Thursday, November 13, 2008

பங்குச் சந்தையில் 'மீன்' பிடிக்க வாறீங்களா

பங்குச் சந்தையில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ஏற்பட்ட ஏற்றமெல்லாம் நீர்க்குமிழியா என்ற சந்தேகம் வந்துள்ளது. ஏனெனில், நீர்க்குமிழி தான் திடீரென பெரிதாகும். அப்படி ஒரு ஏற்றம் இருந்தது. அந்த நீர்க்குமிழி ஒரு அளவுக்கு மேல் பெரிதாகியவுடன் உடைந்து, இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். அது போலத் தான் பங்குச் சந்தையிலும் நடந்து வருகிறது.
தூரத்தில் இருந்து சந்தையை பார்த்தவர்களெல்லாம் சந்தையில் முதலீடு செய்யவில்லையே என்று சந்தோஷப்படுகின்றனர். தற்போது, சந்தை சரிந்து இருப்பதை பார்த்தவுடன் இது நல்ல சந்தர்ப்பமா என தயக்கத்துடன் பார்க்கின்றனர். திங்களன்று ஏறிய ஏற்றமெல்லாம் கடந்த இரண்டு நாளில் காணாமல் போய்விட்டது. ஒவ்வொரு நாடும் சந்தைகளை நிலை நிறுத்த தன்னாலான முயற்சிகளை எல்லாம் செய்து வருகின்றன. அமெரிக்கா, ஐரோப்பா போல, சீன அரசும் திங்களன்று சலுகை அறிவிப்பை வெளியிட்டது. அது, ஆசிய அளவில் சந்தைகளை தூக்கி நிறுத்தியது.
அமெரிக்க நிலைமை இன்னும் சரியாகவில்லை என்றே தோன்றுகிறது. உலகின் நம்பர் 2 கம்பெனியான அமெரிக்காவின் சர்க்கியுட் சிட்டி, மஞ்சள் கடுதாசி கொடுத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிய சரிய ரிலையன்ஸ் நிறுவன பங்கின் விலையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. வருங்காலங்களில் எண்ணெய் தேவை குறையும் என்று வரும் ரிப்போர்ட்களை அடுத்து அந்த கம்பெனியின் ரிபைனிங் உற்பத்தி அளவு குறையலாம் என்ற எண்ணத்தில் தான். நேற்று முன்தினம் மட்டும் 7.3 சதவீதம் குறைந்து அந்த கம்பெனியின் பங்குகள் 1,207 ரூபாய் அளவிற்கு வந்தது. நேற்று முன்தினம் முடிவாக மும்பை பங்குச் சந்தை 696 புள்ளிகளை இழந்தது. மற்ற ஆசிய சந்தைகளில் அடி விழுந்தால், இந்திய சந்தைகளில் மரண அடி விழுகிறது. நேற்றைய துவக்கம் மந்த நிலையிலேயே இருந்தது.
ஆகஸ்ட் மாதத்தில் 1.4 சதவீதமாக இருந்தது, செப்டம்பரில் 4.8 சதவீதமாக கூடியிருந்தது. ஐந்து மாநிலங்களில் நடக்கவிருக்கும் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தற்போதே யூகங்கள் இருப்பதால் சந்தை மேலும், கீழுமாகவே இருந்தது. ரிலையன்ஸ் 4.89 சதவீதம் கீழே விழுந்து 1,148 ரூபாய் அளவிற்கு வந்துள்ளது. நேற்று வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை 303 புள்ளிகள் சரிவுடன் 9,536 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தை 90 புள்ளிகள் சரிந்து 2,848 என்ற நிலையிலும் முடிந்தது. சந்தை 10,000க்கு கீழே இருப்பது சென்டிமென்டாக ஒரு கவலையளிக்கக் கூடிய விஷயம் தான்.
கச்சா எண்ணெய் பகவான்: கச்சா எண்ணெய் பகவான் தான் ஒரு காலத்தில் (சில மாதங்களுக்கு முன் வரை) சந்தையை கீழே இழுத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார். தற்போது, பேரல் 60 டாலர் வரை குறைந்தும், சந்தை மேலே செல்லவில்லை.
சந்தைக்கு இன்று விடுமுறை: இன்று குருநானக் ஜெயந்தி விடுமுறை காரணமாக சந்தையில் வர்த்தகம் இல்லை. தெளிந்த நீரோட்டம் போல ஒரு சந்தை தேவை. அது தான் உடனடித் தேவை. ஆனால் அதற்கு இன்னும் பல காலாண்டுகள் காத்திருக்க வேண்டும் போல் தோன்றுகிறது. தீபாவளியன்று கிடைத்தது போல் சல்லிசாக பங்குகள் கிடைக்கும். அப்போது மீன் பிடிக்க வசதியாக இருக்கும்.
- சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்


No comments: