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யில் விலை ஏற்றத்தால் பாகிஸ்தானில் உணவுப்பொருட்களின் விலையும் உயர்ந்து என்றும், அதன் காரணமாக அங்கு பணவீக்கமும் அதிகரித்து விட்டது என்கிறார்கள். மேலும் சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்த நிலை காரணமாக, பாகிஸ்தானில் தயாராகும் பொருட்களுக்கான தேவை குறைந்து அதனால் அந்நாட்டு ஏற்றுமதியும் குறைந்து விட்டது என்கிறார்கள். இது போன்ற காரணங்களால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் அந்நாட்டு பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக, உலக வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் அசோசியேஷன் ( ஐடிஏ ) என்ற கடனளிக்கும் நிறுவனம், பாகிஸ்தானுக்கு 500 மில்லியன் டாலர் ( சுமார் 2,500 கோடி ரூபாய் ) வட்டியில்லா கடன் கொடுக்கிறது. வட்டி கிடையாது என்றாலும் இதற்காக சர்வீஸ் சார்ஜ் ஆக 0.75 சதவீதம் மட்டும் வசூலிக்கப்படும். 35 வருடங்களில் இந்த கடனை திருப்பி கொடுத்தால் போதுமானது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment