ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்பது போல பங்குச் சந்தை எல்லாரையும் பள்ளு பாட வைத்துக் கொண்டிருக்கிறது. முன், சந்தைக்கு வந்து நிறைய நஷ்டத்தில் இருந்தவர்கள் எல்லாருக்கும், கடந்த 20 நாட்களாக நிம்மதி தரும் செய்தியாக இருக்கிறது. 8,000 அளவில் சந்தைக்கு வராதவர் கள் எல்லாம், வந்திருக்கலாமே என்று ஏங்க வைத்திருக்கிறது. வியாழன் மும்பை பங்குச் சந்தை குதிரை 10 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி சென்று நின்றது. பணவீக்கம் இந்த வாரம் 0.27 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. சென்ற வார அளவை விட 0.14 சதவீதம் குறைவு. பூஜ்யத்திற்கு அருகில் ராஜ்யமிடுகிறது. அதே சமயம் உணவுப் பொருட்களின் பணவீக்கம் மார்ச் முதல் வாரத்தில் 7.35 சதவீதமாக இருந்து வருகிறது.பணவீக்கம் குறைந்ததால், திங்களன்று சந்தை ஜம்மென 335 புள்ளிகள் மேலே சென்று 10 ஆயிரத்தைத் தாண்டிச்சென்று நின்றது. வெளிநாட்டு நிறுவனங் கள் வாங்கியதும் ஒரு காரணம். கடந்த மூன்றரை மாதத்தில் இதுவே அதிகபட்ச அளவு.காரணம், பணவீக்கம் குறைந்ததால் இன்னும் அரசாங் கம் வட்டி விகிதங்களைக் குறைக்கலாம் என்ற எண்ணம் சந்தையில் மேலோங்கியிருந் தது தான். அதனால், குறிப்பாக வங்கிப் பங்குகள் மேலே சென்றன.பணவீக்கம் குறைந்து வருவதால், வட்டி விகிதம் குறையும் குறையும் என்று வியாழன் வரை எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அந்த பார்ட்டியைக் கெடுக்கும் விதமாக வந்த செய்தி என்னவென்றால், அரசாங்கம் இரண்டு லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்கள் வெளியிடும் என்பது தான்.அதே சமயம் 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முன் வெளியிட்ட கடன் பத்திரங்களை வெளிமார்க்கெட்டில் இருந்து வாங்கும் என்ற செய்தியும் வந்திருக்கிறது. ஆதனால், தற்போது திரட்டும் மொத்த பணத்தின் மதிப்பு ஒரு லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும். இது வட்டி விகிதங்களை பெரிய அளவில் குறைக்க வழி வகுக்காது.அதனால், இந்தச் செய்தி கேட்டவுடன் நேற்று முன்தினம் சந்தைகள் கீழேயே துவங்கின. மேலும், மார்ச் கடைசி என்பதால் மியூச்சுவல் பண்டுகள் தங்களது பண்டு களின் குறியீடு மேலேயே இருப்பதை விரும்பும். அதனால், அவர்களும் சந்தையில் வாங்குகின்றனர்.முடிவாக நேற்று முன்தினம் மும்பை பங்குச் சந்தை 45 புள்ளிகள் கூடி 10 ஆயிரத்து 48 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 26 புள்ளிகள் கூடி 3,108 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.தேர்வுகள் எல்லாம் முடிந்து தேர்ச்சிபெற்று விட்டேன் என்ற ரிசல்ட் வந்து மாணவன் போல குதூகலமாக இருந்தனர் சந்தை முதலீட்டாளர்கள். 10வது பாஸ் செய்து விட்டார்களே!
அமெரிக்காவின் நஷ்டம் - இந்தியாவின் லாபம்: உலகத்தின் மற்ற பாகங்களிலிருந்து பி.பி.ஓ., வேலைகள் இந்தியாவிற்குக் கிடைக்காது, இளைஞர்களுக்கு வருங் காலத்தில் வேலைகள் கிடைப்பது கடினம் என்ற செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன.இந்த செய்திகளுக்கிடையே தான் கடந்த வாரம் எச்.சி.எல்., கம்பெனி ரீடர்ஸ் டைஜஸ்டின் ஏழு வருட 350 மில்லியன் கான்ட்ராக்ட்டை பெற்றிருக்கிறது என்ற செய்தி வந்தது.தற்போது அமெரிக்காவின் ஐ.பி.எம்., அங்கு 5,000 பேரை வேலையிலிருந்து நீக்கி விட்டு அந்த வேலைகளை இந்தியாவிற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது என்ற செய்தியும் வருகிறது. வரட்டும்... நல்ல செய்திகள்.எச்.டி.எப்.சி., தனது புதிய வீட்டுக் கடன்களுக்கு 0.5 சதவீதம் வட்டிகளை குறைத்துள் ளது. நிரந்தர வட்டியில் வீட்டுக் கடன்கள் முன் வாங்கியவர்களுக்கு வட்டிக் குறைப்பு என்பது இருக்காது. ஆனால், சமீபத்தில் வட்டிகள் மிகவும் குறைந்து வருவதால், எச்.டி.எப்.சி., தனது பழைய வாடிக்கையாளர்களுக்கும் 0.5 சதவீதம் வட்டிக் குறைப்பு செய்துள்ளது.ஆனால், தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளின் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் மற்ற நிறுவனங்களை விட இன்னும் கவர்ச்சியாகவே இருக்கின்றன.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்? : காளைகளின் பிடியில் பங்குச் சந்தை இருக்கிறது என்றும் சொல்ல முடியாது. கரடிகளின் பின் இல்லாமல் இருப்பதை விட இது எவ்வளவோ மேலானது. சந்தைக்கு வந்து பார்ப்போம், சிறிது ரிஸ்க் எடுக்கலாம் என்ற எண்ணங்கள் வரத் துவங்கியிருக்கின்றன.இந்த எண்ணம் சிறிய முதலீட்டாளர்களிடம் மட்டும் இல்லை, எல்லோரிடமும் வந்திருக்கிறது.இது சந்தையை சிறிது மேலேயே நிறுத்தும். கடந்த 20 நாட்களாக உலகளவில் சந்தைகள் எல்லாமே மேலே தான் இருக்கின்றன.கடந்த 20 நாட்களில் ரஷ்ய சந்தைகள் அதிகபட்சமாக 29 சதவீதம் மேலே சென்றுள்ளன. அதையடுத்து, ஹாங்காங் 24 சதவீதம் மேலே சென்றுள்ளது. சந்தை மேலேயே இருப்பதால் புதிய வெளியீடுகளையும் எதிர்பார்க்கலாம்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment