சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜி-20 நாடுகளின் மாநாடு லண்டனில் அடுத்த மாதம் 2ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. மாநாட்டில் இந்தியா சார்பில் என்ன விஷயங்களை எடுத்து வைக்கலாம் என்பது குறித்தும், தற்போதைய பொருளாதார நிலை குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும் முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். தொழிலதிபர்கள் ரத்தன் டாடா, குமார் பிர்லா, கே.பி. காமத், சசிருயா, சாஜன் ஜிண்டால், ஆர்.பி. கோயங்கா உள்ளிட்டோருடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறுகையில், 'சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழ்நிலை உள்ளது. இந்த ஆண்டிலும், அடுத்த ஆண்டிலும் கடும் சவாலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதை தடுக்கும் வகையில், மேலும் சில பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டியது அவசியம்' என்றார்.
ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிலதிபர் ஹர்ஷ் பட்டி சிங்கானியா கூறுகையில், 'கடன்களுக் கான வட்டி வீதம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி ரிசர்வ் வங்கியிடம்வலியுறுத்தியுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்' என்றார்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், 'பணவீக்கம் மிகவும் குறைந்துள்ளதால், வட்டி வீதம் மேலும் குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க நிறுவனங்களின் கடன் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். உற்பத்தி தேவைகளுக்காக உள்நாட்டுக் கடன் வசதி அதிகரிக்கப்படும்.'ஸ்டீல் மற்றும் சிமென்ட் போன்ற துறைகளில் முன்னேற்றம் காணப்படுகிறது. பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவைகள் கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளது. விவசாயத்துறையின் செயல்பாடும் நம்பிக்கை தரும் வகையில் உள்ளது. 2007-08ம் ஆண்டை விட நடப்பு நிதியாண்டில், பொதுத்துறை வங்கிகள் அதிக அளவில் கடன் வழங்கியுள்ளன' என்றார்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment