Monday, April 27, 2009

பங்குச் சந்தையில் நித்யகண்டம் பூர்ண ஆயுசு தான்

ஐந்து வாரங்கள் தொடர்ந்து மேலேயே சென்று கொண்டிருந்த பங்குச் சந்தை, திங்களின் துவக்கத்திலிருந்து தினமும் கீழேயே சென்றது. அதை மாற்றும் வகையில் வியாழனன்று சந்தைகள் ஒரேயடியாக மேலே சென்றன. வியாழனன்று துவக்கத் தில் கீழேயே இருந்த பங்குச்சந்தை நஷ்டத்தையும் சரிக்கட்டி பின் 300 புள்ளிகளுக்கும் மேலாக லாபத்திலும் முடிவடைந்தது. வியாழனன்று சாப்ட்வேர் துறைப்பங்குகளும், மெட்டல் துறைப் பங்குகளும் கொடிகட்டிப் பறந்தன. வியாழனைத் தொடர்ந்த வெள்ளியும் நல்ல வெள்ளியாகவே முடிவடைந்தது. சந்தையும் 11 ஆயிரத்தைத் தாண்டி நிலைத்து நின்றது. அதானி என்டர்பிரைசஸ் தனது அதானி பவர் கம்பெனியின் புதிய வெளியீட்டைக் கொண்டுவருவதாக அறிவித்தவுடன் அந்தக் கம்பெனியின் பங்குகள் மேலே சென்றன. இதுபோன்ற ஏற்றத் தாழ்வுகள் அடுத்த வாரம் வரை இருக்கலாம். மும்பையில் 30ம் தேதி ஓட்டுப்பதிவு இருப்பதால், அன்று பங்குச்சந்தைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே, 'எப் அண்ட் ஓ' குளோசிங் புதன்கிழமை என்பதால், வரும் வாரம் சற்று சிக்கல் தான். நேற்று முன்தினம் இறுதியாக மும்பை பங்குச் சந்தை 194 புள்ளிகள் மேலே சென்று 11 ஆயிரத்து 329 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை 57 புள்ளிகள் மேலே சென்று 3,480 புள்ளிகளுடனும் முடிவடைந்தன. இந்த வார பணவீக்கம் 0.26 சதவீதமாகக் கூடியுள்ளது. குறைந்து கொண்டே வந்த பணவீக்கம் கூடியுள்ளது என்பது ஒரு விதத்தில் ஆறுதலான விஷயம் தான். அடுத்த ஆண்டு பணவீக்கம் 4 சதவீதத்தில் வந்து நிற்கும் என அரசு கணித்துள்ளது. ரிலையன்சின் லாபம் சென்ற ஆண்டு இதே காலாண்டை விட 9 சதவீதம் குறைந்துள்ளது. ரிபைனரி லாபம் குறைந்து வருவதாலும், எண்ணெய் தேவைகள் மக்களிடையே குறைந்து வருவதாலும் காலாண்டு லாபங்கள் குறைந்ததாகக் கூறப்படுகிறது. ஹெச்.டி.எப்.சி., வங்கியின் லாபம் சென்ற ஆண்டு இதே காலாண்டை விட 34 சதவீதம் கூடியுள்ளது. ஐடியா செல்லுலரின் லாபம் சென்ற ஆண்டு இதே காலாண்டை விட 18 சதவீதம் கூடியுள்ளது. வங்கிகளின் லாபங்கள் இந்தக் காலாண்டில் கூடிவருகிறது. இது தொடருமா என்பது கேள்விக்குறி தான். ஏனெனில், வட்டி விகிதங்கள் குறைந்து வருவதாலும், வங்கிகளின் மார்ஜின்கள் குறைந்து வருவதாலும் இந்த லாபங்கள் இன்னும் ஓரிரண்டு காலாண்டுகளுக்கு நீடிக்கலாம். அதற்கு மேலும் நீடிக்குமா என்பது யோசிக்கவேண்டிய விஷயம் தான். பொதுவாகப் பார்க்கப் போனால், கம்பெனிகள் தாங்கள் வாங்கிய கடன்களுக்காகச் செலுத்திய வட்டி கூடியுள்ளது. வங்கிகளின் வராக்கடன்கள் கூடியுள்ளன. வருங்காலங்களில் வராக்கடன்கள் 5 சதவீதம் அளவிற்குச் செல்லும் என்றும் ஐயப்படுகின்றனர். மறுபடி புதிய வெளியீடுகளின் காலம்: சந்தை நிமிருவதால் பல கம்பெனிகள் இது தான் சமயம் என்று தங்களது புதிய வெளியீடுகளைக் கொண்டுவரலாம் என முடிவு செய்துள்ளன. வருங்காலங்களில் பல கம்பெனிகளின் புதிய வெளியீடுகள் வரலாம். சரியான விலை வைத்து வரும் கம்பெனிகள் ஜெயிக்கும். வீட்டு வசதிக் கடன் கம்பெனிகளின் காலாண்டு முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது அந்தக் கம்பெனிகள் வழங்கிய கடன்கள் இந்தக் காலாண்டில் கூடியுள்ளன. அது போல லாபங்களும் கூடியுள்ளன. இது என்ன செய்தியைத் தெரிவிக்கிறது... வீட்டுக் கடன்களுக்கான தேவை கூடி வருகிறது என்பதை இதை வைத்துப் பார்க்கும் போது மறுபடி கட்டுமானத்துறை கம்பெனிகள் சிறிது சிறிதாக (செங்கல் செங்கலாக) நிமிரும் வாய்ப்புக்கள் உள்ளன. வெளிநாட்டுக் கம்பெனிகள் இந்தியாவில் கம்பெனிகளில் முதலீடு செய்வது பொல, இந்தியக் கம்பெனிகளும் வெளிநாட்டுக் கம்பெனிகளில் முதலீடு செய்து வருகின்றன. அதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதுமே பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள நிலையில் அதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஒரு காலத்தில் இந்தியாவில் யார் வந்து முதலீடு செய்வர் என்று காத்துக் கொண்டிருந்த நிலை போய், நாம் வெளிநாடுகளில் சென்று கம்பெனிகளில் முதலீடு செய்வதும், கம்பெனிகளையை வாங்குவதும் பெரிய அளவில் நடப்பது நல்ல விஷயம் தானே?
தேர்தலின் இரண்டாவது கட்ட ஓட்டுப்பதிவு சதவீதங்கள் குறைவாக இருப்பதாகப் பலருக்குக் கிலியை ஏற்படுத்தியுள்ளது. முதல் கட்ட ஓட்டுப் பதிவில் இருந்த விறுவிறுப்பு தற்போது இல்லையோ என்ற எண்ணங்களைத் தோற்றுவித்துள்ளது. பாதி தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ள நிலையில் எல்லாரும் அடுத்த மாதம் முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற கவலையில் உள்ளனர். பங்குச்சந்தையில் தற்போது காணும் ஏற்றம், ஓட்டுப்பதிவு முடிந்து தேர்தல் முடிவுக்குப் பின் சரிவில் செல்லவே அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு முன் நடந்த தேர்தல்களை அடுத்து சந்தை சரிவையே சந்தித்துள்ளது. தேர்தல் முடிவு மே மாதம் 16ம் தேதி (சனிக்கிழமை) வருவதால் பங்குச்சந்தை தப்பித்தது. இருப்பினும், மே மாதம் 18ம் தேதி முதல் 29ம் தேதி வரை நித்ய கண்டம் பூர்ண ஆயுசாகத் தான் சந்தை இருக்கும். சர்வ ஜாக்கிரதை.


-சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்


No comments: