Thursday, October 15, 2009

பலமாக ஒலிக்கிறது பங்குச் சந்தையில் தீபாவளி வெடிச்சத்தம்

சந்தையில் ஒரே தீபாவளி தான். வெடிச்சத்தத்தில் எவ்வளவு புள்ளிகள் மேலே சென்றிருக்கிறது சந்தை என்று தெரிந்து கொள்வதே கடினமாக இருக்கிறது. நேற்று முன்தினம் சந்தைக்கு விடுமுறையாக இருந் தாலும், திங்களும், நேற்றும் சந்தையை ராக்கெட் வேகத்தில் மேலே கொண்டு சென்றன. திங்களன்று சந்தை ஏன் இவ்வளவு கூடியது? இந்தியாவின் தொழில் வளர்ச்சி ஆகஸ்ட் மாதம் 10.4 சதவீதத்தை எட்டியிருந்தது. இது, கடந்த ஆண்டு இதே சமயத்தில் 1.6 சதவீதமாக இருந்தது. இந்த அளவு சிறப்பான வளர்ச்சி சதவீதம் இருந்ததால், சந்தை ஜிவ்வென ஏறியது. கடந்த 22 மாதத்தில் இது ஒரு சிறப்பான சதவீதம். மேலும், சின்ன அம்பானியின் பச்சைக் கொடியும் காரணம் எனலாம். தங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையை சரியான முறையில் தனது அண்ணன் முகேஷ் தீர்த்து வைப்பார் என்று நம்பிக்கை இருக்கிறது என்று கூறிய அறிக்கையை அடுத்து, சந்தையில் அதன் கம்பெனியின் பங்குகள் மேலே சென்றன.
குறிப்பாக ரிலையன்ஸ் கம்பெனியின் பங்குகள் 3 சதவீதம் அளவிற்கு மேலே சென்றது. இது தவிர, நல்ல காலாண்டு முடிவுகளும் சந்தையை மேலே கொண்டு சென்றன. மும்பை பங்குச் சந்தை 384 புள்ளிகள் அன்றைய தினம் மேலே சென்றது.
நேற்று ஏன் கூடியது? சிறப்பான இரண்டாவது காலாண்டு முடிவுகளும், இந்தியா புல்ஸ் பவர் புதிய வெளியீடு சிறப்பாக செலுத்தப்பட்டிருப்பதும், எச்.டி.எப்.சி., வீட்டுக் கடன் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருந்ததும் காரணம். நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 204 புள்ளிகள் கூடி 17,231 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 63 புள்ளிகள் கூடி 5,118 புள்ளிகளுடனும் முடிந்தது. மும்பை பங்குச் சந்தை, 17,000 புள்ளிகளை தாண்டியும், தேசிய பங்குச் சந்தை 5,000 புள்ளிகளை தாண்டியும் நிலைத்து நிற்பது சந்தைக்கும் மகிழ்ச்சி, முதலீட்டாளர்களுக்கும் மகிழ்ச்சி. கடந்த 17 மாதத்தில் இது தான் அதிகபட்ச உயர்வு.
சந்தையுடன் வளரும் தங்கம்: அமெரிக்க டாலர் உலகளவில் மற்ற கரன்சிகளுக்கு எதிராக வீக்காக இருப்பதால், தங்கம் விலை ஏறி வருகிறது. ஒரு அவுன்ஸ் தங்கம், 1,068 டாலர் என்ற அளவிற்கு வந்துள்ளது. சுத்த தங்கம் (24 காரட்) 16,000 ரூபாய்க்கு மேல் வந்து நிற்கிறது.
புதிய வெளியீடுகள்: இந்தியா புல்ஸ் பவர் லிமிடெட் தனது புதிய வெளியீட்டை கொண்டு வந்துள்ளது.
இது நேற்றைய இறுதி வரை ஒன்பது தடவை செலுத்தப் பட்டுள்ளது. சிறிய முதலீட்டாளர்கள் பகுதி 0.52 மடங்கு செலுத்தப்பட்டுள்ளது. 12ம் தேதி முதல் 15ம் தேதி (இன்று) வரை வெளியீடு இருக்கும். விலை, 40 முதல் 45 ரூபாய் வரை வைக்கப் பட்டுள்ளது. சமீப காலத்தில் வெளிவந்த புதிய வெளியீடுகள் எல்லாம் முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தைத் தந்துள்ளது. ஆனால், இந்த வெளியீடு செலுத்தப்பட்டிருக்கும் விதத்தை பார்த்தால் ஒரு சிறிய பிரிமியத்தை பட்டியலிடப்படும் போது பார்க்கலாம் எனத் தோன்றுகிறது.
காலாண்டு முடிவுகள்: வந்து கொண்டிருக்கும் காலாண்டு முடிவுகள் நல்ல விதமாகவே இருக்கிறது. நல்ல காலாண்டு முடிவுகளை பார்த்து பங்குகளை குறுகிய கால லாபத்திற்கு வாங்குபவர்களுக்கு பயனிருக்கும்.
டாலரும் ரூபாயும்: டாலர் சிறிது வலுப்பெற்றது போல் தோன்றியது. ஆனால், நேற்றைய தினம் மறுபடி மிகவும் வலுவிழந்து 46.13 - 46.14 லெவலுக்கு வந்து விட்டது. சிறிது காலம் முன்பு பார்வர்ட் கான்ட்ராக்ட் போடுவது நல்லது என்று கூறியிருந்தோம்; போட்டீர்களா? போட்டிருந்தால் லாபப்பட்டிருக்கலாம்.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்? வந்த, வரப்போகும் நல்ல காலாண்டு முடிவுகளை முன்னமேயே கணக்கில் எடுத்துக்கொண்டு விட்டது பங்குச் சந்தை. ஆதலால், பெரிய ஏற்றங்கள் இல்லாவிடினும் சந்தை நிதானமாக பயணித்து இன்னும் சிறிது ஏறும்.
நன்றி : தினமலர்


No comments: