இத்திட்டப்படி, தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, நகர கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பண்ணை சாராக் கடன்கள் பெற்று, தவணை தவறி நிலுவையில் உள்ள அனைத்து கடன்களுக்கும், 2001 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து வட்டி விகிதம் 12 சதவீதமாக கணக்கிடப்பட்டு, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும். அரசாணை வெளியிடப்பட்ட நாளில் நிலுவையில் உள்ள கடன்களுக்கான இச்சலுகை, கடன்காரர் வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணை தவறிய நிலுவைத் தொகைக்கு மட்டுமே நேர் செய்யப்படும். இதனால், கூட்டுறவு வங்கிகளில் இருந்து நிதி வெளியேற்றம் ஏதும் இருக்கக் கூடாது. இதில், தீர்ப்பாணை நிறைவேற்று மனு தாக்கல் செய்யப் பட்ட இனங்களுக்கும், மற்ற சாதாரணக் கடன்கள் போலவே வட்டி குறைப்பு அளிக்கப்படும். திருத்தியமைக்கப்பட்ட வட்டி விகிதத்தின்படி வசூலிக்க வேண்டிய தொகையில் 25 சதவீதத்தை இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்தி ஒப்பந்தம் மேற்கொண்டு, மீதமுள்ள 75 சதவீத தொகையை வரும் ஜூன் 30ம் தேதிக்குள் செலுத்தி கடனை முடிக்க, கடன்தாரர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது.
குறிப்பிட்ட தேதிக்குள், இச்சலுகையை பயன்படுத்தி தவணை தவறிய கடன்கள் முழுவதையும் செலுத்துவோருக்கு மட்டுமே சலுகைகள் முறைப்படுத்தப்படும். அவ்வாறு குறிப்பிட்ட தேதிக்குள் நேர் செய்யாதவர்களிடம், வர வேண்டிய தொகையை வசூலிக்க சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வங்கிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வட்டி குறைக்கப்படுவதாலும், அபராத வட்டி தள்ளுபடி செய்வதாலும் ஏற்படும் நிதியிழப்பை அந்தந்த கூட்டுறவு வங்கிகளே ஏற்க வேண்டும். அரசாணை வெளியிடப்பட்ட பிப்ரவரி 28ம் தேதி நிலுவையில் உள்ள கடன்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். ஏற்கனவே, 2008 ஜூன் 30ம் தேதி வரை வட்டி குறைப்புத் திட்டப்படி, 25 சதவீத தொகையை மட்டும் செலுத்தி, எஞ்சிய 75 சதவீத தொகையை அந்த தேதிக்குள் செலுத்த முடியாமல் போன கடன்தாரர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். இவ்வாறு கூட்டுறவுத் துறை செயலர் அரசாணை பிறப்பித்துள்ளார்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment