Thursday, April 16, 2009

நிலைத்து நிற்க துவங்கி விட்டது பங்குச் சந்தை

பங்குச் சந்தை 11,000 புள்ளிகளையும் தாண்டி பந்தயக் குதிரை போல் தான் போய்க் கொண்டிருக்கிறது. சந்தையில் முதலீடு செய்தவர்கள் அனைவரும் இன்னும் மேலே செல்ல வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றனர். திங்களன்று துவக்கமே அமர்க்களமாக இருந்தது. தொடர்ந்து 7வது நாளாக சந்தை மேலே சென்றது. நான்காவது காலாண்டு முடிவுகள் கம்பெனிகளுக்கு நன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கையில், சந்தைகள் மேலே சென்றன. இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்கள் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், பங்குகளை விற்று பணத்தை எடுத்துக் கொண்டு சென்றே இருந்தன. ஆனால், கடந்த மாதமும், இந்த மாதமும் வாங்கத் துவங்கியுள்ளன. திங்களன்று மட்டும் 580 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளன. இதுவும் சந்தை கூடியதற்கு ஒரு காரணம். முடிவாக மும்பை பங்குச் சந்தை 163 புள்ளிகள் மேலே சென்று முடிந்தது. நேற்று முன்தினம் விடுமுறையை அடுத்து, நேற்று சந்தையை வைத்து நோக்கும் போது காளைகளின் பிடியில் பங்குச் சந்தை இருப்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். காலையில் மற்ற ஆசிய சந்தைகள் கீழேயே துவங்கியதால் மும்பை பங்குச் சந்தையும் 100 புள்ளிகளுக்கும் மேலாக சரிவில் தான் துவங்கியது.
நான்காவது காலாண்டு முடிவு அறிவிப்புகள் சாதாரணமாக இன்போசிஸ் வைத்துத் தான் துவங்கும். அப்படித்தான் நேற்று இன்போசிஸ் காலாண்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அது சந்தை எதிர்பார்த்தது போல் இல்லாததாலும், மேலும் வரும் ஆண்டு வருமானம் குறைவாகவே இருக்கும் எனவும் தெரிவித்திருந்தது. இதனால், சந்தையில் அந்தக் கம்பெனியின் பங்குகளை கீழே தள்ளியதும் இல்லாமல், சந்தையில் உள்ள பல சாப்ட்வேர் கம்பெனியின் பங்குகளையும் கீழே தள்ளியது.
கடந்த வாரம் பணவீக்கம் 0.26 சதவீதம் அளவிற்கு கீழே சென்றதால், ரிசர்வ் வங்கி மறுபடி ஒரு ரேட் கட் செய்யும் என்ற எதிர்பார்ப்பிலும், வரும் பருவமழை குறித்த காலத்தில் வரும் என வானிலை ஆராய்ச்சி நிலைய அறிவிப்புகளும் சந்தை காலரை தூக்கி விட உதவின எனலாம்.
- சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்


No comments: