Wednesday, July 22, 2009

இந்தியாவில் அபூர்வ சூரிய கிரகணம்

பூரண சூரிய கிரகணம் அப்படி ஒன்றும் அபூர்வமானது அல்ல என்றாலும் வருகிற 22-ம் தேதி நிகழ இருக்கும் சூரிய கிரகணம் ஒருவகையில் அபூர்வமானதே. சாதாரணமாக பூரண சூரிய கிரகணத்தின்போது சூரியன் இரண்டு அல்லது மூன்று நிமிஷங்கள் மறைக்கப்படும். அபூர்வமாக இது ஐந்து அல்லது ஆறு நிமிஷங்கள் நீடிப்பது உண்டு. எப்போதாவது ஏழு நிமிஷ நேரம் நீடிக்கலாம். வருகிற பூரண சூரிய கிரகணத்தின்போது சூரியன் 6 நிமிஷம் 39 வினாடி மறைக்கப்பட இருக்கிறது. இந்த நூற்றாண்டில் இதுவே மிக அதிகபட்ச நேரமாகும். அந்தவகையில் இது அபூர்வ சூரிய கிரகணம்.
இந்த கிரகணம் இந்தியாவில் தெரியும். ஆனால் சென்னை உள்பட தமிழகத்தில் இது அரைகுறை (பார்சுவ) சூரிய கிரகணமாகத்தான் தெரியும்.
அதாவது சூரியன் முற்றிலும் மறைக்கப்படாமல் 60 சதவிகித அளவுக்கே மறைக்கப்படும். ஆனால் குஜராத், மத்தியப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம் முதலான மாநிலங்களில் சூரியன் முற்றிலுமாக மறைக்கப்படுகின்ற காட்சியைக் காணலாம். சீனா, ஜப்பான் முதலான நாடுகளிலும் பூரண சூரிய கிரகணம் தெரியும்.
பூமிக்கும் சூரியனுக்கும் நேர் குறுக்கே சந்திரன் அமைந்து சூரியனை மறைப்பதால்தான் பூரண சூரிய கிரகணம் நிகழ்கிறது என்பதை நாம் அறிவோம்.
இவ்விதம் சூரியன் முற்றிலுமாக மறைக்கப்படுகின்ற காட்சி உண்மையில் கண்கொள்ளாக் காட்சியாகும். அப்போது அசாதாரணமான இருட்டு நிலவும். வானில் நட்சத்திரங்களும் கிரகங்களும் தெரியும்.
வருகிற சூரிய கிரகணத்தின்போது வானில் தலைக்கு மேலே வெள்ளி கிரகம் தெரியும். அடிவானத்துக்கு மேலே புதன் கிரகம் தெரியும். தவிர, மகம், புனர்பூசம், ரோகிணி முதலான நட்சத்திரங்களும் தெரியும்.
சூரியன் முற்றிலுமாக மறைக்கப்படுகின்ற கட்டத்திலும் பிறகு சூரியன் மறுபடி தலை காட்டும்போதும் நிலத்திலும் கட்டடங்கள் மீதும் கருப்பு வெள்ளை நிறப் பட்டைகள் தென்படலாம். வரிக்குதிரை மீதுள்ள பட்டைகள் போன்ற இப் பட்டைகள் காணும் இடங்களில் எல்லாம் தெரியும்.
சூரியன் முழுதாக மறைக்கப்பட்ட நிலையிலிருந்து விடுபட சில கணங்கள் இருக்கும்போது சூரியனின் ஒளிக்கற்றைகள் சந்திரனின் மேடு பள்ளங்கள் வழியே கசியும். அப்போது சூரியன் ஒரு அற்புத வைர மோதிரம் போலத் தென்படும்.
முழு சூரிய கிரகணத்தைக் காண்பது என்பது ஓர் அற்புத அனுபவமாகும். இந்த சூரிய கிரகணத்தைக் காண்பதற்கென்றே வெளிநாடுகளிலிருந்து பலர் இந்தியாவுக்கு வருகின்றனர். விமானத்தில் ஏறிக்கொண்டு பூரண கிரகணம் தெரிகின்ற பகுதிகளுக்கு மேலாகப் பறந்து சென்றால் தொடர்ந்து 74 நிமிஷ நேரம் பூரண சூரிய கிரகணத்தைக் காண இயலும். ஒரு நிறுவனம் இதற்கென ஒரு விசேஷ விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதில் ஏறிச் செல்ல பலரும் இடம் முன்பதிவு செய்துள்ளனர்.
விஞ்ஞானிகள் பூரண சூரிய கிரகணத்தின்போது விசேஷக் கருவிகளைப் பயன்படுத்தி சூரியனை ஆராய்வர். சூரியனைச் சுற்றியுள்ள ஜோதியையும் மற்றும் சூரியனிலிருந்து எழும் சீற்றங்களையும் பூரண சூரிய கிரகணத்தின்போது மட்டுமே காண இயலும் என்பதே இதற்குக் காரணம்.
சூரிய ஒளித்தட்டை சந்திரன் முற்றிலுமாக மறைப்பதால்தான் பூரண சூரிய கிரகணம் ஏற்படுவதாகக் குறிப்பிட்டோம். அமாவாசையன்றுதான் சந்திரன் இவ்விதம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே அமைந்து சூரியனை மறைக்கிறது. ஆனால் ஒவ்வொரு அமாவாசையிலும் சூரிய கிரகணம் நிகழ்வது கிடையாது. இதற்கு சந்திரனின் சுற்றுப்பாதை காரணம்.
நீங்கள் டிவி நிகழ்ச்சியைப் பார்க்கும்போது ஒரு வண்டு உங்களைச் சுற்றிச் சுற்றி வருவதாக வைத்துக் கொள்வோம்.
வண்டு டி.வி. திரைக்கு மேலாகப் பறந்து சென்றால் அது டி.வி.யை மறைக்காது. அல்லது மிகவும் தாழ்வாகப் பறந்து சென்றால் அப்போதும் அது டிவியை மறைக்காது. உங்களுக்கும் டிவி திரைக்கும் இடையே நேர் குறுக்கே வரும்போதுதான் அது டிவி திரையை மறைக்கும்.
சந்திரன் இப்படியாகத்தான் பூமியைச் சுற்றுகிறது. அதாவது சந்திரனின் சுற்றுப்பாதை சாய்வாக இருப்பதால் ஒவ்வோர் அமாவாசையின்போதும் அது சூரியனை மறைப்பது இல்லை. சிலசமயங்களில் சந்திரன் நேர் குறுக்காக வரும்போது தான் சூரிய கிரகணங்கள் நிகழ்கின்றன.
சூரியனோ மிகப் பிரம்மாண்டமானது. சந்திரனோ பூமியையும்விடச் சிறியது. அப்படியிருக்க, சுண்டைக்காய் சந்திரன் எப்படி சூரியனை முற்றிலுமாக மறைக்கிறது என்று சந்தேகம் ஏற்படலாம்.
சந்திரனின் குறுக்களவை விட சூரியனின் குறுக்களவு 400 மடங்கு பெரியது. அதேநேரத்தில் பூமியிலிருந்து சந்திரனுக்கு உள்ள தூரத்தைப்போல 400 மடங்கு தொலைவில் சூரியன் உள்ளது. இது தற்செயலான பொருத்தமே. இதனால்தான் சூரியனின் ஒளித் தட்டை சந்திரனால் கச்சிதமாக மறைக்க முடிகிறது.
இதில் இன்னோர் அம்சமும் அடங்கியுள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் மாறுபடுகிறது. சூரியனை பூமி நீள் வட்டப்பாதையில் சுற்றுவதே இதற்குக் காரணம்.
இதைப்போலவே பூமியை சந்திரன் நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது. ஆகவே சூரியன் தொலைவாக இருக்கின்ற நேரத்தில் சந்திரன் பூமிக்கு அருகாமையில் அமைந்து அந்தச் சமயத்தில் சூரிய கிரகணம் நிகழ்ந்தால் அப்போது சூரிய ஒளித்தட்டின் நடுவே சந்திரன் அமையும். இது கங்கண சூரிய கிரகணமாகும்.
கங்கண சூரிய கிரகணத்தின்போது சூரியன் ஒளிரும் வளையல் போன்று காணப்படும்.
இந்தியாவின் வட மாநிலங்களில் முழு சூரிய கிரகணம் தெரியும்போது சென்னையில் அவ்விதம் தெரியாதது ஏன் என்று கேட்கலாம்.
முழு சூரிய கிரகணத்தின்போது சந்திரனின் வட்ட வடிவ கரு நிழல் எங்கு படிகிறதோ அங்கு மட்டுமே முழு சூரிய கிரகணம் தெரியும். பிற இடங்களில் சந்திரனின் புற நிழல் விழும். அவ்வித இடங்களில் சூரியன் ஓரளவுதான் மறைக்கப்படும்.
பூரண கிரகணத்தின்போது சூரியன் சிலசமயம் இரண்டு அல்லது மூன்று நிமிஷங்கள் நீடிப்பதற்கும் வேறு சமயங்களில் 6 நிமிஷம் வரை நீடிப்பதற்கும் காரணம் உண்டு.
இது சூரியன் - பூமி இடையிலான தூரம், பூமி - சந்திரன் இடையிலான தூரம் போன்ற அம்சங்களைப் பொருத்தது. தவிர, சந்திரனின் கரு நிழல் பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் விழுகின்ற வகையில் பூரண சூரிய கிரகணம் நிகழுமானால் அது அதிக நேரம் நீடிப்பதாக இருக்கும்.
இந்தியாவைப் பொருத்தவரையில் மேற்கு வங்கத்தில் உள்ள கூச்பெஹார் என்னுமிடத்தில்தான் சூரியன் மிக அதிகபட்சமாக சுமார் 4 நிமிஷ நேரம் முற்றிலுமாக மறைக்கப்படுகிறது. எனினும் ஜப்பானுக்குத் தெற்கே உள்ள தீவுகளில்தான் இது 6 நிமிஷம் 39 வினாடியாக உள்ளது. அத் தீவுவாசிகள் கொடுத்து வைத்தவர்கள்.
கட்டுரையாளர் : என். ராமதுரை

நன்றி : தினமணி


No comments: