Friday, October 24, 2008

பங்கு முதலீட்டாளர் பீதி அடைய வேண்டாம் : சிதம்பரம் வேண்டுகோள்

கடந்த சில நாட்களாக பங்கு சந்தையில் நிலவி வரும் கடும் வீழ்ச்சியை கண்டுவரும் முதலீட்டாளர்கள், சென்செக்ஸ் 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே சென்றுள்ளதால் பீதி அடைந்துள்ளனர். பெரும்பாலான பெரிய நிறுவனங்களின் பங்குகள் அதன் மதிப்பை இழந்துள்ளன. இதனால் தங்களிடம் இருக்கும் பங்குகளின் மதிப்பு மேலும் குறைந்து போவதற்குள் விற்று, ஏதோ கொஞ்சம் பணத்தையாவது காப்பாற்றிக்கொள்வோமே என்று, கிடைத்த பணத்திற்கு பங்குகளை விற்று வருகின்றனர். பங்கு சந்தையில் அதிக அளவில் விற்பனை நடந்து வருவதாலேயே சந்தை சரிந்து வருகிறது. இதனையடுத்து நேற்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில், பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்கள் சந்தை சரிந்து வருவதை கண்டு பீதி அடைய வேண்டாம் என்றும் அவசரம் அவசரமாக பங்குகளை விற்க வேண்டியதில்லை என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். கிழக்கு ஆசிய பங்கு சந்தைகள் வீழ்ச்சி அடைந்து வருவதால் மட்டுமே இந்திய சந்தையும் வீழ்ந்து விடும் என்று அர்த்தமில்லை. எனவே முதலீட்டாளர்கள் பீதி அடைந்து பங்குகளை விற்க வேண்டாம். அவசரப்படாமல் நிதானமாக திர்மானித்து விற்பதை பற்றி முடிவு செய்யலாம் என்று அவர் முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை தெரிவித்தார். அன்னிய முதலீட்டாளர்கள் பலர் பெருமளவு பணத்தை இந்திய சந்தையில் இருந்து எடுத்துக்கொண்டதால், ரூபாயின் மதிப்பு குறைந்து, இங்கு கேப்பிட்டலில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. எனினும் அன்னிய முதலீட்டாளர்களிடமிருந்து, எடுத்துக்கொண்ட பணத்தை திரும்ப பெற வேண்டிய நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். இந்த குழப்பங்கள் எல்லாம் சரியாகி விட்டதும் மீண்டும் இந்தியாவுக்குள் பெருமளவு பணம் வந்து விடும். அவைகள் இ.சி.பி., எஃப்.சி.என்.ஆர்., என்.ஆர்.இ.,வழியாக இங்கு வந்து சேரும். அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் ( எஃப்.ஐ.ஐ.) பிரச்னை தீர்ந்து விட்டால், அவர்கள் இந்திய கார்பரேட் மற்றும் அரசாங்க கடன் சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பித்து விடுவார்கள். எனவே அதுவரை பொறுமை காக்குமாறு முதலீட்டாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
நன்றி : தினமலர்


No comments: