Wednesday, July 22, 2009

குடித்து விட்டு விமானம் ஓட்ட வந்து பிட்பட்ட 29 பைலட்கள்

குடித்து விட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்படி குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டி, போலீசாரிடம் சிக்கி சீரழிபவர்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் குடித்து விட்டு விமானங்களை ஓட்டும் பைலட்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?. அங்கேயும் குடித்து விட்டு விமானத்தை ஓட்டுபவர்கள் இருக்கிறார்களாம். அப்படி குடித்து விட்டு வந்த பைலட்கள் சோதனையின் போது பிடிபட்டும் இருக்கிறார்கள். பொதுவாக தனியார் விமானங்களில் தான் இது அதிகம் நடக்கிறதாம். கடந்த ஒரு வருட காலத்தில் தனியார் விமானங்களில் பைலட்களாக இருக்கும் 29 பேர், விமானம் புறப்படும் முன் நடத்தப்படும் சோதனையின் போது, குடித்து விட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பிடிபட்டிருப்ப தாக, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் ராஜ்ய சபாவில் தெரிவித்திருக்கிறார். பொதுவாக விமானங்களை ஓட்ட வரும் விமானிகள் குடித்து விட்டு வரக்கூடாது என்பது விதி. அவர்கள் குடித்திருக்கிறார்களா என்று விமானம் புறப்படும் முன் சோதனை நடத்தப்படுவது வழக்கம். அப்படி குடித்து விட்டு வந்திருப்பது தெரியவந்தால் அவர்கள் உடனடியாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, அதிகபட்சமாக ஆறு வாரங்கள் வரை விமானம் ஓட்ட அனுமதிக்கப்படுவது இல்லை. அதையும் மீறி 29 பைலட்கள் விமானத்தை ஓட்ட வந்து பிடிபட்டிருப்பதாக பிரபுல் படேல் தெரிவித்திருக்கிறார். டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேஷன் தான் இதனை கண்காணிக்கிறது. குடித்து விட்டு விமானம் ஓட்ட வந்து பிடிபட்டவர்களில் அதிகமானவர்கள் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸை சார்ந்த பைலட்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது. பிடிபட்ட 29 பைலட்களில் 8 பேர் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் விமானிகள். அதற்கு அடுத்ததாக, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ் ஜெட் விமானிகள் தலா ஆறு பேர் பிடிபட்டிருக்கிறார்கள். ஜெட்லைட், பாரமவுன்ட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்களை சேர்ந்த விமானிகள் தலா மூன்று பேர் பிடிபட்டிருக்கிறார்கள்.
நன்றி : தினமலர்


No comments: