Monday, March 16, 2009

கடலுக்கு நடுவே கன்டெய்னர் டெர்மினல்: சீனாவுக்கு அடுத்து சென்னையில் உருவாகிறது

சீனாவுக்கு அடுத்தபடியாக நாட்டிலேயே முதன் முறையாக சென்னை துறைமுகம் அருகே நடுக்கடலின் மத்தியில், 'மெகா கன்டெய்னர் டெர்மினல்' எனப்படும் மிகப்பெரிய சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படவுள்ளது. மூன்றாயிரத்து 700 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த சரக்கு பெட்டக முனையம், இந்தியாவிலேயே பெரிய முனையமாக இருக்கும். சென்னை துறைமுகத்தில் தற்போது சரக்குகளை ஏற்றி இறக்குவதில் உள்ள இடப்பற் றாக்குறை சிரமங்களைத் தவிர்க்க, கூடுதலாக மேலும் ஒரு கன்டெய்னர் டெர்மினல் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை துறைமுகத்தில் இரண்டாவது கன்டெய் னர் டெர்மினல் அமைத்து அதன் பணிகள் முடிவு பெற்றுள்ளன. இரண்டொரு மாதங்களில் இந்த டெர்மினல் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெர்மினல் மூலம் சரக்குகள் கையாளப்பட்டு வரும் நிலையில், தற்போதைய இரண்டாவது டெர்மினல் மூலம் கூடுதலாக ஒரு மடங்கு சரக்குகளைக் கையாள வாய்ப்புள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு புதிய டெர்மினல் அமைக்க மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை துறைமுகத்தில் இருந்து இரண்டு கி.மீ., தூரத்தில் நடுக்கடலுக்கு மத்தியில் மெகா கன்டெய்னர் டெர்மினல் அமைக்கப்படவுள்ளது. மூன்றாயிரத்து 700 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த டெர்மினல் பெர்த் 22 மீட்டர் ஆழமும், இரண்டு கி.மீ., வரை நீளமும் கொண்டதாக இருக்கும். இந்த டெர்மினலுக்கு என கடலுக்குள் இரண்டு கி.மீ., தூரம் வரை சாலை அமைக்கப்படவுள்ளது.
கடலுக்கு மத்தியில் கன்டெய்னர் டெர்மினல் என்பது சீனாவில் மட்டுமே உள்ளது. அந்நாட்டின் புகழ் பெற்ற ஷாங்காய் துறைமுகத்தில் மட்டுமே இது போன்ற கடல் நடுவிலான கன்டெய்னர் டெர்மினல் உள்ளது. கடற்கரையில் இருந்து 25 கி.மீ., தூரத்தில் கடல் நடுவே இந்த கன்டெய்னர் டெர்மினல் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாகவும் இந்தியாவிலேயே முதன்முறையாகவும் சென்னையில் தற்போது, 'மெகா கன்டெய்னர் டெர்மினல்' அமைக்கப்படவுள்ளது. இந்த டெர்மினல் அமைப்பதற்கு, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் விடுத்த டெண்டரில், சர்வதேச நிறுவனங்கள் பலவும் கலந்து கொண்டு, இறுதியில் ஒன்பது நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. லார்சன் அண்ட் டியூப்ரோ, முந்திரா, புஞ்ச்லாய்ட், லான்கோ போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் போட்டியில் உள்ளன. சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி நிலவி வரும் இந்த சூழ்நிலையிலும் கூட இத்தனை நிறுவனங்கள் போட்டியில் குதித்துள் ளது மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. பொது மற்றும் தனியார் கூட்டு நடவடிக்கையாக அமைக் கப்படவுள்ள இந்த டெர்மினலில் பங்கெடுக்க பெரிய நிறுவனங்கள் போட்டியிட, போர் நினைவுச் சின்னத்திலிருந்து மதுரவாயல் வரை அமைக்கப்படவுள்ள மேம்பாலச் சாலை திட்டமே காரணம். போர் நினைவுச் சின்னத்தில் இருந்து தங்குத் தடையே இல்லாமல் மதுரவாயல் வரை சரக்குகளை எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் இந்த சாலை திட்டப்பணிகள் அண்மையில் துவக்கி வைக்கப்பட்டது. கடல் நடுவிலான கன்டெய்னர் டெர்மினல் அமைக்கும் பணி குறித்த திட்டம், பொது முதலீட்டு ஆணையம் மற்றும் மத்திய அமைச்சரவை ஆகியவற்றின் ஒப்புதல் பெறுவதற்கு மூன்று மாதங்கள் ஆகும் என்றும், அதன்பின் மளமளவென பணிகள் துவங்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி : தினமலர்


No comments: