சர்வதேச பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண கூட்டப்பட்ட, 'ஜி-20' மாநாடு முடிந்ததும், பங்குச் சந்தைகள், 'ஜிங்குஜா... ஜிங்குஜா...' என்று மேலே போகும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், நடந்தது என்ன? சங்கு ஊதிக் கொண்டு சந்தை கீழேயே போகிறது. எவ்வளவு கீழே போகும் என்று யாருக்கும் தெரியவில்லை. 'ஜி-20' மாநாடு எவ்விதமான தீர்க்கமான முடிவுகளையும் தராததால், சந்தை பரவலாக எல்லா நாடுகளிலுமே கீழேயே இருந்தது. இது தவிர, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையாலும் சந்தையில் எவ்விதமான உயர்வையையும் திங்களன்று ஏற்படுத்தவில்லை. ஒரு சமயத்தில் 400 புள்ளிகளுக்கும் மேல், கீழே இறங்கியிருந்தது. சந்தை 9,000 புள்ளிகளுக்கு கீழேயும் சென்றது. ஆனால், 300 புள்ளிகள் அளவு மீண்டதால் சந்தை தப்பித்தது என்றே கூறவேண்டும். நேற்று முன்தினம் இறக்கத்திலேயே இருந்தது. 353 புள்ளிகள் சரிந்தது. வங்கிப் பங்குகளும், சாப்ட்வேர் பங்குகளும் இறக்கத்திற்கு வழி வகுத்தன. சந்தை எவ்விதமான பிடிமானமும் இல்லாமல் விழுந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் ஹெட்ஜ் பண்டுகள் அதிகம் விற்றதால் சந்தை மிகவும் கீழே இறங்கியது. உள்நாட்டில் சிறிய முதலீட்டாளர்களும், மியூச்சுவல் பண்டுகளும் வாங்கிக் கொண்டிருந்தாலும், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவில் விற்பதால் சந்தை கீழேயே சென்று கொண்டிருக்கிறது. நேற்று சந்தை மேலேயே துவங்கியது. பலரும் ஆறு நாட்களுக்கு பின் சந்தை மேலே செல்கிறது என்று தான் நினைத்தனர். அதுபோல சந்தையும் 250 புள்ளிகளுக்கு மேலே சென்றது. முடிவாக நடந்ததே வேறு. 163 புள்ளிகள் குறைந்து மும்பை பங்குச் சந்தை 8,773 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 2,638 புள்ளிகளுடனும் நேற்று முடிவடைந்தது. சந்தை ஏன் இந்த அளவு விழுகிறது? கம்பெனிகள் பலவற்றில் வாரத்தில் பல ஷிப்டுகள் குறைக்கப்படுகின்றன என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது, எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போல் சந்தையை இறக்கத்திற்கு மேலும் ஒரு காரணமாக இருக்கிறது. கச்சா எண்ணெய் பேரல் 50 முதல் 60 டாலர் வரை உழன்று கொண்டிருக்கிறது. யாருமே நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள் இவ்வளவு குறைவாக வருமென. மேலும் பல பொருட்களும், 'கமாடிட்டி சந்தை'யில் குறைந்து வருகிறது. இது, சந்தையை பலப்படுத்துவதற்கு பதில் கீழே தள்ளிக் கொண்டிருக்கிறது. அதாவது, உலகளவில் கமாடிட்டி டிரேடிங்கில் பலரும் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளது பங்குச் சந்தையையும் பாதிக்கிறது. என்ன செய்யலாம்? சந்தை 9,000க்கும் கீழே வந்திருக்கிறது. இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று தான் கருதவேண்டும். ஆவரேஜ் செய்ய விரும்புபவர்களோ அல்லது புதிதாக நீண்டகாலத்திற்கு வாங்க விரும்புபவர்களுக்கோ ஏற்ற சந்தை. இருந்தாலும், முதலீட்டாளர்களின் மனநிலையும் முக்கியம். இது ஆபத்தானது என்ற எச்சரிக்கை உணர்வுடன் சந்தைக்கு வரவேண்டும். எடுத்த எடுப்பிலேயே பணத்தை போடாமல் சந்தையின் ஏற்றம் இறக்கத்தையும், உலக நடப்புகளையும் கவனித்து செயல்படுவது நல்லது.
- சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment