Wednesday, April 1, 2009

ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள லண்டனில் குவிந்தனர் தலைவர்கள்

1930 ம் வருடத்திற்குப்பின் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கும் உலக பொருளாதாரத்தை சரிசெய்வது குறித்து ஆராய நடக்கும் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, உலகின் 20 பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் லண்டனில் குவிந்து வருகிறார்கள். ஒவ்வொரு தலைருடனும் ஒரு குழுவினரும் சேர்ந்தே வந்திருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமாவுடன் 500 பேருக்கும் மேற்பட்டவர்கள் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் மனைவி மிச்சலுலுடன் 8 பேர் கொண்ட குழு தனியாக வந்திருப்பதாக சொல்கிறார்கள். பதவி ஏற்றபின் முதல் முறையாக லண்டன் வந்துள்ள பாரக் ஒபாமா, பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுனை, நம்பர் 10 டவுனிங் தெருவில் இருக்கும் அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். கார்டன் பிரவுன் தவிர ரஷ்ய அதிபர் திமிட்ரி மெட்வதேவ் மற்றும் சீன அதிபர் ஹூ ஷின்டோ ஆகியோரையும் ஒபாமா சந்தித்து பேசினார். தனது பொருளாதார திட்டங்களை வெளியிட, பாரக் ஓபாமாவுக்கு, இந்த மாநாடு ஓரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். இரண்டு நாட்கள் நடக்கும் ஜி 20 மாநாட்டில் பல தலைவர்கள் நேருக்கு சந்தித்து அவர்கள் பிரச்னை குறித்து பேசிக்கொள்ள இருக்கிறார்கள். மாநாட்டிற்கு வந்திருக்கும் தலைவர்களுக்கு இன்று மாலை பிரிட்டிஷ் ராணி எலிசபெத் பக்கிங்ஹாம் அரண்மணையில் விருந்து கொடுக்கிறார். கார்டன் பிரவுனை ஒபாமா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தவேளையில், ஒபாமாவின் மனைவி மிச்சலும், பிரவுனின் மனைவி சாராவும் ஷேரிங் கிராஸ் ஆஸ்பத்திரி சென்று அங்குள்ள கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்த்தனர். இந்த மாநாட்டை எதிர்த்து, எதிர்பாராத விதமாக போராட்டங்கள் வெடிக்கும் என்று கருதப்படுவதால், லண்டன் நகர் முழுவதிலும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக் கின்றன.
நன்றி : தினமலர்


No comments: