Friday, October 31, 2008

சிங்கூர் நிலத்தை டாடா திருப்பி கொடுக்க வேண்டும் : இடதுசாரி கட்சி கோரிக்கை

மேற்கு வங்கத்தில் உள்ள சிங்கூரில் இருந்து டாடா மோட்டார்ஸ் வெளியேறி விட்டதால், அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த இடத்தை அவர்கள் அரசாங்கத்திடம் திருப்பி கொடுக்க வேண்டும் என்று அங்குள்ள ஆளும் கட்சியான இடதுசாரி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. சிங்கூரில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் அங்கிருந்து முழுமையாக டாடா வெளியேறி விட்டது. அங்கு தயாரிக்கப்படுவதாக இருந்த டாடாவின் நானோ கார் திட்டம்ற இப்போது குஜராத்திற்கு மாற்றப்பட்டு விட்டது. ஆனால் அந்த இடம் இன்னமும் டாடாவிடம் தான் இருக்கிறது. அந்த இடத்தை அரசாங்கம் பெற்று அந்த இடத்தை வேறு தொழிற்சாலைக்கு கொடுத்து அங்கு தொழில் துவங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆளும் இடதுசாரி முன்னணி தலைவர் பிமன் போஸ் தெரிவித்துள்ளார். அந்த இடம் விவசாயிகளுக்கும் திருப்பி கொடுக்கப்படாமல், அல்லது வேறு தொழிற்சாலையும் அமைக்கப்படாமல் இருந்தால், அந்த இடம் ஏலம் விடப்படவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். இது குறித்து நடந்த இடதுசாரி முன்னணியின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல் அமைச்சர் புத்ததேப் பட்டாச்சார்ஜி, அந்த இடத்தில் டாடாவே வேறு தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்றார்.
நன்றி : தினமலர்


No comments: