Thursday, December 31, 2009

பிஸ்கட் உட்பட பாக்கெட் உணவு பொருட்கள் விலை உயர்வு : பிரபல நிறுவனங்கள் முடிவு

சர்க்கரை, பால் மற்றும் வெண்ணெய் போன்ற மூலப்பொருட்கள் விலை உயர்ந்து விட்டதால், பிரபல நிறுவனங்களின் பிஸ்கட் உட்பட பாக்கெட் உணவுப் பொருட்கள் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
உணவுப் பொருட்கள் பணவீக்கம் அதிகரிப்பு குறித்து ஆய்வு செய்த, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (எப்.எம்.சி.ஜி.,) தயாரிப்பு நிறுவனங்களான பிரிட்டானியா, பார்லே மற்றும் குஜராத்

கூட்டுறவு பால் பொருட்கள் தயாரிப்பு கூட்டமைப்பு (ஜி.சி.எம்.எம்.எப்.,) போன்றவை தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. உணவுப் பொருட்கள் பணவீக்கம் கடந்த பத்தாண்டுகள் இல்லாத அளவாக, தற்போது 20 சதவீதத்தை அடைந்துள்ளது. எனவே, மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பை சமாளிக்க பிரிட்டானியா நிறுவனம், தங்கள் தயாரிப்பு பிஸ்கட் உட்பட பாக்கெட் உணவுப்பொருட்களின் விலையை, 5 சதவீதம் முதல் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. மும்பையில், பார்லே நிறுவனம், 'பார்லி ஜி' (88 கிராமின்) விலையை 4 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக அதிகரித்துள்ளது.அதேபோன்று பால் விலை அதிகரிப்பை தொடர்ந்து,

அமுல் நிறுவனம், தயாரிப்புகளின் விலையை பிரிவு வாரியாக 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

மற்றொரு பெரிய நிறுவனமாக ஐ.டி.சி., அடுத்த இரண்டு வாரங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிராண்டுகளின் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், இத்துறையில் உள்ள பிற பெரிய நிறுவனங்கள், தற்போதைய நெருக்கடிகளை சமாளிப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன.

இதுகுறித்து, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வினிதா பாலி

கூறுகையில், 'எங்களின் அனைத்து பிராண்டுகளின் விலையையும், 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை, சமீபத்தில் அதிகரித்துள்ளோம். நாங்கள் லாபகரமான வளர்ச்சியையே எதிர்பார்க்கிறோம்' என்றார்.

இதுகுறித்து, குஜராத் கூட்டுறவு பால் பொருட்கள் தயாரிப்பு கூட்டமைப்பு மேலாண்மை இயக்குனர் ஆர்.எஸ்.சோதி கூறியதாவது: மூலப்பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க, தயாரிப்புகளின் விலையை 8 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளோம். 100 கிராம் வெண்ணெயின் விலையை 23 ரூபாயில் இருந்து 25 ரூபாயாக அதிகரித்துள்ளோம். சமீபத்தில், எங்கள் அனைத்து நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளின் விலையையும் அதிகரித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். எனினும், 'தங்கள் தயாரிப்பு பொருட்களின் விலையை அதிகரிக்கும் எண்ணம் தற்போது இல்லை' என, டாபர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் துகால் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்


No comments: