நன்றி ; தினமலர்
Friday, October 24, 2008
வங்கிகள் இனி தாராளமாக கடன் தரும் : சிதம்பரம் தகவல்
'பணப்புழக்கம் சகஜமாகி வருவதால், கடன் கொடுப்பதில் வங்கிகள் தாராளமாக நடந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வங்கிகள் உபரி நிதியை ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது' என மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார். மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் டில்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஏழு பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை சமீபத்தில் சந்தித் தேன். கடன் கொடுப்பதை தீவிரமாக்க ஆலோசனை வழங்கினேன். தற்போது பணப்புழக்கம் திருப்திகரமாக உள்ளதால், கடன் கொடுப்பது தீவிரப்படுத்தப் பட்டுள்ளது என வங்கித் தலைவர்கள் தெரிவித்தனர். இந்த மாத கடன் நடவடிக்கை களில் தற்காலிகமாக தொய்வு ஏற்பட்டது. தற்போது முன்பு போல் கடன் வழங்குவதை வங்கிகள் மும்முரப்படுத்தியுள்ளன. வங்கிகள் தங்களிடம் உபரியாக உள்ள நிதியை ரிசர்வ் வங்கியில் வைப்பதற்கு பதிலாக, அந்த பணத்தை முழுமையாக கடன் கொடுக்க பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அன்னிய நிறுவன முதலீட்டாளர் கள், இந்தியாவில் முதலீடு செய்து இருக்கும் பங்குகளை, மற்ற அன்னிய நிறுவன முதலீட்டு நிறு வனங்களுக்கு மாற்றி கொடுப்பது, ஷார்ட் செல்லிங் நடைமுறைக்கு இணையானது. இதை நிறுத்தும்படி 'செபி' கேட்டுக் கொண்டுள்ளது. அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் ஏற்கனவே இதுபோல் மாற்றி கொடுத்து இருந்ததை திரும்பப் பெறும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சிதம்பரம் கூறினார். இதற்கிடையில், பணவீக்கம் பற்றிய புள்ளி விவரம் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி, கடந்த 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 11.07 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் 11.40 சதவீதமாக இருந்தது. குறையும்: பணவீக்க விகிதம் டிசம்பர் மாதத்திற்குள் 10 சதவீதத்திற்குள்ளாக வந்துவிடும் என்று பொருளாதார விவகாரத்துறை செயலர் அசோக் சாவ்லா நேற்று நிருபர்களிடம் கூறினார். மேலும் அவர் கூறுகையில், 'சில மாதங்களுக்கு முன்பு 13 சதவீதத்தை எட்டிய பணவீக்கம், அரசு எடுத்த நடவடிக்கையால் கட்டுப் படுத்தப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் இது 9.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறையும்' என்றார். அதேசமயம் இந்தியப் பொருளாதார சூழ்நிலை அவ்வளவு சாதகமாக இருக்காது என்று ரிசர்வ் வங்கி கருத்து தெரிவித்திருக்கிறது. சர்வதேச அளவில் கடும் நெருக்கடி நிலவிய போதிலும், மற்ற ஆசிய நாடுகளை விட இந்தியா வலுவான பொருளாதாரத்தை கொண்டுள்ளதாலும், வளர்ச்சிக்கு உறுதியான நிதி நிர்வாகத்தை கொண்டு இருப்பதால், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையை எளிதாக முறியடிக்கும் என்று உலக வங்கி நற்சான்றிதழ் கொடுத்துள்ளது.
Labels:
தகவல்,
ரிசர்வ் வங்கி,
வங்கி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment