Monday, November 17, 2008

தினம் தினம் ரூ.22 கோடி நஷ்டமடையும் பெங்களுரு விமான நிலையம்

பெங்களுருவில் புதிதாக விமான நிலையம் திறக்கப்பட்டு ஆறு மாதங்களாகியும் அது தொடர்ந்து கடுமையான நஷ்டத்தை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதனை நிர்வகிக்கும் பெங்களுரு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட்., ( பி.ஐ.ஏ.எல்.,) நாள் ஒன்றுக்கு ரூ.22 கோடி நஷ்டமடைந்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் மொத்தமாக அது அடைந்த நஷ்டம் ரூ.130 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக, புதிதாக விமான நிலையம் துவங்கிய முதல் ஐந்து வருடங்களுக்கு அதற்கு நஷ்டம்தான் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் பெங்களுரு விமான நிலையத்தை பொருத்தவரை, அவர்கள் எதிர்பார்த்த நஷ்டத்தை விட கூடுதலான நஷ்டம் ஏற்படுவதாக சொல்கிறார்கள். இந்த பெரும் நஷ்டத்திற்கு அவர்கள் சொல்லும் முதல் காரணம், அவர்களுக்கு கொடுக்கப்படும் யு.டி.எஃப்., என்று சொல்லப்படும் யுசர் டெவலப்மென்ட் ஃபீஸ் குறைவாக கொடுக்கப்படுவதுதானாம். மத்திய அரசாங்கத்திடம் அவர்கள் கேட்பதோ பயணி ஒருவருக்கு ரூ.675 . ஆனால் இந்த தொகை அதிகமாக இருக்கிறது என்று அரசாங்கம் இதுவரை அந்த தொகைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ஐதராபாத் விமான நிலையத்தில் யு.டி.எஃப்., பயணி ஒருவருக்கு ரூ.375 தான் கொடுக்கப்படுகிறது என்பதுதான். நஷ்டத்திற்கு இன்னொரு காரணம், பயணிகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது. ஆறு மாதங்களுக்கு முன் விமான நிலையம் திறக்கப்பட்டபோது, தினமும் 170 விமானங்கள் இங்கு இயக்கப்பட்டன. ஆனால் இப்போதோ அது 162 ஆக குறைந்து விட்டது. இந்த விமான நிலையத்தை பயன்படுத்தும் பெரும்பாலான விமான கம்பெனிகளும், பி.ஐ.ஏ.எல்.,க்குற கொடுக்க வேண்டிய கட்டணத்தை ஒழுங்காக கொடுக்காமல் தாமதப்படுத்துகின்றன.அதுவும் நஷ்டம் கூடுவதற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.
நன்றி : தினமலர்


No comments: