Saturday, July 11, 2009

இன்போசிஸின் நிகர லாபம் 17.3 சதவீதம் அதிகரித்திருக்கிறது

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ், ரூ.5,472 கோடியை மொத்த லாபமாக பெற்றிருக்கிறது. கடந்த வருடம் முதல் காலாண்டுடன் ஒப்பிட்டால், இது 12.7 சதவீதம் அதிகம். அதேபோல் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.1,527 கோடி கிடைத்திருக்கிறது. இது கடந்த நிதி ஆண்டைக்காட்டிலும் 17.3 சதவீதம் அதிகம். இது எதிர்பார்த்த லாபத்தை விட அதிகம். இந்த தகவலை வெளியிட்ட அந்த நிறுவனத்தின் சிஇஓ மற்றும் மேலாண் இயக்குனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், சர்வதேச அளவில் நிலவும் மந்தமான பொருளாதார நிலையிலும் கூட இந்த அளவுக்கு லாபம் சம்பாதித்திருப்பது ஒரு சாதனையே என்றார். இத்தனைக்கும் எங்களுக்கு ஆர்டர்களை கொடுத்துக்கொண்டிருக்கும் முக்கிய 10 கம்பெனிகளின் ஆர்டர்கள் இந்த காலாண்டில் 25.8 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆனால் இதைவிட அதிகமாக கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் அது 30.1 சதவீதம் குறைந்திருந்தது.இதிலிருந்து உலக பொருளாதாரம் ஒரு நிலையற்ற தன்மையில் இருப்பது தெரிய வரும் என்றார் கோபாலகிருஷ்ணன். நாங்கள் இந்த நிதி ஆண்டில் அவர்களது ஆர்டர்களை எதிர்பார்க்காமல், இந்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து ஆர்டர்களை பெற்று வேலை செய்து வருகிறோம் என்றார் அவர்.
நன்றி : தினமலர்


No comments: