Friday, October 31, 2008

பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் : 700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தன

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தக ஆரம்பித்ததிலேயே நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. வர்த்தகம் ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில், சென்செக்ஸ் 792.03 புள்ளிகள் உயர்ந்து 9,836.54 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 214.80 புள்ளிகள் உயர்ந்து 2,911.85 புள்ளிகளாக இருந்தது. இந்த வாரம் திங்கட்கிழமை வரை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வந்த பங்கு சந்தை, செவ்வாய்க்கிழமை 2 மணி நேரம் மட்டும் நடந்த முகுரத் வர்த்தகத்தின் போது 500 புள்ளிகள் வரை உயர்ந்திருந்தது. அதற்கு அடுத்த நாளும் சந்தையில் முன்னேற்றம் தான் காணப்பட்டது. நேற்று விடுமுறைக்குப்பின் இன்று துவங்கிய பங்கு சந்தையில் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களியையே மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இன்றைய வர்த்தகத்தில் மெட்டல், ஆயில்,பேங்கிங், டெலிகாம், ஐ.டி., ஆட்டோ மற்றும் கேப்பிட்டல் குட்ஸ் பங்குகள் பெருமளவில் வாங்கப்பட்டன. சென்செக்ஸ் அதிகபட்டமாக 9,870.42 புள்ளிகள் வரை உயர்ந்து, பின்னர் வர்த்தக முடிவில், நேற்றைய நிலையில் இருந்து 743.55 புள்ளிகள் ( 8.22 சதவீதம் ) உயர்ந்து 9,788.06 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி அதிகபட்சமாக 2,921.35 புள்ளிகள் வரை உயர்ந்து, பின்னர் முடிவில் 188.55 புள்ளிகள் ( 6.99 சதவீதம் ) உயர்ந்து 2,885.60 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்று அதிகம்ற உயர்ந்திருந்தது மகிந்திரா அண்ட் மகிந்திரா பங்குகள்தான். 23 சதவீதம் உயர்ந்திருந்தது. ஹெச்டிஎஃப்சி, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஹிண்டல்கோ, டாடா ஸ்டீல், டாடா பவர், டாடா கம்யூனிகேஷன், ஹெச்.சி.எல் டெக், கெய்ர்ன் இந்தியா, ஐடியா செல்லுலார் ஆகியவை 10 முதல் 18 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி 5 சதவீதம் இறங்கியிருந்தது. ஹாங்காங்கின் ஹேங்செங்க் 2.52 சதவீதம், சீனாவின் ஷாங்காய் 1.97 சதவீதம், சிங்கப்பூரின் ஸ்டெயிட் டைம்ஸ் 0.43 சதவீதம் இறங்கியிருந்தது. ஆனால் ஜகர்த்தா, கோஸ்பி, தைவானில் 2.6 சதவீதத்தில் இருந்து 7.06 சதவீதம் உயர்ந்திருந்தது.
நன்றி : தினமலர்


No comments: