Friday, October 24, 2008

பிக்சட் டிபாசிட்களை குவிக்க அள்ளி விடுது வங்கிகள் : கெடுபிடி கட்டணம் கிடையாது

பொது மக்களின் டிபாசிட் பணம், தங்களிடம் இருந்து மற்ற வங்கிக்கு போகாமல் தடுக்க, சலுகைகளை அளிக்க பல வங்கிகளும் முன்வந்துள்ளன. வங்கிகளிடம் ரொக்க கையிருப்பு குறைந்து கொண்டே வருகிறது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார தடுமாற்றங்களால், இந்தியாவிலும் அதன் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. வங்கிகளின் மீதான நம்பிக்கையில் லேசான சறுக்கல் கூட வராமல் தடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஓராண்டுக்கு மேல் பிக்சட் டிபாசிட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஓராண்டு கழிந்த நிலையில், எந்த கட்டணமும் இல்லாமல் பணத்தை திரும்பப் பெறும் சலுகையை சில வங்கிகள் அளிக்கின்றன. முன்பு கறாராக இருந்த வங்கிகள் இப்போது விதியை தளர்த்தியுள்ளன. வங்கிகளில் பொதுமக்கள் வைத்துள்ள டிபாசிட்கள் 4.06 சதவீதத்தில் இருந்து 2.6 சதவீதமாக குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதே சமயம், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதும், கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதும் 50 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. இதனால், பிக்சட் டிபாசிட் உட்பட டிபாசிட்களை தக்க வைக்கும் நடவடிக்கைகளை வங்கிகள் பலவும் எடுக்க ஆரம்பித்து விட்டன. எச்.டி.எப்.சி., போன்ற வீட்டுக்கடன் அளிக்கும் வங்கிகள் கூட சலுகைகளை அளித்து பிக்சட் டிபாசிட்களை பெருக்க புதிய திட்டங்களை தீட்டியுள்ளன. இது போல, பிக்சட் டிபாசிட்களுக்கு வட்டி வீதத்தையும் அதிகரிக்க வங்கிகள் ஆரம்பித்துள்ளன. போட்டா போட்டி போட்டு, பொதுமக்களிடம் இருந்து டிபாசிட்களை குவிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க், 1,000 நாள் அடிப்படையில் போடப்படும் பிக்சட் டிபாசிட்களுக்கான வட்டி வீதத்தை 1 சதவீதம் உயர்த்தி, இப்போது 10.50 சதவீதமாக அறிவித்துள்ளது. கோடக் மகிந்திரா வங்கி, குறிப்பிட்ட கால அளவில் பெறப்படும் டிபாசிட்களுக்கு வட்டியை உயர்த்தியுள்ளது.
நன்றி : தினமலர்


No comments: